மனது வைத்தால் மாற்றம் சாத்தியமே!


பேராசிரியை ஜாகீதா பேகம்

“என் சொந்த ஊர் புதுக்கோட்டை. அப்பா அப்துல் ஹக், வியாபாரம் செய்துவந்தார். நான் தாத்தாவோட பராமரிப்பில் வளர்ந்தேன். தாத்தா புதுக்கோட்டை ராஜாவுக்கு உருது ஆசிரியராக இருந்தவர். அவரைப்போல் ஆசிரியராவதுதான் என் லட்சியமாக இருந்தது. பள்ளி இறுதி வகுப்பு வரை புதுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் மொழியில் படித்தேன். அப்போதைய சூழலில் முஸ்லிம் குடும்பங்களில் பெண்கள் மேல்படிப்பு படிப்பது அரிது. அதனால் கல்லூரியோடு என் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதுஎன தன்னைப்பற்றி சொல்கிறார் பேராசிரியை ஜாகீதா பேகம்
“முழுமையான ஈடுபாடு இருந்தால் எந்தத் துறையிலும் சாதிக்கலாம். அந்த ஈடுபாடுதான் குடும்பத் தலைவியாக இருந்த என்னை இன்று கல்வி ஆராய்ச்சிக்காக உலகம் முழுவதும் பயணப்படவைத்திருக்கிறது என்றும் சொல்கிறார் பேராசிரியை ஜாகீதா பேகம். இவர் திண்டுக்கல் காந்தி கிராம பல்லைக்கழக கல்வியியல் துறையின் தலைவர். பல்கலைக்கழக கல்வியியல் துறைகளில் பாடத்திட்டக் குழு உறுப்பினராகவும் செயல்பட்டுவருகிறார்.
விகிதாச்சார அளவில் முன்பிருந்ததைவிட இப்போது பெண்களுக்கான கல்வி வாய்ப்புகள் அதிகம் என்றாலும் கல்வி என்பது இன்னும் பல பெண்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது. கிராமங்களிலும் சிறுபான்மை சமூகங்களிலும் மட்டுமல்ல, பெரும்பான்மை சமூகங்களிலும் பலர் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் தங்கள் பெண் குழந்தைகளைப் படிக்க அனுப்புவதில்லை. இப்படியொரு சூழலில் ஜாகீதா பேகத்தின் வெற்றி, கொண்டாடப்பட வேண்டியது.
பெரும்பாலான பெண்களைப் போலத்தான் இவரது வாழ்க்கையும். பள்ளிப் பருவத்தில் முளைவிட்ட ஆசிரியர் கனவை, குடும்பச் சூழல் காரணமாக மனதுக்குள் புதைத்துக் கொண்டார். திருமணம் முடிந்து குழந்தைகளையும் கணவரையும் மட்டுமே உலகமாக நினைத்தார். ஆனால் திருமணத்துக்குப் பிறகு தன் லட்சியத் தேடலுக்கான சின்னதொரு கொழுகொம்பு கிடைத்ததும் அதைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டதில் தொடங்கியது ஜாகீதா பேகத்தின் வெற்றி.
என் சொந்த ஊர் புதுக்கோட்டை. அப்பா அப்துல் ஹக், வியாபாரம் செய்துவந்தார். நான் தாத்தாவோட பராமரிப்பில் வளர்ந்தேன். தாத்தா புதுக்கோட்டை ராஜாவுக்கு உருது ஆசிரியராக இருந்தவர். அவரைப்போல் ஆசிரியராவதுதான் என் லட்சியமாக இருந்தது. பள்ளி இறுதி வகுப்பு வரை புதுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் மொழியில் படித்தேன். அப்போதைய சூழலில் முஸ்லிம் குடும்பங்களில் பெண்கள் மேல்படிப்பு படிப்பது அரிது. அதனால் கல்லூரியோடு என் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்று சொல்லும் ஜாகீதா பேகம், கல்வியில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை மட்டும் கைவிடவில்லை. மதுரை காமராஜர் பல்லைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் முதுகலை படித்தார். வீட்டில் திருமணம் செய்து வைத்ததால் படிப்பைத் தொடர முடியவில்லை.
