. . . காங்கிரசின் சமகால பிரச்சினை தொடர்பான

YLS ஹமீதின் முழுமையான அறிக்கை.

பாகம் -1

அஸ்ஸலாமு அலைக்கும் வறஃமதுல்லாஹி வபறகாதுஹு
மேற்படி முழுமையான அறிக்கையை வெளியிடுவதாக நான் ஏற்கனவே வாக்குறுதி அளித்திருந்த போதிலும் பல தவிர்க்க முடியாத காரணங்களினால் தாமதமாகி விட்டது. இருப்பினும் எனது வாக்குறுதிக்கமைய அவ்வறிக்கையை தொடராக வெளியிடுகின்றேன் .

கட்சியின் சமகால பிரச்சினை தொடர்பான முழுமையான தகவல்கள் இதுவரை வெளியிடப் படாத போதிலும் பலர் இப்பிரச்சினை தொடர்பாக தெளிவான கண்ணோட்டத்தில் இருப்பது மகிழ்ச்சியாகவும் ஆறுதலாகவும் இருக்கின்றது . இருப்பினும் சிலருக்கு தெளிவின்மை இருக்கலாம் .

இந்நிலையில் தெளிவினை வழங்குவதற்காகவும் அசத்தியம் கோலோச்சிவிடக் கூடாது; என்பதற்காகவும் இதனை வெளியிடுகின்றேன் .

அதே நேரம் உண்மைகள் நிரந்தரமாக உறங்கிவிடக் கூடாது; அது அசத்தியவான்கள் சத்தியான்களாக தங்களை மக்களுக்கு காட்ட முற்படுகின்ற முயற்சிகளுக்கு துணை போனதாக அமைந்துவிடும் . அதன் மூலம் சமூகம் பிழையாக வழிநடாத்தப்படுவதற்கு நாமும் பங்காளர்களாகி நாளை மறுமையில் அதற்கு பதில் சொல்லவேண்டிய நிலைக்கு வந்து விடக்கூடாது என்பதனாலும் உண்மையை வெளிப்படுத்திய பின்பும் யாராவது பொய்யின் பக்கம் செல்ல விரும்பினால் அது அவர்களைப் பொறுத்த விடயம் என்ற அடிப்படையிலும் இதனை எழுத விளைகின்றேன் .

ஶ்ரீ. மு. காங்கிரசில் இருந்து வெளியேறுகை
-----------------------------------------------
2004ம் ஆண்டு பொதுத்தேர்தலைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களான நஜீப் மஜீத் , றிசாட் பதியுதீன், அமீர் அலி மற்றும் உயர்பீட உறுப்பினர் N M சஹீட் மற்றும் நானும் ஶ்ரீ மு கா வில் இருந்து வெளியேறினோம். என்னைப் பொறுத்தவரை அவ்வெளியேற்றத்திற்கான காரணத்தை கடந்த 12 வருடங்கள் பேசியிருக்கின்றோம் . எனவே அதற்குள் செல்ல இங்கு நான் முயற்சிக்க வில்லை.

அவ்வெளியேற்றத்தினைத் தொடர்ந்து இம்மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் (அமைச்சரவை அந்தஸ்து அற்ற ) அவரவர் மாவட்டத்திற்கான மாவட்ட அபிவிருத்தி அமைச்சர்களாக நியமிக்கப் பட்டனர் .

2005ம் ஆண்டு மு காங்கிரஸ் தோற்றம் பெற்றது. தலைவராக N M சஹீட் உம் செயலாளர் நாயகமாக நானும் பதவியேற்றோம். இந்த இடத்தில் இன்னும் பல தகவல்களைக் கூற விரும்புகின்ற போதிலும் நீதி மன்றில் வழக்கு இருப்பதால் அவற்றைத் தவிர்ந்து கொள்கின்றேன் .

இங்குள்ள முக்கிய விடயம், இம்மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் எமது கட்சியில் சாதாரண அங்கத்துவம் கூட பெற்றிருக்க வில்லை என்பது மட்டுமல்ல , இக்கட்சியின் பெயரை உச்சரித்து அதற்கு ஆதரவாக கூட அவர்களால் பகிரங்கமாக பேச முடியவில்லை . காரணம் அவர்கள் ஶ்ரீ மு கா அங்கத்தவர்களாக பாராளுமன்றம் சென்றதனால் கட்சியின் பெயரை உச்சரித்துப் பேசுவதில் அவர்களுக்கு சட்டப் பிரச்சினை இருந்தது.

இந்நிலையில் இக்கட்சியை, அதன் பெயரை நாடுபூராகவும் தொலைக்காட்சி , வானொலி, மற்றும் அச்சு ஊடகங்கள் , அதிலும் குறிப்பாக ஆங்கில ஊடகங்களினூடாக வெளிக்கொணருகின்ற பணியைச் செய்தது யார்? றிசாட் பதியுதீனா? அல்லது இன்று கூலிக்காக, உண்மையை பொய்யென்றும் பொய்யை உண்மை என்றும் எழுதுகின்ற அவரது அடிவருடிகளா?

அதுமட்டுமல்ல, நாங்கள் ஶ்ரீ மு கா இல் இருந்து வெளியேறிய காலம் எப்படிப்பட்டதென்றால் எவ்வளவு வலுவான காரணங்களுக்காக வெளியேறியிருந்தாலும் அவ்வாறு வெளியேறியவர்கள் துரோகிகளாகப் பார்க்கப் பட்ட காலம். அதிலும் குறிப்பாக றவூப் ஹக்கீம் அவர்களுடைய தனிப்பட்ட பிரச்சினை ஒன்றில் றிசாட் அநாகரீகமான முறையில் சம்மந்தப்பட்டு மாட்டுப்பட்டு அது லசந்த விக்ரமதுங்கவினால் தொலைக்காட்சியில் காட்டப்பட்டு றிசாட் மக்களின் கோபத்திற்கு ஆளாகியிருந்த காலம் .,அவரே எங்களிடம் ஒரு முறை கூறினார், " ஒரு வருடம் அதிகமாக வீட்டிற்குள்ளேயே முடங்கி இருந்ததாகவும் எப்போதாவது தனது தொகுதிக்கு சென்றாலும் தேனீர் குடிப்பதற்காக்கூட இடையில் வாகனத்தை நிறுத்துவதற்கு பயந்ததாகவும். ஏனெனில் மக்கள் தன்னை அடையாளம் கண்டுவிட்டால் வந்து தாக்கி விடலாம் ; என்பதனால். அந்த நாட்களில் றிசாட் தொடர்பாக ஏதாவது செய்திகள் ஊடகங்களில் வந்தாலும் அதைப்பார்த்து மக்கள் முகம் சுளித்த, தம் வெஞ்சினத்தை வெளிக்காட்டிய நிகழ்வுகள் பல.

இவ்வாறு இருந்த றிசாட் வெளியில் வருவதற்கு துணைபோன பிரச்சாரங்கள் யாருடையவை. இன்று எழுதுகின்ற கூலிப்பட்டாளங்களுடையதா? இவர்கள் அன்று இருந்தார்களா? அல்லது இப்படிப்பட்டவர்களை மேய்ப்பதற்குரிய பொருளாதாரப் பலம்தான் அவரிடம்
அன்று இருந்ததா? இன்று கூலிக்காக எழுதுகின்றவர்கள் பொய்யையும் நடிப்பையும் மெய்யென்றும் சத்தியமென்றும் பொய்யாக எழுதுகின்றார்கள் . அந்தப் பொய்யை யாராவது சுட்டிக் காட்டினால் அவரது "டைரக்சனில்" அவ்வாறு சுட்டிக் காட்டுபவருக்கு எதிராக வசை பாடப் படுகின்றது . ஆனால் , அல்ஹம்துலில்லாஹ், அன்று YLS ஹமீட் உண்மையையும் சத்தியத்தையும் மு கா விலிருந்து வெளியறியதற்கான நியாயமான காரணங்களையும் ஊடகங்களினூடாக தொடர் பிரச்சாரம் செய்ததன் மூலம் றிசாட் தைரியமாக வெளியில் வருவதற்கு பங்களிப்புச் செய்யவில்லை ; என்று நெஞ்சில் கைவைத்து சொல்ல முடியுமா?

மு கா வில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து தினகரன் பத்திரிகையில் இரண்டு ஞாயிறுகள் தொடர்ச்சியாக, " சமுதாயமா? சந்தர்ப்ப வாதமா?" என்ற தலைப்பில் வெளியாகிய எனது முழுப்பக்க கட்டுரை, மு கா வில் இருந்து எமது வெளியேறுகை தொடர்பான மக்களின் பார்வை கணிசமான அளவு மாறுவதற்கு காரணமாய் அமைந்ததை மறுக்க முடியுமா? அந்தக் கட்டுரையின் தாக்கம் அதனை அவர்களுடைய வேண்டுகோளின் பேரிலேயே புத்தகமாக வெளியிட வைக்கவில்லையா? அதை அவர்கள் தங்கள் மாவட்டங்களில் மக்களுக்கு விநியோகித்து மு கா விருந்து வெளியேறியதால் தங்களுக்கு ஏற்பட்ட கறைகளிலுருந்து தங்களை விடுவிக்க முற்படவில்லையா? அப்பொழுது, பொய்யை மெய்யென்று எழுதுகின்ற இந்த கூலி எழுத்தாளர்கள் எங்கே இருந்தார்கள் . இன்று இந்த கூலி எழுத்தார்களை வைத்து YLS ஹமீட் இற்கே சேறு பூச முயற்சியா?

எனது முப்பது வருட அரசியலில் நான் எந்த ஒரு கூட்டத்திலோ, எழுத்துகளிலோ நான் என்னைப் பற்றி பேசியதோ எழுதியதோ கிடையாது . நான் வாக்குறுதி அளித்திருந்த போதிலும் எனது இந்த அறிக்கை பிந்தியதற்கான ஒரு பிரதான காரணம் என்னைப் பற்றியும் பல இடங்களில் குறிப்பிடப்பட வேண்டி வருமென்பதாகும். அது எனக்கு சற்று தர்ம சங்கடமான விடயமாகும் . ஆனாலும் கூலி ஊடகப் பட்டாளத்தை வைத்துக்கொண்டு றிசாட் நாளாந்தம் போடுகின்ற வேசம் எல்லை தாண்டிக் கொண்டு செல்கின்றது . எனவேதான் இனியும் தாமதியாது மக்கள் முன் உண்மைகளைக் கொண்டுவந்தாக வேண்டும்.

றிசாட்டின் தலைமையும் கபினட் அமைச்சர் பதவியும்
--------------------------------------------------------
இன்று ஒரு கட்சியின் தலைவர் " நப்ஸ்" கேட்கின்றது' என்று தலைமைப் பதவி கேட்டதுதான் எல்லோருக்கும் தெரியும். அதே நேரம் இன்னுமொருவருடைய " நப்ஸ்" தலைமைப் பதவியையும் கபினட் அமைச்சர் பதவியையும் சேர்த்துக் கேட்டது பலருக்கு தெரியாது.

2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் வந்த பொழுது அன்றைய பிரதமரான மஹிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருடன் பேசுகின்ற பொறுப்பு எனக்களிக்கப் பட்டிருந்தது. அப்பேச்சு வார்த்தையில் சமூகம் தொடர்பான ஒப்பந்த விடயங்களுக்கு அப்பால் ஒரு கபினட் அமைச்சு மற்றும் இரண்டு பிரதி அமைச்சுக்கள் தருவதற்கு உடன்பாடு காணப்பட்டது. அப்பொழுது அந்த கபினட் அமைச்சுப் பதவியை யாருக்கு வழங்குவது என்ற கேள்வி எழுந்தது. அந்த கால கட்டத்தில் கொழும்பில் உள்ள ஒரு முஸ்லிம் அரசியல் பிரமுகரின் வீட்டில் தான் நாம் அடிக்கடி கூடுவோம். அதனால் அவரும் கிட்டத்தட்ட எமது அணியில் ஓர் உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவராக சகல கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்வார்.

குறித்த தினத்தன்று றிசாட் என்னுடன் பேசினார். " பார் மச்சான் , நமது அணியில் உள்ள எல்லாரும் அந்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவருக்குத்தான் ( அவரின் பெயரைக் குறிப்பிட்டு) அமைச்சுப் பதவியையும் எதிர்காலத்தில் கட்சியின் தலைமைப் பதவியையும் வழங்க வேண்டும்; என்று தங்களுக்குள் பேசியிருக்கின்றார்கள் ; என்று என்னிடம் வேதனைப்பட்டார். கவலைப்பட வேண்டாம், அதனைப் பார்த்துக் கொள்வோம் ; என்று ஆறுதல் கூறினேன் .

