கிழக்கு மாகாண சபை 20ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

வரவு செலவுத் திட்டம்
புதிய முதலமைச்சரால் சமர்பிக்கப்படும் எனத் தெரிவிப்பு!!

இன்று 12 ஆம் திகதி  திங்கள்கிழமை ஆரம்பமான கிழக்கு மாகாண சபையின் புது வருட மாதாந்த சபை அமர்வு எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிர்வாகத்தின் கீழ் உள்ள கிழக்கு மாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையிலேயே சபை நடவடிக்கை இவ்வாறு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 9.30 மணியளவில் தவிசாளர் ஆரியபதி கலப்பதி தலைமையில் சபை கூடியபோது கோரமின்மையால் சபை அமர்வு முற்பகல் 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு- குறித்த நேரத்திற்கு சபை மீண்டும் கூடியது.
இதன்போது சமர்ப்பிக்கப்படவிருந்த வரவு செலவுத் திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு எதிர்க் கட்சித் தலைவர் தண்டாயுதபாணி கோரிக்கை விடுத்தார்.
அதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் .எம்.ஜெமீல் வழி மொழிந்ததுடன் குறித்த வரவு செலவுத் திட்டம் புதிய முதலமைச்சரால் சமர்பிக்கப்படும் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சபையை எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைப்பதாக தவிசாளர் அறிவித்துள்ளார்.
37 உறுப்பினர்களைக் கொண்ட கிழக்கு மாகாணசபையில் 2012 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில்ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 15 உறுப்பினர்களை வென்றிருந்தாலும் ஆட்சியமைக்க பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (7 உறுப்பினர்கள்) ஆதரவை பெற்று ஆட்சியை அமைத்துக் கொண்டது.    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பொது எதிரணியுடன் இணைந்துள்ள நிலையில் கிழக்கு மாகாணசபையின் ஆட்சியை எந்த நேரத்திலும் இழக்கும் நிலை சுதந்திரக் கூட்டமைப்புக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.  
கிழக்கு மாகாணசபையின் தற்போதைய நிலவரத்தின்படி, 22 உறுப்பினர்களை கொண்டிருந்த ஆளும் தரப்பில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 11 ஆக குறைந்துள்ள நிலையில் எதிரணி உறுப்பினர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.    கிழக்கு மாகாணசபைத் தேர்தலைத் தொடர்ந்து 11 உறுப்பினர்களை கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி (4 உறுப்பினர்கள்) ஆகிய கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சி அமைப்பற்கான முயற்சிகளை மேற்கொண்ருந்தாலும் இறுதி நேரத்தில் அது கை கூடவில்லை.    


தற்போது கிழக்கு மாகாணசபையில் ஆளுங்கட்சி பெரும்பான்மையை இழந்துள்ள நிலையில் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு11 உறுப்பினர்கள்   - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 07 உறுப்பினர்கள் இணைந்து ஆட்சியமைக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top