காத்தான்குடி பள்ளிவாசல் தாக்குதல்கள்:
29 வருடங்கள் ஆகியும் ஆறாத வடுக்கள்
தேசிய சுஹதாக்கள் தினத்தையொட்டி
சுதந்திர இலங்கையில் இழந்ததும் பெற்றுக்கொண்டதும்
நினைவுக் கருத்தரங்கு


மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பகுதியிலுள்ள பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது விடுதலைப்புலிகளினால் நடத்தப்பட்ட தாக்குதல் நாளை ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி 29வது ஆண்டாகி அது ஆறாத வடுக்களாக இருந்து கொண்டிருக்கின்றது.

தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது விடுதலைப்புலிகளினால் நடத்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதலில் துப்பாக்கிச் சூடுகளின் தாக்கம் இன்றும் பள்ளிவாசல் சுவர்களில் காணப்படுகிறது

கடந்த 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி இரவு பள்ளிவாசலில் இஷாத் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது முதலில் தாக்குதல் நடத்திய விடுதலைப்புலிகள் பின்னர் மஞ்சந்தொடுவாய் ஹுசைனியா பள்ளிவாசலில் அவ்வேளை காணப்பட்ட முஸ்லிம்கள் மீதும் தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

விடுதலைப்புலிகளினால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகளிலும் கைக்குண்டு தாக்குதல்களிலும் சிறுவர்கள், முதியவர்கள் உட்பட 103 முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். 140 பேர் வரை காயப்பட்டிருந்தார்கள்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தலைமையிலான அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் ஏற்பட்ட உடன்படிக்கையை அடுத்து 1989ம் ஆண்டு யுத்த நிறுத்தமொன்று முன்னெடுக்கப்பட்டது. பின்னர் 1990ம் ஆண்டு ஜுன் மாதம் நடுப்பகுதியில் அது முறிவடைந்தது.

இக்காலப்பகுதியில் விடுதலைப்புலிகளினால் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களும் இடம்பெற்று வந்த நிலையிலே தனி முஸ்லிம் பிரதேசமான காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

விடுதலைப்புலிகளின் இந்தத் தாக்குதலை நினைவுகூரும் வகையில், பள்ளிவாசல்களின் சுவர்களில் துப்பாக்கிச்சூடுகள் மற்றும் கைக்குண்டு தாக்குதல்களின் தடயங்கள் பள்ளிவாசல் நிர்வாகத்தினால் மாறாத வடுக்களாக தொடர்ந்தும் பேணப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தரும் உள்நாட்டு , வெளிநாட்டு அரசியல் தலைவர்கள், இராஜதந்திரிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் அதனை பார்வையிடுகின்றார்கள்.

29வருடங்களுக்கு முன்னதாக நடந்த இந்தச் சம்பவங்களை மன்னிக்க முடிந்தாலும் மறக்க முடியாதது என்பதற்காகவே அந்தத் தடயங்களை அழிக்காமல் பேணிப் பாதுகாப்பதாக காத்தான்குடி முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் ஆனாலும் கிழக்கு வாழ் முஸ்லிம்கள் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை மறக்க முடியாதவர்களாகவே உள்ளனர் .
நாளை காத்தான்குடியில் 29 ஆவது தேசிய சுஹதாக்கள் தினத்தையொட்டி “சுதந்திர இலங்கையில் இழந்ததும் பெற்றுக்கொண்டதும்“  என்ற தலைப்பில் நினைவுக் கருத்தரங்கு ஒன்று இடம்பெறவுள்ளது.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top