தமிழ் மொழியில் தேசியகீதம் இசைக்கப்பட்டதன் சந்தோஷம் சீ.வி.விக்னேஷ்வரன்  நாக விகாரையில் வழிபாடு!

இவ்வாண்டு இலங்கையில் 68வது சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதை அடுத்து வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் யாழ்.ஆரியகுளம் நாக விகாரைக்கு சென்று சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டார்.
தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட சந்தோஷத்தை வெளிக்காட்டவே தாம் நாக விகாரையில் வழிபாடு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
நேற்று காலை 9 மணிக்கு ஆரியகுளம் நாக விகாரைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த முதலமைச்சர் சீ. வி. விக்னேஷ்வரன் விசேட வழிபாடுகளை மேற்கொண்டிருந்தார். வழிபாடுகள் நிறைவில் முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் சிங்கள மக்களுக்கு சமமாக அவர்களுக்கு கிடைக்கின்ற சகல உரிமைகளுடனும் தமிழ் மக்கள் வாழவேண்டும். என்பதற்காகவே தமிழர்கள் கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக போராடிக் கொண்டிருக்கிறோம். அந்தவகையில் சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் தமிழ் மொழியிலும் இசைக்கப்பட்டமை மிகுந்த சந்தோஷத்தை எமக்கு உண்டாக்கியிருக்கின்றது. அந்த சந்தோஷத்தை வெளிக்காட்டவே நான் நாக விகாரைக்கு வந்து கௌதம புத்தரை வழிபட்டிருக்கின்றேன்.
தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமை சிங்கள மக்களுக்கு சமமாக தமிழ் மக்களும் இந்த நாட்டில் வாழக்கூடிய சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கின்றது. என்பதற்கான சமிக்ஞையாகவே நாங்கள் பார்கிறோம். அந்தவகையில் எங்களுடைய நல்லெண்ண சமிக்ஞையினை காட்டும் ஒரு செயற்பாடாகவும் என்னுடைய நாக விகாரை வழிபாடுகள் அமைந்திருக்கும் என நான் நம்புகிறேன். நீண்ட நாட்களாக இங்கே வரவேண்டும் என நினைத்திருந்த போதும் அது சாத்தியப்பட்டிருக்கவில்லை. ஆனால் இன்றைய தினம் நான் கட்டாயம் வரவேண்டும். என நினைத்தபோது போதுமானளவில் நேரமும் அமைந்திருக்கின்றது. எனவே வந்து வழிபாடுகளை செய்திருக்கின்றேன். முக்கியமாக இந்த நாட்டில் சகல இனங்களுக்கும் நல்வாழ்வு உண்டாக வேண்டும். சகல இனங்களும் ஒற்றுமையுடனும், நல்லிணக்கத்துடனும் வாழவேண்டும் என்றே வழிபாடுகளை மேற்கொண்டிருக்கின்றேன்.
தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமையானது சிறிய விடயமாக இருக்கலாம். ஆனால் சாதாரண விடயமாக பார்க்க முடியாது. தமிழ் மக்கள் இவ்வாறான ஒரு சமத்துவ நிலைக்காகவே மிக நீண்டகாலம் சுமார் 60 வருடங்களுக்கும் மேலாக இந்த நாட்டில் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறான ஒரு சமத்துவ நிலை நிச்சயம் உண்டாகும். என்பதை காட்டுவதற்கான சமிக்ஞையாகவே இது அமைந்திருக்கின்றது. அந்தவகையில் இது சிறிய விடயமாக இருக்கலாம். ஆனால் சாதாரண விடயமாக இருக்காது. அந்தவகையில் நலிந்துபோயிருக்கும் எமக்கு இந்த விடயம் மிகுந்த நம்பிக்கை கொடுப்பதாக அமைந்திருக்கின்றது. மிகுந்த நம்பிக்கையுடன் நாங்கள் இருந்து கொண்டிருக்கின்றோம். என்பதே உன்மையாகும்.

இன்றையதினம் எமது தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனுடைய பிறந்த நாள் அந்த நாளில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், அவருக்காகவும் வழிபாடுகளை மேற்கொண்டிருக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்திருக்கின்றார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top