காஷ்மீர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு தீர்வு காணும்படி
மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும்

இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம்
அந்த மாநில எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்து

ஜம்மு-காஷ்மீரில் தற்போது நிலவும் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணும்படி மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் அந்த மாநில எதிர்க்கட்சித் தலைவர்கள் நேற்று 20 ஆம் திகதி சனிக்கிழமை வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த மாதம் 8-ஆம் திகதி அனந்த்நாக் மாவட்டம், கோகர்நாக் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற சண்டையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த புர்ஹான் வானி பாதுகாப்புப் படையினரால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து மூண்ட வன்முறையில் 60-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் பலத்த காயமடைந்தனர். ஜம்மு-காஷ்மீரில் தொடரும் வன்முறையால் 43-ஆவது நாளாக பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், டில்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை தேசிய மாநாட்டுக் கட்சியின் செயல் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத் தலைவர் ஜி.. மீர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ எம்.ஒய். தாரிகமி, சுயேச்சை எம்எல்ஏ ஹக்கீம் யாசீன் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் 20 பேர் நேற்று  சனிக்கிழமை சந்தித்தனர். இந்த சந்திப்புக்குப் பிறகு, ஒமர் அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது:
காஷ்மீர் பிரச்னை அரசியல் ரீதியிலானது என்பதை மத்திய அரசு ஒப்புக் கொள்ள மறுப்பதே, பிரச்னை மேலும் மோசமடைந்ததற்கு காரணம். அரசியல் கண்ணோட்டத்தில் பிரச்னையை மத்திய அரசு அணுகாமல் இருப்பது ஏமாற்றத்தைத் தருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை மாநிலத்தின் ஸ்திரத்தன்மை, அமைதி ஆகியவற்றில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும். காஷ்மீரில் பற்றி எரியும் தீயானது, ஜம்முவின் செனாப் பள்ளத்தாக்கு, பீர் பஞ்சால் ஆகிய பகுதிகளுக்கும், கார்கில் பகுதிக்கும் ஏற்கெனவே பரவி விட்டது. நிலைமை மிகவும் மோசமடைந்து விட்ட நிலையில், அவர்கள் (மத்திய அரசு, மாநில அரசு) எப்போது விழித்தெழுவார்கள் என்பது தெரியவில்லை.
காஷ்மீரில் நடைபெறும் போராட்டத்தை பெற்றோல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை தடுப்பது போன்ற நிர்வாக நடவடிக்கைகள் மூலம் ஒடுக்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் முயலுகின்றன. அதேநேரத்தில் ஜம்மு-காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த என்னென்ன நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டுமோ, அதை எதிர்க்கட்சியினர்தான் செய்து வருகின்றனர்.
காஷ்மீர் மக்களுடன் பேச்சு நடத்தாமல் தொடர்ந்து காலதாமதம் செய்வது நிலைமையை மேலும் மோசமாக்கும். எனவே, ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பாக அனைத்து தரப்பினருடனும் நம்பகமான, அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்தும்படி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மீது தனக்கு இருக்கும் அதிகாரத்தை குடியரசுத் தலைவர் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளோம். மேலும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் அப்பாவி மக்கள் மீது படைபலத்தை பயன்படுத்துவதை நிறுத்தும்படி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தோம்.
ஜம்மு-காஷ்மீரை ஆளும் மெஹபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி- பாஜக கூட்டணி அரசு அனைத்து நிலைகளிலும் தோல்வியடைந்து விட்டது. மாநில நிலவரம் மோசமடைந்ததற்கு மெஹபூபா முஃப்திதான் நேரடிப் பொறுப்பு.
ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த பர்ஹான் வானி கொல்லப்பட்டதை அடுத்து நடைபெற்ற சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பில்லை. அதன்பிறகே, எரியும் நெருப்பில் பெற்றோலை ஊற்றும் செயலில் பாகிஸ்தான் ஈடுபட்டது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க முடியும் என்கிறது மத்தியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு. முடிந்தால் அதை செய்யப்படும்.
மத்திய அரசின் வெளிநாட்டுக் கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க நான் இங்கு வரவில்லை. எனது வீடு (காஷ்மீர் பள்ளத்தாக்கு) பற்றி எரிகிறது. அந்த விவகாரத்தில் உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தவே டில்லி வந்துள்ளேன்.

பெல்லட் ரக துப்பாக்கி குண்டுகளை பாதுகாப்புப் படையினர் பயன்படுத்துவதால் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இதற்கு, அந்த துப்பாக்கியை பயன்படுத்த தெரியாதவர்களிடம், அதை வழங்கியதே காரணம் ஆகும். பொது மக்களுக்கு எதிராக 13 லட்சம் பெல்லட் ரக தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுபோல வேறு எந்த நாட்டிலாவது நடந்துள்ளதா? என்று வினவியுள்ளார் ஒமர் அப்துல்லா.
டில்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சனிக்கிழமை சந்தித்து ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் தலையிடக் கோரி கோரிக்கை மனு அளிக்கும் தேசிய மாநாட்டுக் கட்சியின் செயல் தலைவர் ஒமர் அப்துல்லா உள்ளிட்ட அந்த மாநில எதிர்க்கட்சித் தலைவர்கள்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top