முஸ்லிம் அரசியல்வாதிகளின் கவனத்திற்கு

அரசியலில் பதவிகளைப் பெறுவதற்கு போராட்டம் நடத்துவது போன்று

சமூகத்திற்கு நிர்வாக ரீதியில் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கும்

குரல் கொடுக்க வேண்டும்.



எமது முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்று தனக்கு ஒரு அதிகரத்தைப் பெற்றுக் கொண்டு தன்னோடு இருந்தவர்களுக்கும் பதவிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு எத்தனிக்கிறார்களே தவிர சமுகத்தின் அடிப்படைப் பிரச்சினைகள் பற்றி சரியாகச் சிந்தித்து நடவடிக்கைகள் எடுப்பதாகத் தெரியவில்லை என சமூகத்திலுள்ள புத்திஜீவிகளால் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்கின்றோம் அவர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கின்றோம் எனக் கூறிக்கொண்டிருக்கும்  பிரதான முஸ்லிம் அரசியல் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன  தேர்தலில் குதித்து தமது கட்சிக்கு எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியிருக்கிறார்கள்? மாகாண சபையில் எத்தனை உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர் என்பதைக் கருத்தில் கொண்டு அந்த உறுப்பினர்களைக் காட்டி எப்படியான அதிகாரமிக்க அமைச்சரைப் தாம் பெற்றுக் கொள்ளலாம் எனச் சிந்திக்கின்றார்களே தவிர முஸ்லிம் சமூகத்திற்கான நிர்வாக ரீதியிலான பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து அதற்கான தீர்வுகளைக் காண்பதற்கு இதுவரையும் முயற்சிப்பதாக இல்லை என புத்திஜீவிகளால் குறை தெரிவிக்கப்படுகின்றது.
முஸ்லிம் சமூகம் அரசியல் ரீதியாக மாத்திரமல்லாமல் நிர்வாக ரீதியில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சிந்திக்க மறந்துவிடுகின்றார்கள். அல்லது நடவடிக்கை எடுக்கத் தவறிக்கொண்டிருக்கிறார்கள்  என்றே சமூகத்திலுள்ள புத்திஜீவிகள் மேலும் கவலை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கு பின்வரும் விடயங்களை கருத்தில் கொள்ளமுடியும் எனவும் புத்திஜீவிகளால் தெரிவிக்கப்படுகின்றது
கடந்த காலங்களில் உயர் நீதிமன்ற நீதியரசர்களில்  முஸ்லிம் ஒருவரும் நீதியரசராக நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது முஸ்லிம் நீதியரசர் எவரும் நியமிக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது ( கடைசியாக சலீம் மெளசூப் நீதியரசராக நியமிக்கப்பட்டிருந்தார்)
தற்போதய நல்லாட்சியில் நியமனம் செய்யப்பட்டிருக்கும் மாகாண ஆளுநர்களில் முஸ்லிம்கள் எவருமில்லை.
மாகாணங்களின் பிரதம செயலாளர்களாக முஸ்லிம்கள் எவமே நியமிக்கப்படவில்லை.
.நாட்டில் கடமையாற்றும் மாவட்டச் செயலாளர்களில் முஸ்லிம்கள் எவரும் நியமிக்கப்படுவதாகவே இல்லை.
இன விகிதாசாரப்படி பார்த்தாலும் முஸ்லிம் இனத்தவர்களில் குறைந்தது 2 பேராவது நாட்டில் எப்பகுதியிலாவது மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.
அதாவது 75 சதவீதம் வாழ்கின்ற சிங்களவர்களுக்கு 19 பேரும் 16 சதவீதம் வாழ்கின்ற தமிழர்களுக்கு 04பேரும் 9 சதவீதம் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு 02 பேரும் என்ற அடிப்படையில் நியமனம்வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் எவரும் மாவட்டச் செயலாளர்களாகநியமிக்கப்படுகின்றார்கள் இல்லை.  இதனை எமது அரசியல் தலைவர்கள் கணக்கில் எடுப்பதாகவும் இல்லை.
பின்வரும் தகவல்களைப் பார்த்தாவது எமது முஸ்லிம் தலைமைகள் நடவடிக்கை எடுப்பார்களா குறைந்ததுமுஸ்லிம்களாவது மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்படுவார்களா?
