முஸ்லிம் காங்கிரஸிடம் முழு அதிகாரம் இருந்தும்

சாய்ந்தமருது தனி உள்ளூராட்சி மன்றம் இழுத்தடிப்பு ஏன்?

கேள்வி எழுப்பியிருக்கிறார் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர்



இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அனைத்து அதிகாரங்களையும் தம்வசம் வைத்துக் கொண்டிருக்கின்ற போதிலும் எமது சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை இன்னும் நிறைவேற்றித் தராமல் இருப்பது கவலையளிக்கிறது என சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மரைக்காயர் சபைத் தலைவர் வை.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.
இக்கட்சிக்காக 90 வீதம் வாக்களித்த இந்த ஊரை தொடர்ந்தும் ஏமாற்ற முனைய வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வெளி நோயாளர் பிரிவைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் என்.ஆரிப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன், கல்முனை மாநகர பிரதி முதல்வரும் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவருமான ஏ.எல்.ஏ.மஜீட், மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ.பஷீர் உள்ளிட்டோர் அதிதிகளாக பங்கேற்றிருந்தனர்.
இவர்கள் முன்னிலையில் அவர் மேலும் உரையாற்றுகையில் கூறியிருப்பதாவது;
“நீங்கள் முழு அரசியல் அதிகாரத்தினையும் கையில் வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். இருந்தும் எமது அடிப்படைத் தேவை இன்னும் நிறைவுக்கு வந்தபாடில்லை. கடந்த தேர்தல் காலங்களில் அளிக்கப்பட வாக்குறுதி இன்னமும் நிறைவெற்றித் தரப்படவில்லை. இந்த நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பிரதேச செயலகத்துக்கும் சமாந்தரமாக தனியான உள்ளூராட்சி மன்றம் காணப்படுகின்ற போதிலும் சாய்ந்தமருதுக்கு மட்டும்தான் அது இல்லாது இருக்கிறது. இது மிகப்பெரும் அநீதியாகும்
இதனை பெற்றுத் தருவதற்கு காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். சகல அதிகாரங்களையும் வைத்துக் கொண்டு இன்னும் இன்னும் ஏமாற்ற முனையக்கூடாது. இந்த மக்கள் கடந்த கால தேர்தல்கள் அனைத்திலும் 90 வீதம் முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களித்து வந்திருக்கிறார்கள். இருந்தபோதும் நாங்கள் எமது இந்த தேவையை அழுது புலம்பிக் கேட்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது.
நாங்கள் இந்த விடயத்தை மிகவும் அமைதியாக கையாள நினைக்கிறோம். மக்களை வீதிக்கு இறக்கி போராட்டம் நடத்துவது என்பது எமக்கு மிகவும் சின்ன விடயமாகும். அப்படியான நிலைமை வராமல் பாதுகாத்து கொள்ள வேண்டியது இங்கு இருப்பவர்களின் கடமையாகும்.
அதேபோன்று சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையை தள வைத்தியசாலையாக தரமுயர்த்தும் விடயமும் காலத்திற்கு காலம் வாக்குறுதியளிக்கப்பட்டே வருகிறது. இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பலம் பொருந்திய கட்சியாக திகழ்கிறது.
கல்முனை தொகுதியானது ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மட்டுமல்லாமல் அவர் பிரதி அமைச்சராகவும் இருக்கிறார். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மிகப்பெரும் சக்திவாய்ந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக உள்ளார். அத்துடன் சுகாதார பிரதி அமைச்சராக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் பதவி வகிக்கிறார். மறுபுறம் இந்த வைத்தியசாலை மாகாண அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாகாண சுகாதார அமைச்சராக முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதியே இருக்கிறார். இத்தனைக்கும் மேலாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி கூட முஸ்லிம் காங்கிரஸ் வசம் இருக்கிறது.
அவ்வாறாயின் உங்களுக்கு வாக்களித்த எமது மக்களின் தேவைகளை நிறைவேற்றித் தருவதற்கு இன்னும் என்ன அதிகாரம் தேவைப்படுகிறது.
ஆகையினால் தொடர்ந்தும் வாக்குறுதிகளைத் தந்துகொண்டு அடுத்த தேர்தல் வரை காலத்தை இழுத்தடித்துக் கொண்டு செல்லாமல் இந்த ஊர் விடயத்தில் கரிசனை செலுத்துங்கள் என மிகவும் மன்றாட்டமாக வேண்டுகோள் விடுக்கிறேன்” இவ்வாறு சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மரைக்காயர் சபைத் தலைவர் வை.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top