சர்வதேச அளவில் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை கையாளும்

டுபாய் விமான நிலையத்தை அரை மணிநேரம்
மூடவைத்த ஆளில்லா மர்ம விமானம்



உலகின் மிகவும் சுறுசுறுப்பான டுபாய் சர்வதேச விமான நிலையத்தின் அருகே இன்று காலை பறந்த ஆளில்லா மர்ம விமானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த ஆளில்லா விமானம் ஏற்படுத்திய பீதியால் அரை மணி நேரத்துக்கு விமான போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது.
சர்வதேச அளவில் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை கையாள்வதன் மூலம் உலகின் மிகவும் சுறுசுறுப்பான விமான நிலையமாக டுபாய் சர்வதேச விமான நிலையம் விளங்கி வருகிறது. இங்கிருந்து உலகில் உள்ள சுமார் 260 முக்கிய பெரு நகரங்களுக்கு நாள்தோறும் நூற்றுக்கும் அதிகமான விமானங்கள் புறப்பட்டு செல்கின்றன.
கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 8 கோடி மக்கள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், (உள்ளூர் நேரப்படி) இன்று காலை சுமார் 8 மணியளவில் டுபாய் விமான நிலையத்தை ஒட்டியுள்ள வான்எல்லையில் ஆளில்லா மர்ம விமானம் ஒன்று சுற்றிச்சுற்றி வட்டமிட்டு பறந்து வந்தது.

இதையறிந்த விமான நிலைய அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர். இதையடுத்து, டுபாய் விமான நிலையத்தில் தரை இறங்க அனுமதி கேட்டிருந்த விமானங்கள் மற்றும் அங்கிருந்து புறப்பட்டு செல்ல வேண்டிய சில விமானங்கள் உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டன. விமான நிலையம் அரை மணி நேரத்துக்கு மூடப்பட்டது.

பின்னர், அரை மணிநேரம் கழித்து அந்த விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. டுபாய் நாட்டில் விமான நிலையங்களுக்குட்பட்ட சுமார் 5 கிலோமீட்டர் சுற்றுப்புறத்தில் தனியாருக்கு சொந்தமான ஆளில்லா விமானங்களை பறக்க விடக்கூடாது. லேசர் ஒளியை பாய்ச்சுவது, கேமராக்களால் படம் பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என அந்நாட்டின் அரசு ஏற்கனவே கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது.


இருப்பினும், அத்துமீறலாக சில வேளைகளில் இதுபோல் சில ஆளில்லா மர்ம விமானங்கள் அவ்வப்போது பறக்கும் சம்பவங்களும் இங்கு நிகழந்தவாறு உள்ளன. கடந்த ஜூன் மாதம் 12-ம் திகதி இதேபோல் பறந்த ஒரு ஆளில்லா விமானம் ஏற்படுத்திய பீதியால் டுபாய் சர்வதேச விமான நிலையம் சுமார் 70 நிமிடங்கள்வரை மூடப்பட்டது, நினைவிருக்கலாம்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top