2015.10.01ஆம் திகதி அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள இலங்கைநிர்வாக சேவையில் விசேட தரத்தில் மூப்புரிமைப் பட்டியல் அடிப்படையில் பின்வரும் முஸ்லிம்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
மூப்புரிமை இலக்கம்                 பெயர்
09   எம்..எம் றபீக் ( முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆதரவு    எதுவுமின்றி அமைச்சின் செயலாளராக நியமனம்)
28                          எஸ்.எம்.முஹம்மத்
72                           .அப்துல் மஜீத்
125                              எம் .அமீர்
153                             யூ.எல்..அஸீஸ்
179                              எம்..தாஜுதீன்
182                               .மன்சூர்
185                               .எச்.எம்.அன்ஸார்
202                               ஜனாபா ஆர்.யூ.அப்துல் ஜலீல்
203                                .எம்.ஹனிபா
221                              .சி.எம்.நபீல்
272                                எம்.அப்துல் அல்லம்
275                                எம்.எச் முயுனுதீன்
278                                எம்.எம்.முஹம்மத்
310                                 .எல்.முஹம்மது சலீம்
எமது முஸ்லிம் தலைமைத்துவங்கள் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டு கொக்கரிக்கின்றனர். ஆனால், சமூகத்திற்கு உருப்படியாக எதுவும் செய்யப்படுவதாக இல்லை என புத்திஜீவிகளால் கவலை வெளியிடப்படுகின்றது.
தமிழ் சகோதரர்கள் சார்பில் அவர்கள் அமைச்சுப் பதவிகளைப் பெறாமலேயே எதுவித ஆர்ப்பாட்டமுமின்றி நிர்வாக ரீதியாக சரியாகவும் கச்சிதமாகவும் தமது தேவைகளை படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டு வருகின்றார்கள்.
பிரதம நீதியரசராக தமிழ் சகோதரர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
 மாகாண ஆளுநர் ஒருவர் தமிழ் பேசும் சகோதரர் நியமனமாகியிருக்கின்றார்.
வட மாகாண சபையின் பிரதம செயலாளராக கடமையாற்றிய ஒருவரை நீக்குமாறு கடந்த அரசாங்க காலத்தில்  கோரிய போதும் அது நிறைவேறாத நிலையில் இன்று அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது
(மூப்புரிமை இலக்கம் 268 ஆ.பதிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மொனராகலை மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்தவர்)
 வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் கூட  தமிழ் சகோதரர்கள் விரும்பியது போன்று படைத் தரப்பினர் அல்லாமல் சிறப்பாக நிர்வாக சேவையில் பதவி வகித்தவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதுமாத்திரமல்லாமல் 4 மாவட்டங்களில் 4 தமிழ் மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மூப்புரிமை இலக்கம்                 பெயர்  ( மாவட்டம் )

177                   என் வேதநாயகன்  (யாழ்ப்பாணம்)
223                    பீ.எஸ்.எம்.சார்ல்ஸ் (மட்டக்களப்பு)
239                     எஸ்.அருமைநாயகம் (கிளிநொச்சி) 
243                    ஆர்.கீதீஸ்வரன்  (முல்லைத்தீவு

இவைகளைக் கருத்தில் கொண்டு முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசியலில் பதவிகளைப் பெறுவதற்கு  போராட்டம் நடத்துவது போன்று சமூகத்திற்கு நிர்வாக ரீதியில் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கும் போராடுதல் வேண்டும் என சமுகத்திலுள்ள புத்திஜீவிகள் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்..


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top