முஸ்லிம் அரசியல்வாதிகளே!
இது உங்களின் கவனத்திற்கு!!



எமது முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்று தங்களுக்கு அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கு எத்தனிக்கிறார்களே தவிர சமுகத்தின் அடிப்படைப் பிரச்சினைகள் பற்றி சரியாகச் சிந்தித்து நடவடிக்கைகள் எடுப்பதாகத் தெரியவில்லை. என சமூக நலனில் அக்கறையுள்ளவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.
குறிப்பாக முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்கின்றோம் அவர்களுக்காகக் குரல் கொடுக்கின்றோம் எனக் கூறிக்கொண்டிருக்கும்  பிரதான அரசியல் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன  தேர்தலில் குதித்து தமது கட்சிக்கு எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியிருக்கிறார்கள்? மாகாண சபையில் எத்தனை உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர் என்பதைக் கருத்தில் கொண்டு அந்த உறுப்பினர்களைக் காட்டி எப்படியான அதிகாரமிக்க அமைச்சரைப் தாம் பெற்றுக் கொள்ளலாம் எனச் சிந்திக்கின்றார்களே தவிர முஸ்லிம் சமூகத்திற்கான நிர்வாக ரீதியிலான பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து அதற்கான தீர்வுகளைக் காண்பதற்கு முயற்சிப்பதாக இல்லை என்று முஸ்லிம் அரசியல்வாதிகளை நோக்கி குறை தெரிவிக்கப்படுகின்றது.
இந்நாட்டில் முஸ்லிம் சமூகம் நிர்வாக ரீதியில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சிந்திக்க மறந்துவிடுகின்றார்கள் என சமூகத்திலுள்ள புத்திஜீவிகள் கவலை வெளியிடுகின்றனர்.
நாட்டில் கடமையாற்றும் மாவட்டச் செயலாளர்களில் முஸ்லிம்கள் எவரும் நியமிக்கப்படுவதாக இல்லை.
இன விகிதாசாரப்படி பார்த்தாலும் முஸ்லிம் இனத்தவர்களில் குறைந்தது 2 பேராவது நாட்டில் எப்பகுதியிலாவது மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் எவரும் மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்படுகின்றார்கள் இல்லை. இதனை எமது அரசியல் தலைவர்கள் கணக்கில் எடுப்பதாகவும் இல்லை. அரசாங்க அதிபர் பதவிகள் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படுவதாக இருந்திருக்குமேயானால் கட்சிகளால் மக்கள் போராட்டம் முன்னெடுக்க வைக்கப்பட்டு தங்களுக்குள் அப்பதவிகளை எடுத்துக்கொண்டிருப்பார்கள். என நடுநிலையானவர்கள் விகடமாகக் கூறுகின்றனர்.
பின்வரும் தகவல்களைப் பார்த்தாவது எமது முஸ்லிம் தலைமைகள் நடவடிக்கை எடுப்பார்களா? குறைந்தது 2 முஸ்லிம்களாவது மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்படுவார்களா?.
2015.12.31ஆம் திகதி அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள இலங்கை நிர்வாக சேவையில் விசேட தரத்தில் மூப்புரிமைப் பட்டியல் அடிப்படையில் பின்வரும் முஸ்லிம்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

மூப்புரிமை இலக்கம்                 பெயர்
9                               எம்.ஐ.எம் றபீக்
29                              எஸ்.எம்.முஹம்மத்
73                              ஏ.அப்துல் மஜீத்
98                              எம்.எச்.முயுனுதீன்
127                             எம் ஐ.அமீர்
155                             யூ.எல்.ஏ.அஸீஸ்
180                             எம்.ஏ.தாஜுதீன்
183                             ஏ.மன்சூர்
186                             ஏ.எச்.எம்.அன்ஸார்
203                             ஆர்.யூ.அப்துல் ஜலீல்
204                             ஐ.எம்.ஹனிபா
222                              ஏ.சி.எம்.நபீல்
274                              எம்.அப்துல் அல்லம்
279                              எம்.எம்.முஹம்மத்
311                               ஏ.எல்.முஹம்மது சலீம்
349                               வை.எல்.முஹம்மது நபவி
356                               எம்.எம்.நயிமுதீன்
360                               எம்.முஹம்மது நவ்பல்
தமிழ் சகோதரர்கள் சார்பில் அவர்கள் அமைச்சுப் பதவிகளைப் பெறாமலேயே எதுவித ஆர்ப்பாட்டமுமின்றி நிர்வாக ரீதியாக சரியாகவும் கச்சிதமாகவும் தமது தேவைகளை படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டு வருகின்றார்கள்.
மாகாண ஆளுநர் ஒருவர் தமிழ் பேசும் சகோதரர் நியமனமாகியிருக்கின்றார். வட மாகாண சபையின் பிரதம செயலாளராக கடமையாற்றிய ஒருவரை நீக்குமாறு கடந்த அரசாங்க காலத்தில்  கோரிய போதும் அது நிறைவேறாத நிலையில் இன்று அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது (மூப்புரிமை இலக்கம் 270 ஆ.பதிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மொனராகலை மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்தவர்)
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் கூட  தமிழ் சகோதரர்கள் விரும்பியது போன்று படைத் தரப்பினர் அல்லாமல் சிறப்பாக நிர்வாக சேவையில் பதவி வகித்தவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதுமாத்திரமல்லாமல் 4 மாவட்டங்களில் 4 தமிழ் மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மூப்புரிமை இலக்கம்                 பெயர்  ( மாவட்டம் )
178                   என் வேதநாயகன்   (யாழ்ப்பாணம்)
224                   பீ.எஸ்.எம்.சார்ல்ஸ் (மட்டக்களப்பு)
240                   எஸ்.அருமைநாயகம் (கிளிநொச்சி)
244                   ஆர்.கீதீஸ்வரன்    (முல்லைத்தீவு)

இவைகளைக் கருத்தில் கொண்டு முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசியலில் பதவிகளைப் பெறுவதற்கு  போராட்டம் நடத்துவது போன்று சமூகத்திற்கு நிர்வாக ரீதியில் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கும் போராடுதல் வேண்டும்.

  - மக்கள் விருப்பம்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top