அதனைத் தொடர்ந்து அன்றிரவு வழமைபோல் அந்த முஸ்லிம் பிரமுகரின் வீட்டில் கூடினோம். எனது வலது பக்கத்தில் றிசாட் அமர்ந்திருந்தார் . ஏனையவர்கள் எனது இடது பக்கத்தில் அமர்ந்திருந்தனர்.

இப்பொழுது நான் விடயத்திற்கு வந்தேன் . மஹிந்த உடனான பேச்சுவார்தை விபரங்களை கூறிவிட்டு, இதில் கபினட் அமைச்சுப் பதவியை யாருக்கு வழங்குவது; என்பது தொடர்பாக கருத்து கூறுமாறு கேட்டேன் . சில நிமிடங்கள் யாரும் பேசவில்லை . நான் மீண்டும் இது தொடர்பாக கருத்துக் கூறுமாறு கேட்டபோது , எனது வலது பக்கத்தில் அமர்ந்திருந்த றிசாட் , அடித்தொண்டையால் மிகவும் மெல்லிய குரலில் , "எனக்கு தந்தால் செய்வேன் எனக்குத் தாருங்கள் ; " என்றார். மறுபக்கம் யாரும் எதுவும் பேசாமல் சில நிமிடங்கள் மீண்டும் நிசப்தம் நிலவியது.

அப்பொழுது நான் , " றிசாட் தனக்குத் தரும்படி கேட்கின்றார் , மற்றவர்களும் தங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்" ; என்றேன் . அப்பொழுது அங்கிருந்த ஒருவர் வாய் திறந்தார். "கிழக்கு மாகாணத்தில் தான் வாக்கு வங்கி இருக்கின்றது , எனவே கிழக்கைச் சேர்ந்த ஒருவருக்கு அப்பதவியை வழங்கினால்தான் எதிர்காலத்தில் கட்சியை முன்னெடுக்க ஏதுவாக இருக்கும்; " என்றார் அவர். அப்பொழுது றிசாட்டிற்குத்தான் வழங்க வேண்டுமென்பதற்கு நான் சில நியாயங்களைக் கூறினேன். (அந்த நியாயங்களை பின்னால் கூறுகின்றேன் ) ஆனாலும் கிழக்கில் உள்ள ஒருவருக்கே அப்பதவியை வழங்க வேண்டுமென்று அவர்கள் கூறினார்கள். அவர்களின் திட்டம் ஏற்கனவே தெரிந்திருந்ததாலும் அங்கு றிசாட்டிற்கு ஆதரவாக நான் மட்டுமே இருந்ததாலும் அந்த விடயத்தை ஒரு விவாதமாக மாற்ற நான் விரும்பவில்லை . எனவே, இது தொடர்பாக மீண்டும் கூடி முடிவெடுப்போம்; என்று அதனை ஒத்திப்போட்டு விட்டு, வேறு விடயங்களைப் பேசி கலைந்து சென்றோம் .

அதன் பின் அடுத்த நாள் அல்லது அதற்கு மறுநாள் மீண்டும் கூடினோம் . இப்பொழுதும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. யாரும் றிசாட்டிற்கு ஆதரவாக பேசவில்லை , YLS ஹமீட்டைத் தவிர. முடிவு எடுக்க முடியவில்லை . எனவே அவ்விடயத்தை ஒத்தி வைத்து வேறு விடயங்களைப் பேசி கலைந்து சென்றோம் .

மூன்றாவது தடவையும் கூடினோம் . அன்று கருத்துகள், வாதப்பிரதி வாதங்களாக மாறின. எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக நின்றேன். அன்றும் முடிவேதும் எடுக்க முடியவில்லை . இங்கு, றிசாட்டிற்கு சார்பாக நான் முன்வைத்த பிரதான வாதம் என்னவெனில் குறித்த கிழக்கைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் 2004ம் ஆண்டுதான் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டார். ஆனால்
றிசாட் 2001ம் ஆண்டு தெரிவு செய்யப்
பட்டிருந்தார். அந்தவகையில் றிசாட் அவரைவிட senior ஆக இருந்தார். அதே நேரம் இவர்கள் இருவரையும் விட மூத்த கிழக்கைச் சேர்ந்த அடுத்த பாராளுமன்ற உறுப்பினர் இந்த தலைமைத்துவ போட்டிக்குள் வரவில்லை . இல்லையெனில் எனக்கு றிசாட்டிற்காக வாதாடுவது கஷ்டமாக இருந்திருக்கும் . அதே நேரம் நான் றிசாட்டிற்கு சார்பாக வாதாடியதற்கான காரணம் : ஒன்று, அந்த கிழக்கைச் சேர்ந்தவர் தொடர்பாக ஆரம்பத்திலிருந்தே நல்லபிப்பிராயம் இருக்கவில்லை அடுத்தது, றிசாட் வயதில் இளையவராகவும் அனுபவ முதிர்ச்சி குறைந்தவராகவும் இருந்தபோதிலும் அவரை ' நல்லவன் ' என்று நம்பினேன்; எனவே, காலப்போக்கில் தனது ஆளுமையை வளர்த்துக் கொள்வார்; என எதிர்பார்த்தேன். இந்நிலையில் தான் நான் றிசாட்டிற்காக வாதாடினேன். ( ஆனால் நேரான ( positive) ஆளுமைகளுக்குப் பதிலாக, எதிர்மறையான (negative) ஆளுமைகளைத்தான் அவர் வளர்த்துக் கொள்வார் ; என்பது அப்பொழுது எனக்குத் தெரிந்திருக்க வில்லை. மறைவானவற்றை அறிகின்ற சக்தியை இறைவன் மனிதர்களுக்கு வழங்கவில்லையே.)

அன்றும் ஏகோபித்த முடிவுக்கு வரமுடியாத போதும் நான் முன்வைத்த வாதங்களை அவர்களால் முறியடிக்க முடியவில்லை . எனது பல கருத்துக்களுக்கு அவர்களிடமிருந்து மௌனம்தான் பதிலாக கிடைத்தது .
மறுநாள் மஹிந்த ராஜபக்ச அவர்களிடம் எமது proposal சமர்ப்பிக்க வேண்டி இருந்தது. எனவே றிசாட்டையே அமைச்சுப் பதவிக்கு சிபார்சு செய்து கடிதம் எழுதப்போவதாக நான் சொன்னபோது அவர்களிடம் மேலதிக வாதம் இருக்கவில்லை. அதே நேரம் மனம் திறந்து நாங்கள் சம்மதிக்கின்றோம்; என்றும் கூறவில்லை .

இந்நிலையில் அந்த proposal உடன் அமைச்சுப் பதவி தொடர்பாக வேறு ஒரு கடிதத்தையும் எழுதி, அதில் றிசாட்டிற்கு கபினட் அமைச்சர் பதவியையும் ஏனையவர்களுக்கு பிரதியமைச்சர் பதவிகளையும் வழங்குமாறு கோரிய அக்கடிதத்தை எடுத்துக்கொண்டு அடுத்த நாள் மஹிந்த ராஜபக்ச அவர்களைச் சந்திக்க அலரி மாளிகைக்கு போவதற்கு தயாராகிக்கொண்டிருந்தபொழுது அந்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் எனக்கு தொலைபேசி மூலம் என்னைச் சந்திக்க வேண்டுமென்று கூறினார். சரி என்று, அவரது மாவட்ட அபிவிருத்தி அமைச்சிற்கு சென்றேன் . அங்கு அவர், றிசாட்டிற்கு கபினட் அமைச்சு வழங்குவதாயின் தனக்கும் கபினட் அமைச்சு வழங்கப்பட வேண்டும்; என்றார் . மூன்று பா. வுக்கு இரண்டு கபினட் அமைச்சை எவ்வாறு எதிர்பார்க்க முடியும் என்று கேட்டபோது, அது தெரியாது, றிசாட்டிற்கு வழங்கினால் தனக்கும் வழங
கப்பட வேண்டும்; என்றார். அவ்வாறு இரண்டு கிடைத்தால் உங்கள் இருவரையும் விட சிரேஷ்டமான அடுத்தவர் விடுவாரா? என்று கேட்டபோதும் அவர் தன் நிலைப்பாட்டில் இருந்து மாறாமல் இரண்டு கேளுங்கள் ; என்றார். சரி, கேட்டுப் பார்க்கின்றேன் , என்றேன். அதேபோல் அவருக்கு கொடுத்த வாக்குறுதிக்காக இரண்டு கபினட் அமைச்சைக் கேட்டேன் . ஆனால் மஹிந்த ராஜபக்ச மறுத்து விட்டார்.

இவ்வாறுதான் றிசாட் கபினட் அஅமைச்சராக நியமிக்கப் பட்டார். அல்ஹம்துலில்லாஹ், அன்று மாத்திரம் YLS ஹமீட் மற்றவர்களுடன் சேர்ந்திருந்தால் அந்த கிழக்கு மாகாணத்தவர்தான் கபினட் அமைச்சர் , இன்று கட்சியின் தலைவர். இவர் ஒரு பிரதி அமைச்சராக இருந்திருப்பார் , சிலவேளை, 2010 ம் ஆண்டுத் தேர்தலில் அந்தக் கிழக்கு மாகாணத்தவர் தோற்றதற்குப் பதிலாக இவர் தோற்றிருக்கலாம். அதன் மூலம் அவரது அரசியல் பாதையே மாறியிருக்கலாம் . Shopping bag வெற்று shopping bag ஆகவே இருந்திருக்கலாம் . ஏதோ, அல்லாஹ்வின் நாட்டம் , அல்ஹம்துலில்லாஹ் YLS ஹமீட் என்பவரை சபபாக ( காரணி) வைத்து அவர் இந்த நிலைக்குவர அவன் வழியமைத்தான். அப்படிபட்டவர்தான் YLS ஹமீட் பாராளுமன்றம் செல்லக் கூடாது, என்பதற்காக தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே சதித் திட்டம் தீட்டி அரங்கேற்றியிருக்கின்றார்.

YLS ஹமீட்டை எதற்காக சதி செய்து பாராளுமன்றம் செல்வதிலிருந்து றிசாட் தடுக்க வேண்டும். தான் இந்த நிலைமைக்கு வருவதற்கு அல்ஹம்துலில்லாஹ் , பங்களிப்பச் செய்த ஒருவருக்கெதிராக ஏன் இந்த சதியை செய்ய வேண்டும். சினிமாவில் வில்லன்களை, அரக்கத்தனமான தாதாக்களைப் பார்திருக்கின்றோம். அப்படிபட்ட தாதாக்கள் கூட, தன்னுடன் விசுவாசமாக , தனது முன்னேற்றத்திற்கு கால்கோளாய் இருந்த ஒருவருக்கு இப்படி ஒரு துரோகத்தை, சதியை செய்திருக்க மாட்டான் . அவ்வாறெனில் YLS ஹமீட் பாராளுமன்றம் செல்வதில் றிசாட்டிற்கு ஏதாவது பிரச்சினை இருக்க வேண்டும். அவ்வாறாயின் என்ன அந்த பிரச்சினை. றிசாட்டிற்கு இருந்த அச்சமென்ன?

அதே நேரம் , YLS ஹமீட் ஒரு தேசியப்பட்டியலுக்காக அல்லது எவ்வாறாவது பாராளுமன்ற கதிரையைப் பிடிப்பதற்காகவா, றிசாட்டுடன் அணி சேர்ந்தார் . அன்று நாங்கள் மு. கா வை விட்டு வெளியேறியபோது எமக்கு ஒரு கட்சியை அமைக்கின்ற எந்த சிந்தனையும் இருக்கவில்லை . அதே நேரம் மு கா வில் இருந்து விலகாமல் இருந்திருந்தால் 2010ம் ஆண்டு YLS ஹமீட்தான் கல்முனையில் போட்டியிட்டுருப்பார். அன்றைய சூழ்நிலையில் கட்சி கூட இல்லாமல், றிசாட் வெளியில் வருவதற்கே பயந்துகொண்டிருந்த, றிசாட் ஒரு துரோகி என்று றிசாட்டின் பெயரைக் கேட்டாலே மக்கள் வெறுப்பை உமிழிய ஒருகாலத்தில் ( இன்று றிசாட்டின் கூலிக்காக புகழ் பாடுகின்ற பலர் அன்று அந்த வரிசையில்தான் இருந்திருப்பார்கள்) றிசாட்டுடன் இணைந்து தேர்தல் மூலமோ அல்லது தேசியப் பட்டியல் மூலமோ பாராளுமன்றம் செல்லலாம் ; என்று நம்புகின்ற அளவு YLS ஹமீட் அரசியல் குழந்தையாக இருக்கவில்லை ; அல்ஹம்துலில்லாஹ் . அன்றைய வெளியேற்றம் YLS ஹமீட்டைப் பொறுத்தவரையில் ஒரு கொள்கையின் அடிப்படையில் அமைந்திருந்தது . அது தொடர்பான விரிவான விளக்கத்தை எனது அரசியலமைப்புச் சட்டமாற்றம் தொடர்பான எனது தொடர்கட்டுரையில் கூறியிருக்கின்றேன்.

அல்ஹம்துலில்லாஹ், YLS ஹமீட்டிற்கு யாருடைய காலைப்பிடித்தாவது பாராளுமன்றம் செல்லவேண்டிய தேவை இருக்கவில்லை . 2004ம் ஆண்டு ஒரு சாதாரண பா. வான றிசாட்டை நம்பி பாராளுமன்றம் செல்வதற்காக YLS ஹமீட் வெளியில் வரவில்லை . 2015ம் ஆண்டு இயல்பாக பாராளுமன்றம் செல்லக் கூடிய களநிலவரம் உருவானபோது தேர்தலில் போட்டியிடுகின்ற நோக்கத்தில்தான் கட்சியின் கட்டமைப்புக்களை நிறுவுகின்ற பணியைச் செய்தார். மறைந்த தலைவருடன் அல்ஹம்துலில்லாஹ் லட்சியப் பயணத்தில் ஈடுபட்டவர்கள் நாங்கள் . 30 வருடங்களை அதில் செலவிட்டிருக்கின்றோம். எனவே அந்த லட்சியத்தை அடைவதற்கு பாராளுமன்ற பிரவேசம் இன்றியமையாததாகும். குறிப்பாக, புதிய அரசியலமைப்புச் சட்டவிடயத்தில் , விஷேசமாக அதிகாரப் பகிர்வு விடயத்தில் ஓரளவாவது காத்திரமான பங்களிப்பைச் செய்யலாம்; என்று நம்பினோம். அன்று இலங்கை இந்திய ஒப்பந்தம் வடகிழக்கில் முஸ்லிம்களை அரசியல் அடிமைகளாக ஆக்கிய வரலாறும் அதிலிருந்து முஸ்லீம்கள் விடுதலைபெறவேண்டுமன்ற வேணவாவும் தனித்துவ அரசியலின் இலட்சியப் பயணத்தில் பிரதானபாகமாகும். எனவே அந்த லட்சியத்தை அடைவதற்கு முடிந்த பங்களிப்பைச் செய்வதற்கு இம்முறை பாராளுமன்றத்தைப் பயன்படுத்தலாம்; என்ற ஓர் எதிர்பார்ப்பு என்னுள் இருந்தது . ஆனால் அது சதிகளால் தடுத்து நிறுத்தப் பட்டது. எனவே, அதனால் பாதிக்கப் பட்டது YLS ஹமீட் அல்ல. பரவாயில்லை . அதனைத் தடுத்து நிறுத்தினீர்கள். அதே நேரம் இன்றுவரை அரசாங்கத்திற்கு நீங்கள் ஒரு வரைபைக் கூட கொடுக்கவில்லை . அவை ஒருபுறம் இருக்கட்டும் . அந்த சதியோடு நிறுத்தியிருக்கலாம். ஆனால் போலி முகநூலில் பொய்செய்தி வரவைத்து ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர் மாநாடு கூட்டப்பட்டு அவமானப் படுத்தப் பட்டேன். ஏன்? எதற்காக? சதிசெய்தது நீங்கள் . சந்தியில் வைத்து அவமானப் படுத்தப்படுவது YLS ஹமீட்டா? உங்களை அவமானப்படுத்த படைத்தவனுக்கு எவ்வளவு நேரம் தேவை? அத்தோடு நிறுத்தினீர்களா? பத்து வேட்பாளர்களின் பெயரில் எனக்கெதிராக கூலியாட்களை வைத்து அபாண்டங்களைக் கட்டவிழ்த்து அறிக்கை விடப்பட்டது ? ஏன் . மனச்சாட்சியுள்ள எந்த மனிதனும் செய்வானா?


முஸ்லிம்கள் உலகில் மிகவும் கெட்டவர்களகப் பார்ப்பது யஹூதிகளை. அவ்வாறான ஒரு யஹூதிகூட, தன்னுடன் இருந்த, தனக்கு கதிரை கிடைக்க உதவிய ஒருவனுக்கு அதே கதிரையைப் பாவித்து அநியாயம் செய்தது மட்டுமல்லாமல் அடுத்து, அடுத்து அவமானப் படுத்துகின்ற ஈனச் செயலை செய்திருக்க மாட்டான் . அவ்வாறு செய்யக்கூடிய மனம் றிசாட்டிற்கு இருந்தது. ( தொடரும்)

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top