தேர்தல் தொடர்பாக உலமாக்களுக்கான
வழிகாட்டல்கள்


ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படவுள்ள நிலையில், தேர்தல் காலங்களில் முஸ்லிம் சமூகம் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்கங்கள் தொடர்பாக முஸ்லிம் சமூகத்துக்கு தெளிவுகளை வழங்குவது உலமாக்களது கடமையாகும். இது காலத்தின் தேவையுமாகும். எனவே, உலமாக்கள் தமக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களான குத்பாக்கள், விஷேட பயான்கள், கலந்துரையாடல்கள் என்பவற்றின் போது சமூகத்திற்கு பின்வரும் விடயங்களை உணர்த்துமாறு அன்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.
ஜனநாயக நாடொன்றில் பலதரப்பட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிடலாம். எவரும் தான் விரும்பும் வேட்பாளரை ஆதரிப்பது அவரது உரிமையாகும். நம்நாட்டு முஸ்லிம்கள் தமது வாக்குரிமையை பயனுள்ள முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதேநேரம் முஸ்லிம்கள் வாக்களிப்பதில் அசிரத்தையாக நடந்து கொள்ளக் கூடாது.
முஸ்லிம்கள் நாவால், உடல் உறுப்புக்களால் வெளியாகும் எந்தக் குற்றச் செயல்களிலும் சம்பந்தப்பட்டுவிடக்கூடாது. வீணான தர்க்கம், சண்டை சச்சரவுகள், வன்செயல்கள், வதந்திகளை பரப்புதல் என்பன முஃமினின் ஈமானையே பாதித்துவிடும்;.
மறுஉலக வாழ்வையும் நற்கூலியையும் எதிர்பார்த்து நிற்கும் தன் சகோதர முஸ்லிமின் உயிர், பொருள், மானம், மரியாதை என்பவற்றிற்கு உத்தரவாதமளிக்கும் வகையிலும் பிறமத சகோதரர்களுக்கு தீங்கு ஏற்படாத வகையிலும் நடந்து கொள்வது அவசியமாகும்.
முஸ்லிம்களாகிய நாம் ஆட்சியை கொடுப்பவனும் ஆட்சியை எடுப்பவனும் அல்லாஹ்வே என்ற நம்பிக்கை கொண்டவர்கள். எனவே முஸ்லிம்களுக்கு பாதகமற்ற நல்லாட்சி ஏற்பட அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் அதேவேளை அதிகமாக நல்லமல்களில் ஈடுபடுவதன் மூலமும் பாவங்களை விட்டு தூரமாவதன் மூலமும் அல்லாஹ்வுடனான தொடர்பை பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தேர்தல் முடிந்த பின்னர் நிதானமாக நடந்து கொள்வது கடமையாகும். முஸ்லிம் சமூகம் எப்போதும் ஒற்றுமையையும் சகவாழ்வையும் பேணும் வகையில் முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும்.
பள்ளிவாசல்களை தேர்தல் பிரச்சாரங்களுக்கோ அது சம்பந்தப்பட்ட விடயங்களுக்கோ பயன்படுத்துவதை தவிர்ந்து கொள்ள வேண்டும்.
ஏற்கனவே அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வெளியிட்ட தேர்தல் தொடர்பான அறிக்கையையும் அதில் உலமாக்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலருக்கும் கூறப்பட்டுள்ள வழிகாட்டல்களையும் கவனத்தில் கொண்டு சமூகத்திற்கு தெளிவுகளை வழங்க வேண்டும்.
மேற்கூறப்பட்ட அறிவுறுத்தல்களையும் வழிகாட்டல்களையும் பொதுமக்களுக்கு உணர்த்திஅவர்களை வழிநடாத்த வேண்டுமென உலமாக்களை, குறிப்பாக  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாக வேண்டிக் கொள்கின்றது.


எல்லாம் வல்ல அல்லாஹ் நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்தி நம்மனைவருக்கும் நல்லருள் புரிவானாக.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top