உண்மையான ஒழுக்க பண்பாடும் அறிவுபூர்வமானதும் சமத்துவமானதுமான

சேவையை வழங்க எம்மை நாம் அர்ப்பணிப்போம்!

ஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி



இன்றைய தினம் எமது 68ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நாம் தேசத்தின் சுதந்திரம், இறைமை மற்றும் ஆள்புல எல்லையைப் பாதுகாப்பதிலும் தேசிய நல்லிணக்கம் மற்றும் எமது மக்களின் பொருளாதார, அரசியல் உரிமைகளைப் பலப்படுத்துவதிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்றங்களையிட்டு நாம் பெருமைப்படுகின்றோம்.
ஒரு வருடத்திற்கு முன்னர் மக்கள் வழங்கிய ஆணைக்கு ஏற்ப ஒரு நிலையான நல்லாட்சிக் கட்டமைப்பை ஸ்தாபிப்பதற்காக ஜனநாயகம், நல்லாட்சி, சட்ட ஆட்சி மற்றும் ஒரு அர்த்தமிக்க பாராளுமன்ற முறைமையினை ஏற்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் இந்த சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றோம் என்ற வகையில் இந்த நிகழ்வு விசேட முக்கியத்துவத்தை பெறுகின்றது. எமது எல்லா மக்களும் பாதுகாப்பாக வாழ்வதற்கான ஒரு சமூக, அரசியல் சூழலை உருவாக்கும் இப்பாதையில் தொடர்ந்தும் பயணிக்க நாம் உறுதியோடு உள்ளோம்.
இந்த அடைவுகளைத் தொடர்ந்து நாம் புதிய அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்துள்ளோம். கடந்த காலத்தின் பலமான சமூக, கலாசார மரபுரிமைகளை ஆர்வத்துடன் பாதுகாத்து எதிர்கால வெற்றிகளை நோக்கி முன்னேறும் அதேநேரம் சுதேச அறிவையும் திறன்களையும் அபிவிருத்தி செய்வதிலேயே எமது சுதந்திரத்தின் பலம் பெரிதும் தங்கியுள்ளது என்பது எமது நம்பிக்கையாகும்.
இன்றைய தினம் சுதந்திரத்தின் அடைவுகளைக் கொண்டாடும் நாம் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் எமது இறைமையையும் ஆள்புல எல்லையையும் பாதுகாப்பதற்காக மிகப்பெரும் தியாகங்களைச் செய்த எமது பாதுகாப்புப் படையினருக்கு கௌரவத்தையும் மரியாதையையும் செலுத்துவது எமது கடப்பாடாகும்.
நீதி மற்றும் மானிடத்திற்கான அர்ப்பணத்துடன் எமது நடுநிலை வெளிநாட்டு கொள்கை சர்வதேச சமூகத்தில் எமக்கு பல நண்பர்களைப் பெற்றத்தந்துள்ளது. சுபீட்சத்தை நோக்கிய எமது பயணத்தில் எமக்கு உதவ அவர்கள் தயாராகவுள்ளனர்.

சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நாம் எல்லோரும் உண்மையான ஒழுக்க பண்பாடும் அறிவுபூர்வமானதும் சமத்துவமானதுமான சேவையை வழங்க எம்மை நாம் அர்ப்பணிப்போம். நாம் பெற்றுக்கொண்டுள்ள சமாதானத்தையும் சுதந்திரத்தையும் பேணிப் பாதுகாத்து நாட்டுக்கும் மக்களுக்கும் சிறந்ததோர் எதிர்காலத்தை கட்டியெழுப்ப உறுதி கொள்வோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top