இந்தியாவின் தாக்குதலால் எல்லையில் பதற்றம்

பாகிஸ்தான் அமைச்சரவை அவசர ஆலோசனை


ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு பிராந்தியத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள பலூரா கிராமத்தில் இருந்து குதிரை வண்டி மூலம் வெளியேறும் கிராமத்தினர்.



இந்தியாவின் தாக்குதலால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இதையொட்டி பாகிஸ்தான் அமைச்சரவை அவசரமாக கூடி ஆலோசனை நடத்தியது. அதில் பேசிய பிரதமர் நவாஸ் ஷெரீப், “தாய்நாட்டை காப்போம்என கூறியுள்ளார்.

பாகிஸ்தான் தீவிரவாதிகள், காஷ்மீரில் உள்ள உரி ராணுவ முகாமில் கடந்த மாதம் 18-ந் திகதி அதிரடித் தாக்குதல்கள் நடத்தி 19 வீரர்களை கொன்றனர். இது இந்தியா முழுவதும், அந்த நாட்டின் மீது கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து, இந்திய ராணுவத்தின் கமாண்டோக்கள் அங்கு விரைந்து, 28-ந் திகதி நள்ளிரவு தொடங்கி 29-ந் திகதி அதிகாலை வரையில் தாக்குதல்கள் தொடுத்தனர். இதில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 38 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் நாட்டின் சிப்பாய்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல்கள் பற்றி, பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகள் பிரிவின் தலைமை இயக்குனரை, இந்திய ராணுவ நடவடிக்கைகள் பிரிவின் தலைமை இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் ரன்பீர் சிங் தொடர்பு கொண்டு, எடுத்துக்கூறியுள்ளார்.
இந்தியாவின் அதிரடி தாக்குதலால் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமைச்சரைவையின் அவசர கூட்டத்தை பிரதமர் நவாஸ் ஷெரீப் நேற்று கூட்டினார். இதில் எல்லை நிலவரம், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிய வருகிறது.

இந்த கூட்டத்தில் நவாஸ் ஷெரீப் பேசினார். அப்போது அவர்,
 “எந்தவொரு தாக்குதலுக்கு எதிராகவும் நாம் நமது தாய்நாட்டை காப்போம். நமது பாதுகாப்பு படையினருடன் ஒட்டுமொத்த நாடும் தோளோடு தோள் சேர்ந்து நிற்கிறதுஎன கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், “காஷ்மீர், தேசப்பிரிவினையில் முடிவுக்கு வராத விவகாரம். அதை அப்படியே விட்டு விட முடியாது. இந்தியாவின் வன்கொடுமைகள், காஷ்மீரி மக்களின் பேரார்வத்தை ஒடுக்கி விட முடியாதுஎன கூறினார்.

அத்துடன், “வறுமை, வேலை இல்லா திண்டாட்டம் ஆகியவற்றை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற நாட்டின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு சமாதானம் அவசியம், ஆனால் பகைமை என்று வருகிறபோது, நாடு பாதுகாக்கப்படவேண்டும்என கூறினார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, “இந்தியா வலிய வந்து நடத்திய தாக்குதல், பிராந்திய அமைதி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. எந்த வடிவத்தில் இந்தியாவில் ஆக்கிரமிப்பு வந்தாலும், அதை முறியடிப்பதற்கு தலைமையும், பாகிஸ்தான் மக்களும் ஒன்றுபட்டு நிற்கின்றனர்எனவும் கூறினார்.

எல்லை பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் மீது இந்தியா துல்லியமான தாக்குதல்கள் நடத்தியதை பாகிஸ்தான் அமைச்சரவை நிராகரித்தது. மாறாக, இந்தியா எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், அதில் பாகிஸ்தான் சிப்பாய்கள் 2 பேர் உயிரிழந்தாகவும் கூறியது. மேலும், இரு தரப்பு உடன்பாடுகள் மற்றும் சர்வதேச சட்டத்தை மீறி, இந்தியா செயல்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை குற்றம் சாட்டியது.

அமைச்சரவை கூட்டத்துக்கு முன்னதாக இந்தியாவின் தாக்குதல் பற்றி கருத்து தெரிவித்த பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப், “பாகிஸ்தான் பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை. அதே நேரத்தில் எந்தவொரு நிகழ்வையும் சந்திக்க தயாராக உள்ளதுஎன்று கூறினார்.


இதற்கிடையே பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அன்வர் ஜமீர் ஜமாலி, வரும் 21-23 திகதிகளில் இந்தியாவில் நடக்க உள்ள உலகளாவிய மாநாட்டில் பங்கேற்க இருந்த பயணத்தை ரத்து செய்து விட்டார். தற்போதைய சூழலை அவர் காரணம் காட்டி உள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top