ரமழான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு
தமிழகத்திலுள்ள 3000 பள்ளிவாசல்களுக்கு
4600 மெட்ரிக் தொன் பச்சரிசி
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு
ரமழான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழகத்தில் உள்ள 3000 பள்ளிவாசல்களுக்கு 4600 மெட்ரிக் தொன் பச்சரிசியை வழங்குவதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்
ரமழான் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிறுபான்மையின மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு, அவர்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில், நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமழான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குவதற்கு தேவையான மொத்த அனுமதியை வழங்க எனது முந்தைய ஆட்சி காலத்தில் அதாவது 9.11.2001 அன்று நான் ஆணையிட்டிருந்தேன்.
அதன்படி, பள்ளிவாசல்களுக்கு தேவையான அரிசிக்கான மொத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இது இஸ்லாமிய பெருமக்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டுகளைப் போலவே, இவ்வாண்டும் ரமழான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசியை வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. அவர்களின் கோரிக்கையினை ஏற்று, இந்த ஆண்டும் புனித ரமழான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க, பள்ளி வாசல்கள் சிரமமின்றி அரிசி பெறுவதற்கு ஏதுவாக, மொத்த அனுமதி வழங்க ஆணையிட்டுள்ளேன்.
பள்ளிவாசல்களுக்குத் தேவையான அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட உள்ளன. இதன்படி, 4600 மெட்ரிக் தொன் பச்சரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால், அரசுக்கு (இந்திய ரூபாய்) 2 கோடியே 14
இலட்சம் ரூபாய் செலவாகும். இதன் மூலம், மாநிலம் முழுவதும் சுமார் 3000 பள்ளிவாசல்கள் பயன் அடையும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment