சாய்ந்தமருது நகர சபை

டாக்டர். எஸ். நஜிமுதீனின் பதிவு



சாய்ந்தமருதுக்கான உள்ளுராட் சி சபை தொடர்பாக எதுவும் எழுதுவதில்லை என்றே நினைத்திருந்தேன், எந்த சாக்கடை  வாய்க்குள்ளும் கம்பை நுழைத்து வம்பை விலைக்கு வாங்க வேண்டாமே என்ற ஓர் எச்சரிக்கை உணர்வுதான். இருந்தாலும் முகநூலில் வலம்வருகின்ற பலவிதமான கருத்துக் கந்தசாமிகளின் கொடுமை மிகு குறிப்புகளும் பின்னூட்டங்களும் எம்மையும் இதற்குள் இழுத்து விடுகின்றன. என்ன செய்வது நாமும் அந்த ஊரில் பிறந்து விட்டோமே.
சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபை நிச்சயமாக கல்முனை மாநகரத்தை ஆளநினைக்கின்ற ஒரு சமூகத்துக்கு அல்லது ஆண்டு வருகின்ற ஒரு சமூகத்துக்கு ஒரு பாரிய சவால்தான் என்பதனை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். இந்த நிலை வந்திருக்கக் கூடாது. ஆனால் வந்து விட்டது. இப்படி ஒரு நிலைமை ஏற்படலாம் என்பதனை எண்ணிப் பார்க்க மறந்த ஒரு சில குறுகிய பார்வை கொண்டவர்களினாலேயே இது ஏற்படுத்தப் பட்டது.
நான்காக பிரிக்கப்படாவிட்டால் கல்முனை மக்கள் தவியாய் தவிக்கும் நிலை ஏற்படுவதை தவிர்க்க முடியாது. பதினைந்தாயிரத்துக்கு மேற்பட்ட வாக்கு வங்கியை கொண்ட ஒரு ஊரின், அதுவும் தாம் சார்ந்த சமூகத்தின் வாக்குகளை இழப்பது என்பது மிகப் பெரிய நஷ்டம். அவர்கள் சாய்ந்தமருது மக்களை குறைத்து எடை போட்டு விட்டார்கள். taken as granted என்று சொல்வது போல், அவர்களிடம் அள்ளிக் கொடுக்கப் பட்ட பொக்கிஷமாக சாய்ந்தமருது 1977 தொடக்கம் மாறிப் போனது.
ஆனாலும் அந்தப் பொழுதுகளில் மிக மோசமான புறக்கணிப்புக்கு ஆளாகவில்லை. வைத்தியசாலை, வாசிகசாலை,பலநோக்கு கூட்டுறவு சங்கம்,விவசாய அபிவிருத்தி பெரும்பாக உத்தியோகத்தர் அலுவலகம் என்று இன்னும் பல விடயங்கள் தேவைகள் நிறைவேற்றப் பட்டன.
ஆனால் அரசியல் அதிகாரம், உரிமைக்காக போராடும் சமூக அரசியல் கடசியிடம் சென்ற பின்னர்,அதன் அதிகாரத்தில் இருந்தவர்கள், அவர்களின் பின்னால் இருந்தவர்கள் எல்லோரும் ஒரு மாற்றான் தாய் மனப்பான்மை யுடன் நடக்கத் தொடங்கிய போது தான் விடயம் விஸ்வரூபம் எடுத்தது.
இந்தப் பிரச்சினைகள் தொடங்கியது, எல்லைகள் மாற்றத்துக்கு உட்படுத்தப் பட்ட போது என்று சொன்னால் அது மிகையான கூற்றல்லகல்முனை பிரதேச சபையில் கொண்டு வரப்பட்ட தனி நபர் பிரேரணைகள் அதற்கு சாட்சி பகர்கின்றன. ஒருவர் கல்முனையின் தெற்கு எல்லையாக கன்னி வீதியை முன்மொழிந்தார்.இன்னுமொருவர் அதற்கு ஒருபடி மேல் போய், தான் திருமணம் முடித்து குடியிருக்கும் பகுதி சாய்ந்தமருதில் இருக்கக் கூடாதென எப்படியோ மல்லிகா அரிசி ஆலைவரை எல்லையை கொண்டு வந்து விட்டார்.
இது போதாதென்று 1995ம் ஆண்டு எந்த விதமான தயவு தாட்சண்யமுமின்றி வளர்ந்து விட்ட சாய்ந்தமருது வைத்தியசாலையை முழுவதுமாக புறக்கணித்து கல்முனைக்குடி வைத்தியசாலையை அவசர அவசரமாக தரமுயர்த்தி ஒரு மகப்பேற்று மருத்துவ மனையாகக் கூட இயங்காத வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தி, சாய்ந்தமருது வைத்தியசாலையை ஒன்றுமே இல்லாமல் ஆக்கினார்கள்.
