பாதுகாப்பு நலன்கருதி பார்வையாளர் நேரத்தில்
ஒரு கட்டுக்கோப்பான நிலையை கடைபிடித்துவருகிறோம்!
வைத்திய அத்தியட்சகர் .எல்.எப். ரஹ்மான் !!



கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எமது பிரதேசத்தில் நடைபெற்ற அசம்பாவித சம்பவங்களை தொடர்ந்து எமது வைத்தியசாலை ஊழியர்களும், வைத்தியர்களும் அச்சத்தில் இருந்தமையால் பாதுகாப்பு நலன்கருதி இலங்கை பாதுகாப்பு படையின் ஆலோசனையின் பேரில் வைத்தியசாலை பார்வையாளர் நேரத்தில் ஒரு கட்டுக்கோப்பான நிலையை கடைபிடித்துவருகிறோம் என  அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் .எல்.எப். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வைத்தியசாலை என்பது உயிருடன் நேரடியாக உறவுகொள்ளும் ஒரு இடம். தொற்றுநோய் பரவல் அதிகமாக இருக்கும் இடமென்பதால் இங்கு அதிகமான சுகாதார நடைமுறைகள் உள்ளது. எங்களுடைய வைத்தியசாலையின் தரமான மற்றும் துரிதமான சேவையை அறிந்து  நாட்டின் சகல பகுதிகளில்  இருந்தும் நோயாளர்கள் சிகிச்சைக்காக  வருகிறார்கள். அதனால் நாங்கள் எங்களுடைய வைத்தியசாலையை சிறந்த முறையில் அதற்க்கு தயாராக வைத்திருக்கிறோம்.

பொலித்தீன் பாவனை மற்றும் உணவுக்கழிவுகளால் வைத்தியசாலை பல சிக்கல்களை சந்திப்பதனால் நவீன சமையலறையை கொண்ட ஒரு உணவு தயாரிக்கும் நிலையத்தை நிறுவியுள்ளோம். சர்வதேச தரம் வாய்ந்த ஐந்து நட்சத்திர உணவகங்களின் உணவுகளை தயாரிப்பது போன்று போசணை நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை நாங்கள் தயாரித்து வழங்குகிறோம். இந்த உணவு சமைப்பது முதல் பங்கிடுவது வரை பல படிமுறைகளிலும் பல உத்தியோகத்தர்களினால் பரிசோதனை செய்யப்பட்டு நோயாளிகளுக்கு மட்டுமில்லாது அவர்களுடன் வைத்தியசாலையில் தங்கியிருக்கும் அவர்களின் உறவுகளுக்கும் வழங்கிவருகிறோம்.

அந்தந்த விடுதி தாதிய உத்தியோகத்தர்களினால் உணவுகள் வழங்கப்படுவதனால் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெரும் நோயாளிகளின் சுகாதாரம் போசணை என்பவற்றில் நாங்கள் கரிசனை செலுத்த முடிகிறது.

ஒவ்வொரு நோயாளிக்கும் அவர்களை பார்வையிட வரும் அவர்களின் உறவுகளுக்காக அனுமதி அட்டை (விசிட்டிங் பாஸ் ) வழங்கியுள்ளோம். அவர்கள் அதனை சரியாக பயன்படுத்தாமல் வாயில் கதவில் குவிந்து நிற்பத்தால் அவர்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் சிரமமே. அவர்கள் நேரம் வரும் வரை தங்கி காத்திருக்கவென வைத்தியசாலைக்கு வெளியே கதிரைகள் போடப்பட்டுள்ளது. அதைக்கூட அவர்கள் சரியாக பயன்படுத்துவதில்லை. வழங்கப்படும் அனுமதி அட்டை (விசிட்டிங் பாஸ்) முறையாக பயன்படுத்தினால் எல்லோரும் நோயாளிகளை பார்வையிட முடியும். இவ்வாறு அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் .எல்.எப். ரஹ்மான் தெரிவித்துள்ளார். 


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top