பாரிஸ் தாக்குதல்

ஈபிள் டவர், லோவுர் அருங்காட்சியகம்,டிஸ்னிலேண்ட் மூடல்

129 பேர் பலி 350 பேர் பலத்த காயம்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை இரவு நடத்திய தாக்குதல்களில் 129 பேர் பலியாகினர். மேலும், 350 பேர் பலத்த காயமடைந்தனர்.
தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பாரிஸ் நகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஈபிள் டவர், லோவுர் அருங்காட்சியகம், டிஸ்னிலேண்ட் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பிரான்ஸில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாகவும், ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் கடந்த 2004ஆம் ஆண்டு ரயில்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்குப் பிறகு, ஐரோப்பா கண்டத்தில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாகவும், பாரீஸ் தாக்குதல் சம்பவம் கருதப்படுகிறது. இதனால் பிரான்ஸில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்த விவரம் வருமாறு: பாரீஸில் உள்ள தேசிய கால்பந்து மைதானம், அமெரிக்க இசைக்குழுவின் நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கு மற்றும் சிறிய ரக காபி விடுதிகள் (கஃபே) உள்ளிட்ட 6 இடங்களில் தீவிரவாதிகள் 8 பேர் வெள்ளிக்கிழமை இரவு திடீர் தாக்குதல் நடத்தினர்.
முதலில், பிரான்ஸ்-ஜெர்மன் நாடுகள் இடையே நட்புரீதியிலான போட்டி நடைபெற்ற மைதானத்தின் நுழைவு வாயிலில், தற்கொலைப்படை பயங்கரவாதிகள் 3 பேர் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர்.
இந்தத் தாக்குதல் நடந்த சில நிமிடங்களில், பாரீஸில் அமெரிக்க இசைக் குழுவின் நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கத்தின் வெளியே இருந்த காபி விடுதிகளைக் குறிவைத்து தீவிரவாதிகள் 4 பேர் துப்பாக்கிகளால் சுட்டனர்.
அதன் பின்னர், இசை நிகழ்ச்சி நடந்த அரங்கத்துக்குள் புகுந்து அங்கிருந்தவர்களையும் தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டனர். பின்னர், அந்த அரங்கத்தில் இருந்தவர்களை துப்பாக்கி முனையில் தீவிரவாதிகள் சிறைபிடித்துக் கொண்டனர்.
இதுகுறித்த தகவலின்பேரில், பிரான்ஸ் பொலிஸார் விரைந்து வந்து தீவிரவாதிகள் இருந்த அரங்கத்தை சுற்றிவளைத்தனர். பின்னர் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து பணயக் கைதிகளை விடுவிக்கும் முயற்சியாக, அரங்குக்குள் பாதுகாப்புப் படையினர் அதிரடியாக புகுந்தனர். இதைக் கண்டதும், தீவிரவாதிகள் 3 பேர் தங்களது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில் அந்த 3 தீவிரவாதிகளுடன் சேர்த்து, பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்தவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். அரங்கத்தினுள் இருந்த மற்றொரு தீவிரவாதியை பொலிஸார் சுட்டுக் கொன்றனர்.
இசை அரங்கின் அருகேயுள்ள போல்வார்ட் வால்டேர் எனுமிடத்தில் இன்னொரு தீவிரவாதியை பொலிஸார் சுற்றிவளைத்தனர். அப்போது, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை தீவிரவாதி வெடிக்கச் செய்தார்.
மேற்கண்ட தாக்குதல்களில், அப்பாவி மக்கள் உள்பட 129 பேர் பலியாகினர். 350 பேர் பலத்த காயமடைந்தனர். அமெரிக்க இசைக்குழுவின் நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கத்தில்தான் அதிகபட்சமாக 82 பேர் பலியாகினர். கால்பந்து மைதானத்தின் வெளியே நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல்களில் 3 பேர் இறந்துள்ளனர். காயமடைந்தோரில் 80 பேரின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளது.
கால்பந்துப் போட்டி நடைபெற்ற மைதானத்தின் நுழைவு வாயில் பகுதியில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, அந்த மைதானத்தினுள்தான் பிரான்ஸ் ஜனாதிபதி ஃபிரான்சுவா ஹொலாந்த் இருந்தார். தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து, மைதானத்தில் இருந்து அவர் உடனடியாக வெளியேற்றப்பட்டார். அவரைக் குறிவைத்து மைதானத்துக்கு தீவிரவாதிகள் வந்தனரா? எனத் தெரியவில்லை.
பாரீஸ் தாக்குதலுக்கு, ராக், சிரியா நாடுகளில் செயல்படும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு சனிக்கிழமை பொறுப் பேற்றுக் கொண்டது.
பிரான்ஸ் நாட்டுக்கு எதிரான படுகொலையை ஐ.எஸ். அமைப்பு மேற்கொண்டுள்ளது. இது போருக்கு சமம். இதற்காக ஐ.எஸ்.இயக்கத்திற்க்கு பிரான்ஸ் கருணையின்றி பதிலடி கொடுக்கும் என  பிரான்ஸ் அதிபர் ஃபிரான்சுவா ஹொலாந்த் தெரிவித்துள்ளார்.
பாரீஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடனும் ஹொலாந்த் அவசர ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு, பிரான்ஸ் முழுவதும் அவசர நிலையை பிரகடனம் செய்தார். இதைத் தொடர்ந்து, துருக்கியில் நடைபெற இருக்கும் ஜி-20 நாடுகளின் மாநாட்டுக்குச் செல்லும் பயணத்தை ஹொலாந்த் ரத்து செய்தார்.

பாரீஸில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் தெரியவில்லை. தீவிரவாதிகள் சடலங்களின் அருகே இருந்து சிரியா, எகிப்து நாடுகளின் கடவுச்சீட்டுகள் (பாஸ்போர்ட்) கைப்பற்றப்பட்டதாக பாரீஸ் நகர காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.















0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top