இஸ்லாம் வினாத்தாளில்
நபியவர்களை அவமானப்படுத்தும் சொற்கள்

'நரி' மற்றும் 'நாய்' சொற்கள் பதிப்பு

வடமாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய வலயக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் நடைபெற்றுவரும் மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் எழுத்துப் பிழைகள் பல இருப்பதாக குறித்த இரு வலயங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களும், பெற்றோர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான இஸ்லாம் பாட வினாத்தாளில் முதலாவது வினாவில் இணைக்குக பகுதியில் ஐந்து கேள்விகளும், அதற்குப் பொருத்தமான விடைகளும் வினாத்தாளில் வழங்கப்பட்டிருந்தன. அதில் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக 'நபியவர்களின் நாய்' எனப் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
அதுமாத்திரமின்றி, மூன்றாம் ஆண்டுக்காக தயாரிக்கப்பட்ட இஸ்லாம் பாட வினாத்தாளில் சரியான விடையின் கீழ் கோடிடுக பகுதியில் கேட்கப்பட்ட மூன்றாவது கேள்வியில் நபி (ஸல்) அவர்களின் தாயாரின் பெயர் என்பதற்கு பதிலாக 'நரி (ஸல்) அவர்களின் தாயாரின் பெயர் என்ன' என அச்சிடப்பட்டுள்ளது.
பரீட்சைகளுக்காக தயாரிக்கப்படுகின்ற வினாத்தாள்கள் தயாரிக்கின்றவர்கள், அதனை கணினி மூலம் தட்டச்சு செய்பவர்கள், பின்னர் அதனை ஒப்பு நோக்குபவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள்;, எழுத்துப் பிழைகள் இருக்கின்றனவா அல்லது சொற் பிரயோகங்களில் ஏதும் பிரச்சினைகள் இருக்கின்றதா உள்ளிட்ட விடயங்களை கவனிப்பதுடன், பிழைகள் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, மன்னார் மற்றும் முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிப்பாளர்கள், வடமாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் இது விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top