இருண்ட காலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ள சூழலில்

ஐக்கியம், சமாதானம் வலுப்பெற பிரார்த்திபோம்!

-    இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவர்


எமது தாய் நாட்டில் ஐக்கியமும் சமாதானமும் வலுப்பெற இன்றைய சுதந்திர தினத்தில் பிரார்த்திபோம் என இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை குழுத் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள 68 ஆவது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
“சிறுபான்மைச் சமூகங்களின் முழுமையான பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் இரண்டாவது ஆண்டில் வீறுநடை போடுகின்ற ஒரு அமைதியான, சமாதான சூழலில் எமது நாட்டின் 68 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றோம்.
கடந்த காலங்களில் சிறுபான்மையினர் பேரினவாத சக்திகளினால் நசுக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் தமது தாய் நாட்டின் சுதந்திர தினத்தைக் கூட நிம்மதியாகக் கொண்டாடக் கூடிய மன நிலையில் அவர்கள் இருக்கவில்லை. அவ்வாறான இருண்ட காலத்திற்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதனால்தான் முன்னைய காலங்களை விட கடந்த வருடம் நல்லாட்சி மலர்வுடன் அனைத்து இன மக்களும் நாட்டின் சுதந்திர தினத்தை உளப்பூர்வமான மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். காலப்போக்கில் அது இன்னும் இன்னும் பலமடையும் என்பதில் சந்தேகம் கிடையாது.
இந்த சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இனங்களிடையான இடைவெளியைக் குறைத்து ஐக்கியம் உறுதிப்படுவதற்கான சந்தர்ப்பமாக அமைந்திருப்பதையிட்டு நான் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.

இந்நிலை நீடிப்பதற்கும் எமது தாய் நாடு வளம் பெறவும் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் தமது உரிமைகளையும் அபிலாஷைகளையும் வெற்றி கொள்வதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்பட முஸ்லிம் சமூகம் தயாராக வேண்டும் என இன்றை சுதந்திர தினத்தில் அழைப்பு விடுக்கின்றேன்” என்று கலாநிதி ஏ.எம்.ஜெமீல் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top