எழுக தமிழ் பேரணிக்கு எதிராக

வவுனியாவில் பொதுபலசேனா போராட்டம்

யாழ்ப்பாணத்தில் கடந்த 24 ஆம் திகதி நடத்தப்பட்ட எழுக தமிழ் பேரணிக்கு  எதிர்ப்பு  தெரிவித்து   பொது பல சேனா வவுனியாவில் கண்டனப் பேரணியொன்றை முன்னெடுத்துள்ளது.  

இந்த எதிர்ப்பு கண்டனப் பேரணி இன்று காலை 9.30மணி அளவில் வவுனியா மாமடு சந்தியில் இருந்து ஆரம்பமாகியுள்ளது. வவுனியா நகர் வரை இடம்பெறும் இந்தப் பேரணியில் சுமார் 150 பேர் வரை கலந்துகொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானாசார தேரர் இந்த கண்டனப் பேரணிக்கு தலைமை தாங்கியுள்ளதுடன், வ்வுனியாவைச் சேர்ந்த எவரும் இதில் கலந்துகொள்ளவில்லை.
வெளி இடங்களிலிருந்து மூன்று பேருந்துகளில் அழைத்துவரப்பட்ட பொது பல சேனா  அமைப்பின் ஆதரவாளர்களே இதில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் சிங்கள மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ள பொதுபல சேனா, சிங்களவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தமாறும் வலியுறுத்தியுள்ளது.
அதேவேளை இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்றும், அதனால் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் புத்தர் சிலைகளை வைப்பதற்கும், பௌத்த விகாரைகளை அமைப்பதற்கும் உரிமை இருப்பதாகவும், இந்த நடவடிக்கைகளை எவரும் எதிர்க்க முடியாது என்றும் பொது பல சேனா  கூறியுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, எழுக தமிழ் பேரணிக்கும் அதன்போது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top