இந்திய ராணுவ வீரரை பாகிஸ்தான் ராணுவம் பிடித்து வைத்துள்ளது

"டான்' பத்திரிகை வெளியிட்ட  தகவல்



பாகிஸ்தான் எல்லையில் நேற்று வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையின்போது, இந்திய ராணுவ வீரர் ஒருவரை பாகிஸ்தான் ராணுவம் பிடித்து வைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தானிலிருந்து நேற்று வியாழக்கிழமை வெளியான "டான்' பத்திரிகையில் வெளியான செய்தி:
பாகிஸ்தானின் தத்தா பானி எல்லையையொட்டி உள்ள பகுதியில் இந்திய ராணுவம் வியாழக்கிழமை அதிகாலை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழந்து விட்டனர். அப்போது, பாகிஸ்தான் தரப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர்கள் 8 பேர் உயிரிழந்து விட்டனர். மேலும், ஒருவரை பாகிஸ்தான் ராணுவம் பிடித்து வைத்துள்ளது. அவர், மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சந்து பாபுலால் சோஹன் (22) என்பது தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்துமோ என்று அஞ்சி உயிரிழந்த தங்கள் தேச ராணுவ வீரர்களின் உடல்களை இந்திய ராணுவ வீரர்கள் இன்னும் எடுத்துச் செல்லவில்லை என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பிம்பர், ஹாட்ஸ்பிரிங், கேல், லிபா பகுதிகளில் இந்திய ராணுவ வீரர்கள் வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. இரு தரப்பினருக்கும் இடையே காலை 8 மணி வரை துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர்கள் 8 பேர் உயிரிழந்து விட்டதாக வெளியான செய்தி பொய்யானது என்று இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top