கணவர் அப்துல் அஜீஸ், இவரது ஆசிரியர் கனவுக்கு நீர் வார்த்தார். அவர் கொடுத்த உற்சாகத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கிலம் படித்தார். இந்தப் படிப்பை முடித்த கையோடு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எட். மற்றும் எம்.எட்., இந்தியில் பிரவீன் ஆகியவற்றை முடித்தார் ஜாகீதா பேகம். மண்டபம் பகுதியில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தற்காலிக இந்தி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். பத்தாம் வகுப்பு மாணவர்களை 100 சதவீதம் தேர்ச்சி அடையச் செய்து மத்திய அரசு பள்ளியின் தலைமையிடத்தின் பாராட்டையும் பெற்றார்.
இதே கேந்திர வித்யாலயா பள்ளியில் நிரந்தர பணி ஆசிரியராகணும் என்று சபதம் ஏற்றேன். அதற்கான தேர்வு எழுதி, நினைத்ததுபோல் கேந்திர வித்யாலயா பள்ளியில் நிரந்தர ஆசிரியர் பணியையும் பெற்றேன். தொடர்ந்து எட்டு ஆண்டுகள் காரைக்குடி, திருச்சி, உள்ளிட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரிந்தேன் என்று தன் ஆசிரியர் கனவு நிறைவேறியதைப் பெருமிதத்துடன் பகிர்ந்துகொள்கிறார் ஜாகீதா பேகம்.
கல்லூரிப் பேராசிரியராக வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து படித்தார். பெரியார் பலகலைக்கழகத்தில் நடந்த தேர்வில் பங்கேற்று முதலிடம் பிடித்து, பேராசிரியாகப் பணியாற்றினார்.
நம் கல்வி முறையை எப்படி மேம்படுத்தலாம், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எளிமையாக எப்படிப் பயிற்றுவிக்க முடியும் என்று ஆராய்ச்சி செய்வதற்காக வெளிநாடுகளுக்குச் சென்று அந்த நாடுகளின் கல்வி முறைகளோடு ஒப்பிட்டு ஆய்வு செய்துள்ளார் இவர்.
அறிவு சார் அறிவியல் கல்வி, ஆசிரியர் கற்பித்தல் திறன்கள், ஆசிரியர் கல்வியில் மேம்பாடு ஆகியவை குறித்து இதுவரை தேசிய அளவில் நூறு ஆய்வுக் கட்டுரைகள், சர்வதேச அளவில் இருபது ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்திருக்கிறார். கல்வித் துறையில் இவரது பணிகளுக்காக பத்துக்கும் மேற்பட்ட பல்வேறு மாநிலங்களின் விருதுகளைப் பெற்றுள்ளார். இது தவிர இந்தியாவின் சிறந்த பேராசிரியர்களை உருவாக்கும் எம்.பில்., பி.எச்டி. மாணவர்களின் வழிகாட்டியாகவும் இருக்கிறார்.
ஆசிரியர்கள் பாடங்களை சரிவரப் புரிந்துகொண்டால்தான் மாணவர்களுக்கு ஒழுங்காக சொல்லித்தர முடியும். நமது நாட்டில் மதிப்பெண் வாங்குவதை மட்டுமே விரும்பும் கல்வியாக இருக்கிறது. மதிப்பெண் அடிப்படையில் இல்லாமல் வெளிநாடுகளைப் போல் அறிவுசார் அறிவியலுடன் கூடிய பயிற்சி கல்வியாக இருக்க வேண்டும். கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு அறிவுசார் அறிவியல் மூலம் எளிதாகக் கற்றுத்தர முடியும். தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மனது வைத்தால் மட்டுமே கல்வியில் பெரும் மாற்றத்தை கொண்டுவர முடியும். அதனால் கல்விக்கான மாற்றம் தொடக்கப்பள்ளியில் இருந்து தொடங்க வேண்டும் என்கிறார். பேராசிரியை ஜாகீதா பேகம்

-    ஒய். ஆண்டனி செல்வராஜ்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top