நாங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு
தீர்வு கிடைக்கும் வரை அமைச்சு பதவிகளை
பொறுப்பேற்க மாட்டோம்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
ரணிலுக்கு தலையிடியாக மாறும் முஸ்லிம் காங்கிரஸ்!
முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் காரசாரமான பல விவாதங்களுடனும், பலவாத பிரதிவாதங்களுடனும் நடைபெற்றுள்ளது.
முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று இந்த உயர்ப்பீட கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பிரதானமாக கல்முனை உப பிரதேச செயலக விவகாரம், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சு பொறுப்புக்களை ஏற்பது தொடர்பில் பிரதானமாக ஆராயப்பட்டுள்ளது.
கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் கடுமையாக சூடுபிடித்துள்ளதால் இதனை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் இந்த பிரச்சினை சம்பந்தமான கதையை ஆரம்பித்துள்ளார்.
இதன்போது, சகல உயர்பீட உறுப்பினர்களும் இந்த விடயத்தை யாருக்கும், எச்சந்தர்ப்பத்திலும் விட்டுக்கொடுக்க முடியாது எனவும் அரசுக்கு நிபந்தனைகளை விதித்து உடனடி தீர்வை பெற வேண்டும் எனவும் கூட்டாக குரல்கொடுத்துள்ளனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கையான அமைச்சு பதவிகளை மீளப் பொறுப்பெடுப்பது தொடர்பில் அங்கு வாத பிரதிவாதங்கள் கடுமையாக இருந்துள்ளது.
முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் எந்த முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சு பதவிகளை ஏற்கக் கூடாது.
முக்கியமாக கல்முனை பிரச்சினை அடங்கலாக இப்போது மிக முக்கிய பிரச்சினைகளாக மக்களுக்கு மாறியிருக்கும் பிரச்சினைகளை முடிக்காமல் யாரும் பதவிகளை ஏற்கக் கூடாது என முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான ஹரிஸூம், பைசால் காசிமும் இன்னும் பலரும் வலியுறுத்தி பேசியுள்ளனர்.
இதனை அரசுக்கு நிபந்தனையாக வைத்து கல்முனை பிரச்சினை ஓரிரு வாரங்களில் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும், சகல பிரதேசங்களிலும் தமிழ் கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றுகின்ற இந்த அரசு எமது தலைமைக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்குறுதியை வழங்கிவிட்டு மறுகணமே தமிழ் கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற சில முன்னாயத்தங்களை செய்திருந்தது.
இது முஸ்லிம் சமூகத்துக்கு அவமானமான செயல். இது முஸ்லிம்களின் முகத்தில் கரிபூசியதை போன்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் பேசியதை பெரும்பான்மை உறுப்பினர்களும் கட்சியின் தலைமைக்கு வலியுறுத்தி பேசியுள்ளனர்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கருத்து தெரிவிக்கையில்,
எதிர்வரும் காலத்தில் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை பிரதமர் எதிர்கொண்டுள்ள இச்சூழ்நிலையில் கல்முனை விவகாரம் சம்பந்தமாக பிரதமர், எனக்கு முன்னிலையில் முஸ்லிம் எம்.பிக்களிடம் தந்த வாக்குறுதியை குறிப்பாக கல்முனை கணக்காளர் விவகாரம் தொடர்பிலான உறுதிமொழியை மீறிவிட்டார்.
எந்த காரணத்தை கொண்டும் இழுத்தடிப்பு செய்ய முடியாது. இந்த விடயங்களுக்கு ஓரிரு நாளில் அரசுக்கு நிரந்தர தீர்வை தரவேண்டும். அரசு எந்த தீர்வையும் தராமல் யாரும் அமைச்சை பெறப்போவதில்லை என காட்டமாக பதிலளித்துள்ளார்.
கணக்காளர் விவகாரத்தில் பிரதமர் ரணில் வாக்குறுதியை மீறியதனால் அவரது தீர்மானத்தை அவர் வாபஸ் பெற வேண்டும்.
அதை அவர் செய்யாமல் விட்டால் நாங்கள் எதிர்க்கட்சி ஆசனங்களுக்கு சென்று அமரபோகும் செய்தியை நாளை முஸ்லிம் எம்.பிக்களுடன் சென்று அவரை அவசரமாக சந்தித்து கூறப்போவதாக சபைக்கு அறிவித்துள்ளார்.
இதேவேளை, சபை அதை ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த அதிரடி முடிவு அரசுக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஒரு அக்னி பரீட்சையாக இருக்கும் என முஸ்லிம் காங்கிரஸ் நம்புகிறது என நம்பத் தகுந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment