பல்கலைக்கழகங்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு
திட்டமிட்ட ரீதியில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
–ஜனாதிபதி. மைத்ரிபால சிறிசேன
நாட்டின் பல்கலைக்கழகங்களில் எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு திட்டமிட்ட ரீதியிலான வேலைத்திட்டமொன்றின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
இன்று2 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் 2015ஆம் ஆண்டின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
எமது நாட்டு இலவசக் கல்விக்கொள்கை மற்றும் அதன் வேலைத்திட்டம் தொடர்பாக எவ்வளவுதான் விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டபோதும் உலகில் அபிவிருத்தி அடைந்த நாடுகளைவிட தரமான கல்வி எமது நாட்டில் காணப்படுவதாக ஜனாதிபதி அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார்.
ஒவ்வொரு அரசும் ஆண்டுதோறும் இலவசக் கல்வியை பலப்படுத்துவதற்காகவும் இதில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவும் வளங்களை ஒதுக்கி அர்ப்பணிப்புக்களை மேற்கொண்டுள்ளதுடன், அன்று தொடக்கம் இன்று வரை நாட்டுக்கு கிடைக்கப்பெற்றுள்ள இலவசக் கல்வியின் நன்மைகள் தொடர்பாக மகிழ்ச்சியடைய முடியுமென ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
அதியுயர் தொழில் நுட்பத்துடன் முன்னோக்கிப் பயணிக்கும் உலகை வெற்றிகொள்வதற்கு நாட்டு மக்கள் கல்வியிலும் அறிவிலும் பூரணத்துவம் அடைய வேண்டுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், ஜனநாயக ரீதியில் வாழ்வதற்காக சுய தீர்மானம் மேற்கொள்ளத் தேவையான அறிவினை மனிதனுக்கு வழங்குதல் கல்வியின் பொறுப்பாக உள்ளதென தெரிவித்தார்.
பட்டமளிப்பின் அடையாள நிகழ்வாக 52 மாணவர்களுக்கான பட்டமளிப்பு ஜனாதிபதி அவர்களின் கரங்களினால் மேற்கொள்ளப்பட்டதுடன், ஜனாதிபதி அவர்களின் வருகையை முன்னிட்டு ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் வேந்தர் சங்கைக்குரிய பெங்கமுவே தம்மதின்ன நாயக்க தேரர் ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கிவைத்தார்.
அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, இராஜாங்க அமைச்சர் மொஹன்லால் கிரேரு, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி பி.சந்திரசேன ஆகியோர் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள் மற்றும் கலாநிதிகள், பேராசிரியர்கள் இதில் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment