கல்விப் பொதுத் தராதர உயர்தர
 தனியார் பரீட்சார்த்திகள்
-  பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தை
பார்வையிட  அறிவுறுத்தல்



கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில்களுக்கான அனுமதி அட்டைகள் தற்போது தபாலில் சேர்க்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

அனுமதி அட்டைகளை விநியோகிப்பது தொடர்பாக தபால் மா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கல்வித் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எழுதும் தனியார் பரீட்சார்த்திகளுக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பிரவேசித்து தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்து அனுமதி அட்டையைப் பெற்றுக் கொள்ள முடியும். எனவும் இம்முறை பரீட்சை கடும் கண்காணிப்பின் கீழ் இடம்பெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒழுக்கவிதிகளை மீறும் பரீட்சார்த்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கடந்த வருடத்தில் பரீட்சை விதிமுறகைளை மீறிய உயர்தரப் பரீட்சார்த்திகள் 229 பேரின் பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டதுடன் பணியாளர் சபை அங்கத்தவர்கள் சிலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சை பணியாளர் சபை பயிற்றுவிப்பு பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பயிற்சிகள் மாவட்ட மட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும். இம்முறை பரீட்சைக்காக 15 ஆயிரம் பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதுடன்  இணைப்பு அதிகாரிகள் மூலம் கண்காணிப்புப் பணியாளர் சபையினருக்கு தெளிவுபடுத்தும் பணிகள் பரீட்சை ஆரம்பமாகும் தினத்திற்கு முன்னரே மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை அடுத்த மாதம் 5ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதில் 3 இலட்சத்து 30 ஆயிரத்து 704 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை அடுத்த மாதம் 4ம் திகதி இடம்பெறும். இதில் 3 இலட்சத்து 39 ஆயிரத்து 337 பரீட்சார்ததிகள் தோற்றுகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top