மரண தண்டனையை ஒழிக்க
சட்டம் கொண்டு வரும் தினத்தை
தேசிய துக்க தினமாக அறிவிப்பேன்
- மைத்திரி அதிரடி அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் மரண தண்டனை ஒழிக்கும் சட்டமூலத்தை கொண்டு வர தயாராகின்றனர் எனவும் அப்படியான சட்டம் கொண்டு வரப்படுமாயின், அந்த சட்டம் கொண்டு வரப்படும் தினத்தை தேசிய துக்க தினமாக அறிவிக்க போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
                                                                                                                        
வலவ வலய மகாவலி விவசாயிகளுக்கு காணி உறுதிகளை கையளிக்கும் நிகழ்வில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மரண தண்டனையை ஒழித்தால், இந்த நாட்டை நாகரீகம் நிறைந்த நாடாக மாற்ற முடியாது. மரண தண்டனை ஒழிப்பது நாட்டில் குற்றவாளிகள் பெற்ற அமோக வெற்றியாக அமையும்.

மரண தண்டனை ஒழித்தால், குற்றவாளிகள் நாட்டை ஆள முயற்சிப்பார்கள். நாட்டின் அரசியல்வாதிகளில் பாதாள உலகக்குழுக்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் இருக்கின்றனர். அனைத்து அரசாங்கங்களிலும் எதிர்க்கட்சியிலும் பாதாள உலகக்குழுவினர் இருந்தனர். தற்போது அரசியல்வாதிகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் இருக்கின்றனர்.

பெரிய பாதாள உலகக் குழு தலைவரை நாம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். வெளிநாட்டில் இருந்து கைது செய்து கொண்டு வந்துள்ளோம். இந்த பிரச்சினையில் யாரும் கை வைக்கவில்லை. உலக தலைவர்கள் போதைப் பொருள் தொடர்பான பிரச்சினையை கையில் எடுப்பதில்லை. ஒன்றில் கொலை செய்வார்கள் அல்லது அதிகாரத்தில் இருந்து கீழே இறக்கி விடுவார்கள் என்ற அச்சமே இதற்கு காரணம்.

யார் என்ன கூறினாலும் ஏப்ரல் 21 நடந்த குண்டு தாக்குதல் சர்வதேச பயங்கரவாதிகளுடன் சம்பந்தப்பட்டு செய்த வேலை என்று நான் கூறுகிறேன்.

நான் முன்னெடுத்த பணியை தடுத்து நிறுத்தி பின்னோக்கி கொண்டு சென்று என்னை அவமதிப்புக்கு உள்ளாக்க போதைப் பொருள் வியாபாரிகள் செய்த வேலை.

இது சம்பந்தமான பல்வேறு வாத விவாதங்கள் நடத்தப்படுகிறது. எனினும் நான் இந்த போராட்டத்தை நிறுத்த போவதில்லை. போதைப் பொருள் வியாபாரிகளுக்கு செய்ய வேண்டியதை செய்வேன். மரண தண்டனை வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் சமூகம் சிறக்கும்.

குறைந்தளவிலான நாடுகளே மரண தண்டனை அமுல்படுத்துவதில்லை. அருகில் உள்ள இந்தியாவில் மரண தண்டனை அமுல்படுத்தப்படுகிறது.சிங்கப்பூரில் மரண தண்டனை வழங்கப்படுகிறது. அமெரிக்காவில் சில மாநிலங்களை தவிர ஏனைய மாநிலங்களில் மரண தண்டனை அமுலில் உள்ளது.

அமெரிக்காவில் போதைப் பொருளை ஒழிக்க வேண்டுமாயின் முழு அமெரிக்காவிலும் மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் கூறியிருந்தார். ட்ரம்ப் அப்படி கூறும் போது, இலங்கையில் உள்ள அவரது பிரதிநிதி மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டாம் என்கிறார்.

மரண தண்டனை ஒழிக்கப்பட்டால், போதைப் பொருள் கடத்தல்காரர்கள், வியாபாரிகள், பாதாள உலகத்தினர், பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்துபவர்கள், சிறார்களை துஷ்பிரயோகம் செய்வோரிடம் நாட்டை கையளிப்பது போலாகிவிடும். இதனால், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மரண தண்டனை நாட்டுக்கு தேவை என்ற நிலைப்பாட்டை மக்கள் உருவாக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top