ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு ரஷ்யாவிலிருந்து

கிடைத்த புராதன வாள் தேசிய நூதனசாலைக்கு

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினினால் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்ட புராதன வாள் தேசிய மரபுரிமையாக்கப்பட்டு தேசிய நூதனசாலைக்கு ஒப்படைக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (02) முற்பகல் தேசிய நூதனசாலை கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
44 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை அரச தலைவர் ஒருவருக்கு ரஷ்யாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்துக்கான அழைப்புக்கமைய கடந்த மார்ச் மாதம் ரஷ்யாவில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்ட ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட உயர் வரவேற்பாக ரஷ்ய ஜனாதிபதியினால் இந்த புராதன வாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டது.
தொல்லியல் பெறுமதியுடன் கூடிய இந்த வாள் கண்டி யுகத்துக்கு உரியதாகும். 1906 ஆண்டில் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில் அங்கு நடைபெற்ற புராதன தொல்பொருள் ஏல விற்பனையில் ரஷ்யாவினால் அது கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வாள் மிகவும் அரிய வகை அரச ஆயுதம் என்பது மட்டுமல்லாமல் வரலாற்று ரீதியிலும் பெறுமதியுடைய அரிய வகை படைப்பாகும். ரஷ்ய கூட்டரசாங்கத்தின் குற்றவியல் சட்ட கோவையின் 243 ஆம் பிரிவில் உள்ளடங்கும் புராதன பெறுமதியுடைய பொருட்கள் மற்றும் பண்பாட்டு பெறுமதியுடன் கூடிய பொருட்களுக்கு சேதம் விளைவித்தல், அழித்தல் குற்றமாக கருதப்படுகிறது. அந்த புராதன பொருட்களை பாதுகாக்கும் பிரிவில் இந்த வாளும் உள்ளடங்கியது.
இந்த பெருமைமிகு பரிசை தேசிய உரிமையாக்கி, தேசிய நூதனசாலையில் வைப்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்னவிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதற்கான நன்றிக் கடிதம் மற்றும் நினைவுப் பரிசு தேசிய நூதனசாலை பணிப்பாளர் சனூஜா கஸ்தூரியாராச்சியினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய நூலக மற்றும் ஆவணமாக்கல் சேவை சபையின் தலைவர் கலாநிதி டபிள்யூ.. அபேசிங்க, உலகின் பிரபலமான தலைவரிடமிருந்து கிடைத்த இந்த பெருமைமிகு பரிசை தனது சொந்த பொருளாக எடுக்காமல் அதனை தேசிய மரபுரிமையாக மாற்றி, உரிய இடத்தில் வைக்க நடவடிக்கை எடுத்ததன் மூலம் அரச தலைவராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த நாட்டின் கலாச்சார மற்றும் தேசிய மரபுரிமைகள் தொடர்பில் கொண்டிருக்கும் சரியான மனப்பாங்கு சிறப்பாக வெளிப்படுவதாகவும் அது தொடர்பில் அவருக்கு முழு தேசத்தினதும் கௌரவம் கிடைக்க வேண்டும் என தெரிவித்தார்.
தேசிய நூதனசாலையை பார்வையிட்ட ஜனாதிபதி ஆயுத கூடத்தில் வைக்கப்பட்டிருந்த வாளையும் பார்வையிட்டார்.
அமைச்சர்களான எஸ்.பி.நாவின்ன, எஸ்.பி.திஸாநாயக்க, விஜேதாஸ ராஜபக்ஸ, கயந்த கருணாதிலக்க, அகில விராஜ் காரியவசம், பிரதி அமைச்சர்களான பாலித்த தெவரப்பெரும, கருணாரத்ன பரணவிதான ஆகியோரும் ரஷ்ய தூதுவர் உள்ளிட்ட உள்நாட்டு வெளிநாட்டு பிரமுகர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top