கல்முனை ஆதார வைத்தியசாலையின்
முன்பக்கத்தை படம் பிடித்த நபர்
நியாயமான தன்மையை அவதானித்த நீதவான்
சந்தேக நபருக்கு பிணை வழங்கினார்!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் முகப்பைப் படம் பிடித்தார் என்று சந்தேகத்தின் பெயரில் கைதான காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

முஹம்மது இஸ்மாயில் முஹம்மது ராபிதீன் (வயது 40) நேற்று கைது செய்யப்பட்டு இன்று கல்முனை நீதவான் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

ஒரு வருடங்களுக்கு முன்னர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் தான் ஒரு நிர்மாணப் பணியொன்றைச் செய்ததாகவும் அப்பணியில் தவறிருப்பதாக மூன்றாம் தரப்பொன்றினால் செய்யப்பட்ட முறைப்பாட்டினைத் தொடர்ந்து அதனைப் பரீட்சிப்பதற்காக தன்னால் பூர்த்தி செய்யப்பட்ட பணியினை புகைப்படம் எடுத்ததாகவும் அதனை அவதானித்த சிலர் சந்தேகம் கொண்டு தன்னை தாக்க வந்ததாகவும் ராபிதீன் குறிப்பிட்டார்.

இவருக்காக இன்று கல்முனை நீதவான் நீதிமன்றில் குரல்கள் இயக்க, சட்டத்தரணிகளான இயாஸ்தீன் இத்ரீஸ்,சுஹால்ஸ் பிர்தௌஸ், இன்னும் சில சட்டத்தரணிகளும் மன்றில் ஆஜரானார்கள்.

இவர்கள் மன்றில் தோன்றி குறித்த சந்தேக நபர் தொடர்பான உண்மையான நிலமையை மன்றுக்கு எடுத்து இயம்பியதுடன் இந்த சந்தேக நபர் தொழில் நிமித்தமே புகைப்படம் எடுத்து இருந்தார் என்பது மாத்திரமல்லாது இலங்கையில் எங்கேயாவது படம் எடுப்பது பிழையாகக் கருதப்படாது என்பதையும் சட்டத்தரணிகள் விரிவாக விளக்கினர்.

இந்த வாதத்தில் உள்ள நியாயமான தன்மையை நீதிவானுக்கு குரல்கள் இயக்க சட்டத்தரணிகள் எடுத்து கூறி குறித்த சந்தேக நபருக்கு பிணை வேண்டி நின்றனர்.

இந்த வாதத்தில் உள்ள நியாயமான தன்மையை அவதானித்த நீதவான் குறித்த சந்தேக நபருக்கு பிணை வழங்கி தீர்ப்பளித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படும் பல குரலற்ற அப்பாவிகளுக்கு சட்ட உதவிகளை குரல்கள் இயக்கம் தொடர்ந்து வழங்கி வருகிறது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top