தென்கிழக்கு பல்கலைக்கழக
மாணவ குழுக்களிடையே மோதல்!
சிகிச்சை பெற்ற மாணவர்கள்
வைத்தியசாலையை விட்டு வெளியேறினர்

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவ குழுக்களிடையே ஏற்பட்ட கைகலப்பில் காயமடைந்த ஏழு பேர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின்னர் வெளியேறியுள்ளனர்என அறிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு சிகிச்சை பெற்று வெளியேறிய மாணவர்கள் அனைவரும் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீட மாணவர்கள் எனவும் கடந்த 2 ஆம் திகதி செவ்வாய்கிழமை இரவு சுமார் ஒன்பது மணியளவில் குறித்த பீடத்தைச் சேர்ந்த இரண்டு மாணவ குழுக்களுக்கிடையில் யூனியனுக்குரிய நிருவாகத்தைத் தெரிவு செய்யும் தேர்தல் முடிவு தொடர்பாக எழுந்த பிரச்சினை ஒன்றை அடுத்தே கைகலப்பு ஏற்பட்டதாகவும் இதில் குறைந்த பட்சம் 7 மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இவ்வாண்டுக்குரிய மாணவ யூனியனுக்குரிய நிருவாகத்தைத் தெரிவு செய்யும் தேர்தல் நடைபெற்று அதற்கான முடிவுகளும் வெளியானது. தேர்தல் முடிவுகள் வெளிவந்ததன் பின்பு மேற்படி தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.


குறித்த கைகலப்பில் ஈடுபட்ட சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டவர்கள் இஸ்லாமிய பீட மாணவர்கள் என அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை பல்கலைக்கழக நிர்வாக தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

மாணவர் குழுக்களிடையே நடைபெற்ற அடாவடி சண்டையில் காயமடைந்ததாகக் கூறி அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களான .எல். அப்துல் ரஹ்மான், என்.எம். றஸ்லி, எம்.எல். ஆசிக்கான், எம்.என். ஹஸ்னி அஹமட், எம்.என்.எம். மாசின் ,எம்.எஸ். முனீஸ், எம்.எம்.எம். சுக்ரி, ஆகியோர் சிகிச்சையின் பின்னர் வெளியேறி சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் கொழும்பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களாவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழக நிருவாகத்தினருக்குத் தெரியாமலேயே மேற்படி மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி பெற்றுள்ளதாகவும் அறியக் கிடைக்கிறது.

எதிராளியை கைது செய்ய வைப்பதற்காகவும் தாங்கள் கைதாகுவதிலிருந்து தப்பிப்பதற்காகவும் அரசியல்வாதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது போன்று பல்கலைக்கழக மாணவர்களும் தொடங்கி விட்டார்களோ என்கிற சந்தேகமும் இந்த விடயத்தில் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அற்ப பதவிகளுக்காக எமது இஸ்லாமிய மாணவர்கள் வரிந்துகட்டிக் கொண்டும் அவர்களுக்கிடையில் தகாத வார்த்தைகளினால் வசைபாடிக் கொண்டும் வாக்கெடுப்பு வரைக்கும் சென்றதோடு இறுதியில் கைகலப்பில் ஈடுபட்டதானது மிகவும் வெட்கக்கேடான செயலாகும் என கல்வியலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.


எனவே கடந்த செவ்வாய்கிழமை இரவு அடாவடி சண்டையில் ஈடுபட்ட இஸ்லாமிய பீட மாணவர்கள் அனைவரையும் நிருவாகத்தினர் அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top