ஒலுவில் கடலரிப்புக்கு பாரிய
பாறாங்கற்களைக் கொண்டும் கடல்
மணலைக் கொண்டும் உடனடியாக நிரப்பப்பட நடவடிக்கை
17 மில்லியன்
ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிப்பு
கடலரிப்பின் காரணமாக பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வரும் ஒலுவில் பிரதேசத்தைப் பாதுகாப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக 17 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அவசரமாக அங்கு 220 மீற்றர் தூரமான கடலோரப் பிரதேசம் பாரிய பாறாங்கற்களைக் கொண்டும், கடல் மணலைக் கொண்டும் உடனடியாக நிரப்பப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான தீர்மானம் இன்று 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை அமைச்சர் ஹக்கீமின் பாராளுமன்ற அலுவலகத்தில் கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி, பொறியியலாளர் டீ.ரீ.ரூபசிங்ஹ மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபையின் திட்டமிடல் பொறியியலாளர் சுசந்த அபேவர்தன ஆகியோருடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது மேற்கொள்ளப்பட்டதாவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், எம்.எஸ். தௌபீக், எம்.எச்.எம். சல்மான, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ், கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் பழீல் பீ.ஏ ஆகியோரும் பங்கு பற்றினர்.
மண்ணரிப்பினால் கடல் ஒலுவில் கிராமத்திற்குள் உட்புகுவதால் மக்கள் தங்களுக்குச் சொந்தமான காணிகளை மட்டுமல்லாது, தமது வசிப்பிடங்களையும் இழக்கும் அபாயம் நிலவுவதாகவும், இது சுனாமி அனர்த்தத்திற்குப் பின்னர் இப்பிரதேச மக்கள் எதிர் நோக்கும் மிகப் பெரிய ஆபத்தென்றும் உயரதிகாரிகளிடம் சுட்டிக்காட்டிய அமைச்சர் ஹக்கீம், இந்த கடலரிப்பை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றை துறைமுகளுக்குப் பொறுப்பான அமைச்சர் அர்ஜுன ரணதூங்க அமைச்சரவைக்குச் சமர்ப்பிப்பதாகவும் அதனடிப்படையில் வடமேல் மாகாணத்தில் மாறவிலை கரையோரப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் கடலரிப்பிலிருந்து பாதுகாப்பதற்கான பாரிய செயல்திட்டமொன்று அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்படுமென்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
உடனடியாக இதில் அனுபவம் வாய்ந்த முன்னைய ஒப்பந்ததக்காரரைப் பயன்படுத்தி 200 தொடக்கம் 250 கிலோ நிறை கொண்ட பாரிய பாறாங்கற்களைக் கொண்டு ஒலுவில் கடலோரத்தில் 220 மீற்றர் தூரமான பிரதேசத்தை நிரப்பி கடலரிப்பை தடுப்பதெனவும், அண்மிய அட்டாளைச்சேனை போன்ற பிரதேசங்களிலிருந்து மேலதிக கடல் மணலை நவீன தொழில்நுட்பத்தைக் கையாண்டு ஒலுவிலை நோக்கி உந்தித்தள்ளுவதற்கான செயற்பாட்டை முன்னெடுப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த தொழில்நுட்பத்தினால் மீன்பிடித் தொழில் போன்றவற்றிற்கும், நில அமைப்பிற்கும் பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியம் உண்டா என அமைச்சர் ஹக்கீம் கேள்வி எழுப்பிய போது அவ்வாறான அபாயம் காணப்படவில்லை என கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள உயரதிகாரிகள் பதிலளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக எடைகொண்ட பாரிய பாறாங்கற்களை துறைமுக அதிகாரசபையிடமிருந்தே பெற்றுக் கொள்ள முடியுமென்றும், சிறிய எடைகொண்ட கருங்கற்களை மாவட்டத்தின் ஏனைய இடங்களில் காணப்படும் கல் உடைக்கும் அகழ்வுக் கிடங்குகலிருந்து பணம் செலுத்தி கொள்வனவு செய்வதாகவும் தீர்மானிக்கப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் உடனடியாக ஓரிரு தினங்களிலேயே இதற்கான வேலைகளை ஒலுவில் பிரதேசத்தில் ஆரம்பிப்பதாகவும், அடுத்த கட்டமாக அமைச்சரவை பத்திரத்தினாலும், பிரதமரின் கீழுள்ள குழுவினரின் அனுமதியைப் பெற்றும் மேலும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாகவும், அத்துடன் காணிகளையும், வதிவிடங்களையும் இழந்தவர்களுக்கு உரிய இழப்பீடுகளை இயன்றவரை பெற்றுக் கொடுக்க முயற்சிப்பதாகவும் அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டிருக்கிறார்.
0 comments:
Post a Comment