‘அரசியலுக்கு வராதீர்கள் என்று சொல்லும் தோழர்களை பெற்று இருப்பது பெருமை

ரசிகர்களுடனான பிறந்தநாள் விழாவில்
கமல்ஹாசன் பேச்சு

அரசியலுக்கு வராதீர்கள் என்று சொல்லும் தோழர்களை நான் பெற்று இருப்பது பெருமை அளிக்கிறது என்று ரசிகர்கள் மத்தியில் பிறந்தநாள் கொண்டாடிய கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தனது 60-வது பிறந்தநாளை ரசிகர்களுடன் நேற்று கொண்டாடினார். இதற்காக சென்னை காமராஜர் சாலையில் உள்ள அண்ணா கலையரங்கில் நேற்று மாலை பிறந்தநாள் நலஉதவி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகர் கமல்ஹாசனுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சியில் ஏழை, எளிய மக்களுக்கு தையல் இயந்திரம், மிக்சி, மின்விசிறி, மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வண்டில்களை வழங்கி, கமல்ஹாசன் பேசினார். அப்போது அவர் கூறியிருப்பதாவது:-
இதுபோன்ற விழாவை 30 ஆண்டுகளாக நாம் நடத்தி வருகிறோம். ஏழைகளுக்கு உதவிகள் வழங்கி வருகிறோம். இரத்ததானம் செய்கிறோம். இதை பார்த்து இவர் எதை நோக்கி செல்கிறார்? என்ற சந்தேக பார்வை நம்மை தொடர்ந்து தான் வருகிறது. ஆனால் நம் அதற்கு இடம் கொடுக்காமல் நற்பணியை மட்டும் நாம் செய்து வருகிறோம்.
மற்றவர்களை பார்த்து (எமது அரசியல்வாதிகள்) நாம் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. ஆனால் நம்மை பார்த்து அவர்கள் இரத்ததானம், கண்தானம் போன்றவற்றை செய்ய கற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.
என் துறையை சேர்ந்தவர்கள் கூட தங்களது ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றியிருக்கிறார்கள். இது நமக்கு பெருமை. இது போன்று நலஉதவிகள் செய்து வரும் நமக்கு ஓய்வு வந்து விட்டது என்று கருதக்கூடாது, இதுதான் நமக்கு ஆரம்பம்.
உங்களிடம் நான், அரசியல்வாதியாக ஆசைப்படுகிறேன் உதவி செய்யுங்கள் என்று கூறியிருந்தால் அதையும் தெரியாமல் செய்து இருப்பீர்கள். இன்று கேட்டால், ஏன் அண்ணேன் அரசியலுக்கு வரணுமா? என்று கேட்கும் தெளிவு உங்களுக்கு இருக்கிறது.
தயவு செய்து அரசியலுக்கு வராதீர்கள் என்று எனக்கு புத்தி சொல்லும் தோழராக வந்து நீங்கள் இருக்கிறீர்கள். இது எனக்கு பெருமை.
நான் ஒன்றை மட்டும் கூறிக்கொள்கிறேன். நற்பணி மன்றமாக மட்டும் தான் இந்த இயக்கம் இயங்க வேண்டும். எனக்கு பிறகும் இயங்க வேண்டும். உங்களுக்கு பின்னாலும் இயங்க வேண்டும். அதை நீங்கள் மனதில் வைத்து கொள்ளுங்கள்.
நான் சம்பாதித்ததை சினிமாவிலே போட்டு, கடைசியில் தானம் செய்ய ஏதாவது இருக்கிறது என்றால் எதுவும் இருக்காது. நம்முடைய உழைப்பில் செய்த உதவி வியர்வையில் நனைந்தவை. இதற்கு நான் கொடுத்தது குறைவு. நீங்கள் கொடுத்தது தான் அதிகம். நலஉதவிக்கு என் கலை பயன்படுகிறது என்றால், அது தான் எனக்கு சந்தோஷம். நான் எப்போதும் பெரியவன் என்று நினைத்தது கிடையாது. நல்ல கலைஞன் என்ற பெருமை எனக்கு இருக்கிறது. மிக நல்ல கலைஞனாக மாற்றியது, உங்கள் நற்பணி தான். இப்படியொரு நடிகர் இருந்தார் தனது ரசிகர்களை நற்பணிக்கு ஈடுபடுத்தினார் என்றால் அது தான் எனக்கு பெரிய சந்தோஷம்.
பெற்றால் தான் பிள்ளையாஇயக்கம் மூலம் 2 ஆயிரம் குழந்தைகளுக்கு நான் தகப்பன். அந்த குழந்தைகள் இன்றைக்கு வக்கீலுக்கு, டாக்டருக்கு படிப்பேன் என்கிறார்கள். இதை தான் பெருமையாக நினைக்கிறேன். அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ஆகவே நமக்கு கடமை நிறைய இருக்கிறது, எனவே இன்னும் கடந்து செல்ல வேண்டிய பாதை இருக்கிறது. டாக்டர், வக்கீல் நம் இயக்கத்தில் இருக்கிறார்கள்.
இலவச இருதய சிகிச்சை செய்த டாக்டர் ரகுபதி இங்கே இருக்கிறார். 30 ஆண்டுகளுக்கு மேலாக நம்முடன் இருக்கிறார். இந்த உதவிகள் கிடைக்காமல் போயிருந்தால் அந்த குழந்தைகள் இல்லாமலே போயிருப்பார்கள். இங்கே இந்த பேச்சை கேட்கும் அந்த குழந்தைக்கு, இந்த பேச்சு புரியாமல் இருக்கலாம், எதிர்காலத்தில் புரியும். நம்முடைய சேவை எண்ணம் தொற்று நோயை விட வேகமாக பரவ வேண்டும்.

என் பிறந்தநாளை பயன் உள்ள நாளாக மாற்றிய உங்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன். இவ்வாறு கமல்ஹாசன் பேசியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top