கல்முனை வடக்கு  ஆதார வைத்தியசாலை 
சுற்று சூழலை
வீடியோ எடுத்த நபர் கைது



கல்முனை ஆதார வைத்தியசாலையின் முகப்பு சுற்றுசூழலை காணொளியாக தொலைபேசியில் பதிந்து சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று காலை வைத்தியசாலையின் முகப்பிற்கு முன்னால் வந்திருந்த நபர் ஒருவர் தனது கையடக்க தொலைபேசி ஊடாக வைத்தியசாலையினை காணொளியாக (வீடியோ) பதிந்து கொண்டிருந்தார்.

இதனை அடுத்து அந்த நபரை வைத்தியசாலை பாதுகாப்பு ஊழியர்கள் அணுகி ஏன் வைத்தியசாலையை காணொளி எடுக்கின்றீர்கள் என கேட்டுள்ளனர்.

அதற்கு அந்நபர் சந்தேகத்திற்கிடமாக பதிலளித்தமையினால் வைத்தியசாலை நிர்வாகத்தின் கவனத்திற்கு பாதுகாப்பு ஊழியர்கள் எடுத்து சென்றனர்.

உடனடியாக கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய காணொளி எடுத்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறு அழைத்து செல்லப்பட்ட நபர் தான் ஒரு கட்டட ஒப்பந்தக்காரர் என முதலில் கூறியுள்ள போதிலும் தற்போது பொலிஸாரின் விசாரணையில் இருந்து அது பொய் என தெரிய வந்துள்ளது.

இவ்வாறு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நபர் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலைய எல்லையில் வதியும் 40 வயதுடைய முஹம்மட் இஸ்மாயில் முகம்மட் ராபீதீன் என்பவராவார்.

அவர் ஏற்கனவே குறித்த வைத்தியசாலையில் கட்டட ஒப்பந்த வேலைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் கட்டடம் நிர்மாணப்பணிகள் நிறைவடைந்த பின்னர் எஞ்சி இருந்த பொருட்களை நிறுவன முகாமையாளருக்கு அடையாளம் காட்டுவதற்காக காணொளியை பதிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பாக கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ஆர்.முரளீஸ்வரன் தெரிவித்திருப்பதாவது,

எமது வைத்தியசாலையின் கட்டங்கள் சுற்றுசூழலை காத்தான்குடியில் இருந்து வந்திருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்தது உண்மை. அவரை தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தற்போது பொலிஸார் வாக்குமூலம் எடுத்துள்ளனர்.

இந்நபர் எந்த நோக்கத்திற்காக காணொளி எடுத்தார் என்பது தெரியவில்லை. விசாரணை தற்போது தொடர்கின்றது. அந்த நபர் ஏற்கனவே தெரிவித்துள்ள படி கட்டட ஒப்பந்த காரராக எமது வைத்தியசாலையில் செயற்பட்டதை மறுக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த வைத்தியசாலையின் பெயருக்கு அவதூறு மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விரைவாக நடவடிக்கை மேற்கொள்வதாக கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ஆர்.முரளீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதாவது சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்தமை அடுத்து பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்கின்றார்கள். மூன்று நாள் அவகாசம் கேட்டுள்ளனர்.

இதனால் எமது வைத்தியசாலையில் ஊடகங்களில் வெளிவந்துள்ள தகவலின் அடிப்படையில் எவ்வித போராட்டமும் இடம்பெறாது. அம்பாறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சருடன் கலந்துரையாடியுள்ளேன்.

புதியவர் இப்பதவி நிலைக்கு வந்துள்ளதால் காலதாமதம் ஏற்பட்டது.இச்செயற்பாட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாக என்னிடம் தெரிவித்திருக்கின்றார். இதற்கு பொலிஸாரின் ஒத்துழைப்பு கிடைக்கும் என கூறி இருக்கின்றார்.

இச்செயலில் ஈடுபட்டவர்கள் 18 பேர் உள்ளடங்குகின்றனர்.இதில் மூவர் பிரதான சந்தேக நபர்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர். இதற்காக கால அவகாசம் பொலிஸார் கேட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

மேற்குறித்த சம்பவமானது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்ணொருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார், அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பார்க்க வைத்தியசாலைக்கு வந்த உறவினர், தாதியொருவரிடம் பிரசவம் குறித்து விசாரிக்க, “ஒரு சஹ்ரான் பிறந்திருக்கிறார்என தாதி கூறியுள்ளார் என்றும்.

இந்நிலையில் தாதியை அந்த நபர் அறைந்ததாகவும், தாதி தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் சமூக வலைத்தளம் மற்றும் சில இணைய ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்த விவகாரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top