வன இலாகா அதிகாரிகள் பயிர்ச்செய்கைக்கு இடையூறு
அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் மக்கள் கோரிக்கை

அனுராதபுரம் - ஹொரவ்பொத்தான பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குளுமிவாக்கட பகுதியில் சேனைப் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு வன இலாகா அதிகாரிகள் இடையூறு ஏற்படுத்துவதாகவும், உடனடியாக இடையூறுகளை நிறுத்தி தருமாறும் பிரதேச மக்கள் அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஹொரவ்பொத்தான பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் இன்று பிரதேச செயலாளர் சுதர்சன திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றபோதே இக்கோரிக்கையினை பிரதேச மக்கள் முன்வைத்துள்ளனர்.

கடந்த காலங்களில் குளுமிவாக்கட மக்கள் சேனைப் பயிர்ச்செய்கையை வாழ்வாதார தொழிலாக செய்து வந்ததாகவும், தற்பொழுது வன இலாகா அதிகாரிகள் அரசுக்குச் சொந்தமான காணி எனவும் தெரிவித்து பயிர்ச்செய்கை மேற்கொள்ள வேண்டாமென தெரிவிப்பதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஹொரவ்பொத்தான பிரதேசத்தில் பெரும்பான்மை இனத்தவர்கள் வாழும் அனைத்து கிராமங்களிலும் பல ஏக்கர் காணிகளில் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தங்களுக்கு மாத்திரம் அரச காணி என குறிப்பிட்டு பயமுறுத்தி வருவதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.

25 வருடத்திற்கும் மேலாக நாங்கள் ஒரே இடத்தில் சேனைப் பயிர்ச்செய்கையை மேற்கொண்டு வந்ததாகவும் கமநல சேவைகள் திணைக்களத்திற்கு வரிப் பணம் செலுத்தி வந்ததாகவும், தற்பொழுது சேனைப் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு தடை ஏற்படுத்தி வருவதை அரசியல் அதிகாரிகளுக்கும் பிரதேச செயலாளருக்கும் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனாலும், அண்மைக்காலமாக தங்களுக்கு அதிகளவில் இடையூறுகளை விளைவித்து வருவதாகவும் உடனடியாக சேனைப் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு ஒரு நபருக்கு இரண்டு ஏக்கர் காணியையாவது பெற்றுத்தருமாறு பிரதேசமக்கள் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை, மக்கள் அபிவிருத்திக் குழுக் கூட்டம் முடிவடையும் வரை பிரதேச செயலகத்துக்கு முன்பாக கூடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top