அதன் காரணமாக எமது சமூகத்தின் வைத்தியசாலையாக அடையாளம் காணப்பட்டிருந்த கல்முனை வைத்தியசாலையை கைவிட்டார்கள். அதன் விளைவாக  எம்மவரின் நடமாட்டம் அற்றுப் போன கல்முனையில் சுற்றுவட்டத்துக்கு அப்பால் பட்ட வடக்குப் பகுதியில் இருந்த இந்த சமூகத்தினரின் அத்தனை சொத்துக்களையும் விற்று விட்டு வெளியேற வேண்டிய நிலைமைக்கு ஆளானார்கள்.
இப்போது வடக்கில் நகர முடியாத அளவு முட்டி நிற்கிறார்கள். கல்முனை நகரத்தில் இருக்கும் அவ்வளவு கடைகளையும் விட்டு விட்டால் கல்முனை நகரம் முழுவதுமாய் இவர்களின் கைகளில் இருந்து போய் விடும். இப்பொழுது கூட பிற்பகல் 6 அல்லது 7 மணியானால் நகரம் வெறிச்சோடி விடுவது ஒன்றும் இரகசியமான விடயமல்ல. ஒரு காலத்தில் எப்படி கலகலப்பாக இருந்த நகரம் அது என்பது எங்களுக்கு தெரியும்.
 அண்மைக்காலத்தில் கூட சட்டத்தரணி .நிசாம் காரியப்பர் அவர்கள் மேயர் ஆக இருந்த காலத்தில் அவரது கூஜா ஒருவர் ஆடிய ஆட்டம் எல்லோருக்கும் தெரியும்.ஊர் பெயர் சொல்லியே அவர் எல்லோரையும் மிரட்டிக் கொண்டிருந்தார்.
அவ்வளவு தூரம் போக தேவையில்லை. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை அமைக்கப்பட்டு அதற்கான பணிப்பாளராக என்னை நியமித்த போது,சாய்ந்தமருதை சேர்ந்தவன் என்ற ஒரே காரணத்துக்காக அந்தப் பதவியில் அமர விடாது தடுத்தது மட்டுமன்றி, ஊரைக் கூட்டி ஊர்வலம் நடத்தி சொந்த ஊரில் என்ன, சொந்த நாட்டிலேயே வாழ முடியாத ஒரு நிலைமையை ஏற்படுத்தினார்கள்.
எனது இடத்துக்கு நியமிக்கப்பட்ட நன்கு   படித்த வைத்தியர் பணிப்பாளர் நான் ..........................குடியான்,அறைந்தால் பல்லு பறக்கும்,சுட்டால் தலை பறக்கும்.இவைகள் அவருடைய அன்றாட வார்த்தைகள்.அவரது வகுப்பு மாணவனாகிய எனக்கே அவர் இந்த வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார் - சாட்சியங்களுடன். இவைகள்தான் மனிதர்களது சுய கௌரவங்களை பாதிக்கின்ற செயற்பாடுகள்.
இவற்றையெல்லாம் செய்து முடித்து பின் விளைவுகள் பற்றி யோசியாது அவ்வப்போது ஏற்படுகின்ற உணர்வுகளுக்கு ஏற்ப ஆடிவிட்டு இப்போது பிய்க்கிறது, பிடுங்குகிறது என்றால் என்ன செய்வது.
ஒவ்வொரு தாக்கத்துக்கு சமமும் எதிரானதுமான மறுதாக்கம் உண்டு. பேரலைகளுக்கு எங்கோ ஒரு மூலையில் ஏற்படும் சிறு சலசலப்பு போதுமானது.
ஒவ்வொருவரும் நினைக்கலாம் இவைகள் தானாக நடை பெறுகின்றன என்று. வாழ்க்கை ஒரு வட்டம். “தீதும் நன்றும் பிறர் தர வாராஇது எனக்கும் சேர்த்துத்தான்.

இங்கே எந்த விதத்திலும் இந்த மக்கள் பிரதேச வாதத்தினால் தூண்டப்பட்டு இந்த கோரிக்கையை முன்வைக்கவில்லை. பல விதமான அனுபவங்களின் பின்னர்.அடிபட்டு, மிதி பட்டு, இன்னும் அடிமையாக இருக்க முடியாது என்ற நிலையில் இந்த கோரிக்கையை முன்வைத்தார்கள். எனக்கு இதில் உடன்பாடு இல்லாவிட்டாலும் இந்த மக்களுக்கு வேறு வழியில்லை என்பதனால் ஒப்புக் கொள்ள வேண்டியுள்ளது.எதோ ஒரு வகையில் இந்த மக்களின் வரிப்பணம் அந்த மக்களின் தேவைகளுக்கு சென்றடையட்டும்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top