இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்

இன்று இலங்கைக்கு வருகை

விக்னேஸ்வரனுடனான சந்திப்புக்கு அனுமதி மறுப்பு?


இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இரண்டு நாள் உத்தியோகபூர்வப் பயணமாக இன்று 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கைக்கு வருகின்றார். கொழும்பில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்தியா - இலங்கை கூட்டு ஆணையக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார்.
இரு தரப்பு நல்லுறவு தொடர்பாக இரு நாட்டு அமைச்சர்களும் விவாதிப்பர். குறிப்பாக தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்ற இந்தியாவின் எண்ணத்தை இலங்கைத் தரப்பிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விளக்குவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இரு நாட்டு மீனவர்கள் சர்வதேசக் கடல் பகுதியில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் தொடர்பாக இரு தரப்பு சங்கங்களும் தொடர்ந்து பேசி வருகின்றன. துரதிருஷ்டவசமாக இந்த விஷயத்தில் அவர்களால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அவர்களின் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்வதற்கான வழிமுறைகளும் கொழும்பு பேச்சுவார்த்தையின் போது ஆராயப்படும். இலங்கைத் தமிழர்களுக்கு சமஉரிமை கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு. அதை தனது பயணத்தின் போது, சுஷ்மா ஸ்வராஜ் நிச்சயம் வலியுறுத்துவார் என்றும் அறிவிக்கப்படுகின்றது.
சுஷ்மா ஸ்வராஜின் இலங்கை வருகை "இரு நாட்டு பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம், எரிசக்தி, மின்சாரம், தொழில்நுட்பம், கடல்சார் ஒத்துழைப்பு, சமூக கலாசாரம், கல்வி, அறிவியல் தொழில்நுட்பம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, சுகாதாரம், விமானப் போக்குவரத்து, சுற்றுலா, இரு தரப்பு மக்கள் ஒருங்கிணைப்பு ஆகியவை குறித்து கொழும்பில் நடைபெறவுள்ள ஒன்பதாவது இரு நாட்டு கூட்டு ஆணையம் விவாதிக்கும். கொழும்பில் பெப்ரவரி 6-ஆம் திகதி ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோரை சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்'
வடக்கு மாகாண முதலமைச்சர்  விக்னேஸ்வரனை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்து பேச்சு நடத்த சுஷ்மா திட்டமிட்டுள்ளார். இதேபோல, வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்திக்க சுஷ்மா ஸ்வராஜ் விரும்பினார். ஆனால், அந்தப் பயணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதால் அந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top