மியான்மர் தேர்தலில் ஆங் சாங் சூச்சியின்

என்எல்டி கட்சி வெற்றி

மியான்மர்  நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் ஆங் சாங் சூச்சியின் என்எல்டி கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
25 ஆண்டுகளுக்குப் பிறகு மியான்மரில் நேற்று (நவம்பர் 8) நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவை தனது தலைமையிலான அரசும், ராணுவமும் ஏற்றுக்கொள்ளும் என்று அந்நாட்டு ஜனாதிபதி  தெய்ன் செய்ன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று 9 ஆம் திகதி  காலை வாக்கு எண்ணிகை தொடங்கியது. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் இருந்தே ஆங் சாங் சூச்சியின் என்எல்டி கட்சி முன்னிலை பெற்று வந்தது. பிற்பகல் நிலவரப்படி, ஆங் சாங் சூச்சியின் என்எல்டி கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஆளும் கட்சியான ஐக்கிய சகோதரத்துவ மேம்பாட்டுக் கட்சி (யுஎஸ்டிபி) கட்சித் தலைவர் ஹதே , ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "நாங்கள் தோல்வியை தழுவிவிட்டோம். எனது சொந்த தொகுதியான ஹின்தாடாவிலும் தோல்வி ஏற்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. எனது சொந்த தொகுதி மக்களுக்காக நிறைய நலத்திட்டங்களை அமல்படுத்தியிருக்கிறேன். இருந்தும் மக்கள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் இதுவரை வந்த முடிவுகள் ஆங் சாங் சூகியின் என்எல்டி கட்சிக்கே சாதகமாக உள்ளன. எனவே, தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் இத்தகைய தோல்வியை சந்தித்தது ஏன் என்று இனிமேல்தான் ஆய்வு செய்வோம்" என்று தெரிவித்திருக்கிறார்.
664 உறுப்பினர்களைக் கொண்ட மியான்மர் நாடாளுமன்றத்தில் 25 சதவீதம் இராணுவத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில், ஜனநாயகத்துக்காக போராடி வருபவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆங் சாங் சூச்சியின் என்எல்டி கட்சி வெற்றி பெறும் என்ற கருத்துக்கணிப்புகள் கூறிவந்தன.
மியான்மரில் கடந்த 1962-ம் ஆண்டு முதல் இராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு 1990-ல் நடைபெற்ற தேர்தலில் என்எல்டி வெற்றி பெற்றது. ஆனால் தேர்தல் முடிவை  இராணுவம் ஏற்க மறுத்துவிட்டது.
எனினும், சர்வதேச நாடுகளின் வற்புறுத்தல் காரணமாக கடந்த 2010-ல் மீண்டும் தேர்தல் நடைபெற்றது. இதில் இராணுவ ஆதரவு பெற்ற கட்சியான யுஎஸ்டிபி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்தக் கட்சியின் தலைவராகவும் தெய்ன் செய்ன் பொறுப்பு வகித்தது குறிப்பிடத்தக்கது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top