காஷ்மீர், பஞ்சாப் மாநிலத்தில் எல்லைப்பகுதி மக்கள்
பாதுகாப்பான இடங்களுக்கு செல்கிறார்கள்
அங்குபாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன
காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களில் எல்லைப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்கிறார்கள் அங்குபாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் பகுதிக்குள் இந்திய ராணுவம் நேற்று முன்தினம் இரவு சென்று அதிரடி தாக்குதல்கள் நடத்தியது.
இதன்காரணமாக காஷ்மீர், பஞ்சாப், குஜராத் மாநிலங்களில் பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. பாகிஸ்தான் ஒரு வேளை பதில் நடவடிக்கை எடுத்தால், இந்தியாவும் அதிரடி தாக்குதல்களை தொடரும்.
எனவே இந்த மாநிலங்களில் பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள கிராமங்களில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுபற்றி காஷ்மீர் மாநிலம், ஜம்மு பகுதி துணை கமிஷனர் சிம்ரன்தீப் சிங் கூறும்போது, “முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சர்வதேச எல்லை, எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிகளையொட்டி வசிக்கிற கிராமங்களை சேர்ந்த மக்களை, அங்கிருந்து காலி செய்து, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுள்ளோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், “இந்திய-பாகிஸ்தான் எல்லையில் 7 முதல் 8 கி.மீ., சுற்றளவுக்குள் வசிக்கிற மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கூறி உள்ளோம். அடுத்த அறிவிப்பு வரும்வரையில் 10 கி.மீ., சுற்றளவுக்குள் உள்ளபாடசாலைகளை மூடுமாறும் அறிவுறுத்தி உள்ளோம்” எனவும் கூறியுள்ளார்.
ஜம்மு, சம்பா, கத்துவா மாவட்டங்கள், ரஜோரி, பூஞ்ச் மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு இது தொடர்பாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டு விட்டன. அந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர தொடங்கி விட்டனர்.
பஞ்சாப் மாநிலத்தில் சர்வதேச எல்லை பகுதியில் 10 கி.மீ., சுற்றளவில் அமைந்துள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாநில முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதலுடன் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று தொடர்பு கொண்டு பேசியதின்பேரில், எல்லையோர மக்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
குஜராத் மாநிலத்திலும் பாகிஸ்தான் எல்லையோர மாவட்டங்களை சேர்ந்த மக்கள் உச்சக்கட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அங்கும் எல்லையில் இருந்து 10 கி.மீ., சுற்றளவில் உள்ள கிராம மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு கேட்டுள்ளது. ஆனால் எல்லையில் இருந்து 25 கி.மீ., தொலைவில்தான் கிராமங்கள் உள்ளன என துணை முதல்-மந்திரி நிதின் பட்டேல் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் மாநிலத்தில் உச்சக்கட்ட உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று நாட்டின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசமும், உச்சக்கட்ட உஷார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment