உண்மையை பகிரங்கமாகச் சொல்வதாக இருந்தால்,
சம்பந்தப்பட்டவர் அருகில் இருக்க வேண்டும்.
நானும் அவரும் கண்களைப் பார்த்துப் பேச வேண்டும்
வசந்தம்
தொலைக்காட்சியின் அதிர்வு நிகழ்வில் பசீர் சேகுதாவூத்
வால்பிடித்து, கால் பிடித்து, தோள் பிடித்து என்னுடைய அரசியலைச்
செய்து நான் பழக்கப்படவில்லை. கட்சிக்குள் பிரச்சினைகள் வரும்போது கேள்வி கேட்பதற்கும்,
கேள்விகளுக்குச் சரியான பதில்கள் கிடைக்காதபோது, மேலதிகமாகக் கேள்வி கேட்பதற்கும் பழக்கப்பட்ட
அரசியலில் இருந்து நான் வந்தேன்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, அவரின் ஆட்சிக் காலத்தில் மு.காங்கிரஸ் ஏன் ஆதரவளிக்க நேர்ந்தது என்கிற கேள்விக்கு விடைசொல்வது, முஸ்லிம் காங்கிரஸை இல்லாமல் செய்வதற்குச் சமனானதாகும் என்று, மு.காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
அந்த விடயத்தினை, தான் பேச வேண்டுமாக இருந்தால், கட்சியின் தலைவர் ஒரு பகிரங்க நிகழ்வில் தன்னுடன் பங்குகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
வசந்தம் தொலைக்காட்சியின் அதிர்வு நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இந்த விடயத்தைக் கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;
“மு.காங்கிரசின் யாப்பினை மாற்றி, தலைவரும் செயலாளரும் ஒருவரே இருப்பது போன்ற சோடிப்பொன்று அந்தக் கட்சிக்குள் நடந்த பின்னர்தான், கட்சியின் தவறுகள் தொடர்பில், வெளியில் வந்து பேசத் தொடங்கினேன்.
இந்த சோடிப்பு நடைபெறுவதற்கு முன்பு, கடந்த 10 வருடங்களாக, கட்சிக்குள்ளும், அதன் உயர்பீடக் கூட்டங்களிலும் மட்டுமே எனது விமர்சனங்களை முன்வைத்து வந்தேன்.
கடந்த காலங்களில் கட்சிக்குள் எனது விமர்சனங்களை முன்வைத்த போதெல்லாம், அதனைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதன்பின்னர் சென்று விடுவார்கள். எனது விமர்சனங்கள் தொடர்பில் எதுவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கட்சி என்பது மிகச் சிறியது. சமுதாயம் என்பது மிகவும் பெயரியது. கட்சிக்குள் திருத்தம் வரவில்லையென்றால், மக்களுக்குள் செல்வதைத் தவிர வேறு வழிகளில்லை. கட்சிக்குள் குந்திப் பேசிக் கொண்டிருப்பதால் மட்டும் எதுவும் செய்து விட முடியாது.
கட்சியைத் தூய்மைப்படுத்த வேண்டும். அத்தோடு என்னையும் தூய்மைப்படுத்த வேண்டும் என எண்ணுகிறேன்.
வால்பிடித்து, கால் பிடித்து, தோள் பிடித்து என்னுடைய அரசியலைச் செய்து நான் பழக்கப்படவில்லை. கட்சிக்குள் பிரச்சினைகள் வரும்போது கேள்வி கேட்பதற்கும், கேள்விகளுக்குச் சரியான பதில்கள் கிடைக்காதபோது, மேலதிகமாகக் கேள்வி கேட்பதற்கும் பழக்கப்பட்ட அரசியலில் இருந்து நான் வந்தேன்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஏன் அவருடன் உறவுகொள்ள வேண்டி வந்தது, ஏன் அவரின் கோரிக்கைகளுக்குத் தலைசாய்க்க வேண்டி வந்தது போன்ற கேள்விகளுக்கு விடைசொல்வது, முஸ்லிம் காங்கிரஸை இல்லாமல் செய்வதற்குச் சமனானதாகும். எனவே, ஒரு பகிரங்கமான நிகழ்வில் அதைச் சொல்வதற்கு நான் விரும்பவில்லை. ஆனால், கட்சியின் தலைவர் இவ்வாறானதொரு நிகழ்வில் என்னுடன் கலந்துகொண்டால், அது தொடர்பில் நான் பேசுவேன்.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது, 2010 ஆம் ஆண்டு அவரின் ஆட்சியில் மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டு சென்று, நான் சேர்த்ததாகக் கூறப்படும் கதையில் உண்மையில்லை. நான் யாரையும் கொண்டு சென்று சேர்க்கவில்லை. அப்படி தரகர் வேலை பார்த்து எனக்குப் பழக்கமில்லை. அரசியல் தரகராக நான் ஒரு காலமும் இருந்ததில்லை. மஹிந்தவுடன் இணையும் செயற்பாடானது கட்சியினுடைய ஒரு வேலைத் திட்டமாகத்தான் நடைபெற்றது.
2005ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் பெரியதொரு அரசியல் மிரட்டல் இருந்தது. அதன் காரணமாகவே, மஹிந்தவுக்கு மு.கா. ஆதரவளிக்க நேர்ந்தது. நான் தனிப்பட்ட அரசியல் செய்வதாக இருந்தால், அந்த மிரட்டல் எதுவென்று சொல்ல வேண்டும். ஆனால், இப்போது சொல்ல மாட்டேன். சொல்வதாக இருந்தால், சம்பந்தப்பட்டவர் அருகில் இருக்க வேண்டும். நானும் அவரும் கண்களைப் பார்த்துப் பேச வேண்டும். அந்த உண்மைகளை மறுக்க முடியாது. அது தொடர்பில் நான் ஆதாரங்களை வைத்திருக்கிறேன்” என்றார்.
0 comments:
Post a Comment