கொஸ்கம - சலாவ முகாம் வெடிவிபத்து!
சேத விபரங்கள் இன்று தெரியவரும்!!


கொஸ்கம- சலாவ இராணுவ முகாமில் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்துக்கான காரணத்தைக் கண்டறிவதற்கு, கால அவகாசம் தேவைப்படுவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.
நேற்று ஞாயிறு மாலை 5.45 மணியளவில் சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தை அடுத்து ஏற்பட்ட தீ நேற்றிரவு பலமணி நேரமாகத் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது.
தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக நேற்றிரவு அறிவிக்கப்பட்ட போதிலும், அந்த இடத்தை நெருங்க முடியாதிருப்பதாகவும் இன்னமும் 1 கிலோமீற்றர் அபாயம் நிலவுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலையிலேயே, தீயணைப்புப் படையினரும், மீட்பு அணிகளும் முகாமுக்குள் சென்று தேடுதல்களில் ஈடுபடவுள்ளனர். அதன் பின்னரே சேத விபரங்கள் தெரியவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்தோ, விபத்தில் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடவோ கால அவகாசம் தேவைப்படுவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர மேலும்  தெரிவிதுள்ளார்.
வெடிப்புச் சிதறல்கள் விழுந்து கொண்டிருந்ததால் முன்னெச்சரிக்கையாகவே கொழும்பு அவிசாவளை வீதி மூடப்பட்டதாகவும், சுற்றுப் புறங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தீ பரவாமல் கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் வெளியேற்றப்பட்ட பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், இராணுவம், கடற்படை, விமானப்படை, காவல்துறை என்பன பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top