இரவானால் அச்சத்தில் மூழ்கும் ஏறாவூர்;

இரட்டைப் படுகொலையின் எதிரொலி

புங்குடுதீவு மாணவி வித்தியா,சிறுமி சேயா போன்றவர்களின் பாலியல் வல்லுறவுக் கொலைச் சம்பவங்கள் முழு இலங்கையையும் உலுக்கியதை நாம் அறிவோம்.அந்த வரிசையில் இப்போது இணைந்துள்ளது ஏறாவூர் இரட்டைப் படுகொலை சம்பவம்.

புனித ஹஜ் பெருநாளைக்கு முதல் தினமான அரபா நோன்பு தினம் 11-09-2016 அன்று இந்தப் படுகொலை அரங்கேற்றப்பட்டு முழு ஊரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

அன்றைய தினம் நள்ளிரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தாயும் மகளும் கொடூரமானமுறையில் அடித்துக் கொல்லப்பட்ட செய்தி மறுநாள் நன்பகள்தான்  அயல் வீட்டாருக்கே தெரிய வந்தது;ஊரை அச்சத்தில் மூழ்கடித்தது.

கொலை செய்யப்பட்ட மகளின் கணவர் வெளிநாட்டில் தொழில் புரிந்து வந்ததால் அந்தத் தாயும் மகளும்தான் வீட்டில் வசித்து வந்தனர்.இந்தச் சந்தர்ப்பத்தை சாதகமாக்கிக் கொண்ட கொலையாளிகள் வீட்டின் கூரையைப் பிரித்து உள்ளே ங்கி இந்தக் கொலையைப் புரிந்துள்ளனர்.

பொலிஸாரின் தீவிர வேட்டையாலும் ஊர் மக்களின் ஒத்துழைப்பாலும் கொலை இடம்பெற்று ஒரு வாரத்தில் சந்தேகநபர்கள் பிடிபட்டனர்;விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.விசாரணைகள் தொடர்கின்றன.

இந்தக் கொலை ஒரு குடும்பத்துக்கு இழைக்கப்பட்ட கொடுமையாக அல்லாது முழு ஊருக்கும் இழைக்கப்பட்ட கொடுமையாக ஊர் மக்கள் கருதுவதால் கொலையாளிகளுக்கு மரண தண்டனை கிடைக்கும்வரை இதில் இருந்து பின்வாங்குவதில்லை என்ற நிலைப்பாட்டில் மக்கள் உள்ளனர்.

கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட அன்றைய தினமும் கடந்த வாரம் வியாழக் கிழமையும் ஊர் மக்கள் கவன ஈர்ப்புப் போராட்டங்களை நடத்தினர்.கடந்த வாரம் நடத்தப்பட்ட கடையடைப்பு மற்றும் மனிதச் சங்கிலி போராட்டம் ஊர் மக்கள் இந்த விடயத்தில் எவ்வளவு தூரம் அக்கறையுடன் இருக்கின்றனர் என்பதையும் ஒவ்வொருவரும் தங்களின் பிரச்சினைகளாகவே இதை பார்க்கின்றனர் என்பதையும் வெளிக்காட்டின.

ஹர்த்தால் என்றால் பொதுவாக பிரதான வீதிகளில்-பஸார்களில் இருக்கும் கடைகள் மாத்திரமே  பூட்டப்படுவது வழமை.ஆனால்,இந்த ஹர்த்தாலின்போது மூலை முடுக்குகளில் உள்ள கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு மக்கள் பூரண ஒத்துழைப்பை இந்த ஹர்த்தாலுக்கு வழங்கினர்.அது மாத்திரமன்றி பெண்களும் பதாதைகளை ஏந்தியவாறு இந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்தப் போராட்டங்கள் எவையும் பொலிஸாருக்கு எதிரானதாக இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.கொலையாளிகளுக்கு மரண தண்டனையையும் பொலிஸாருக்கு ஒத்துழைப்பையும் பெற்றுக்கொடுப்பதே இந்தப் போராட்டத்தின் நோக்கமாக இருந்தது.

சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதால் இறுதி முடிவை மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். கொலையாளிகளுக்கு சாதகமாக அமையும் என்றால் அதற்கு எதிரான நடவடிக்கையை எடுப்பதற்கும் மக்கள் தயாராக இருக்கின்றனர்.

இந்தக் கொலை இடம்பெற்று 20 நாட்கள் ஆகின்றபோதிலும்,ஏறாவூர் இன்னும் அச்சத்தில் இருந்து விடுபடவில்லை.இரவானால் ஒருவகையான அச்சம் முழு ஊரையும் ஆட்கொண்டுவிடுகின்றது.ஆண் துணை இல்லாமல் வாழும் பெண்கள் வீட்டில் தனியாகத் தூங்குவதற்கு அச்சப்படுகின்றனர்.

நான்கைந்து வீடுகளில் உள்ளவர்கள் ஒன்றிணைந்து ஒரு வீட்டில் தூங்குகின்றனர்.தமது மனைவிமாரை-குழந்தைகளை தனியாக விட்டு வெளிநாடுகளில் தொழில்புரியும் ஆண்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்க கொண்டுதான் வாழ்கின்றனர்;நிம்மதி இழந்து தவிக்கின்றனர்.நடுநிசியில் தங்களின் வீடுகளுக்குத் தொலைபேசி அழைப்புகளை எடுத்து நிலைமையை விசாரிக்கின்றனர்.வீட்டுக்கு வெளியே ஏதாவது சத்தம் கேட்கிறதா என்று தேடுகின்றனர்.

வெளிநாடுகளில்-வெளி ஊர்களில் தொழில்புரியும் தங்களது தந்தைமார்களை அவர்களது குழந்தைகள் வீட்டுக்கு வருமாறு கதறி அழைக்கின்றனர்.தொழிலை விட்டுவிட்டு வீடுகளில் வந்து இருக்குமாறு கேற்கின்றனர்.மாலை ஆறு மணியானதும் ஆண்கள் வீடுகளை விட்டு வெளியே செல்வதற்கு வீட்டுப் பெண்கள் அனுமதிப்பதில்லை.

நடுநிசியில் நாய்கள் சாதாரணமாகக் குறைத்தாலும் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் விழிப்படைந்துவிடுகின்றனர்.ஆள் நடமாட்டத்தைப் பார்த்துத்தான் இவ்வாறு குறைக்கின்றதோ என்று அஞ்சுகின்றனர்.விடிந்ததும் எல்லா வேலைகளையும் வைத்து விட்டு அந்த நாய்கள் குறைத்ததற்கான காரணத்தையே தேடுகின்றனர்.

இவ்வாறு ஏறாவூர் மக்கள் ஒவ்வொரு இரவையும் அச்சத்துடனேயே கழிக்கின்றனர்.இதுபோக,அவ்வப்போது பரவுகின்ற வதந்தியால் அச்சம் மேலோங்கிக் காணப்படுகின்றது.

ஒவ்வொருத்தரும் தங்கள் பெண்களின் பாதுகாப்புப் பற்றியே கவலைப்படுகின்றனர்.மிகவும் சன நெருக்கடிமிக்க-பிரதான வீதியை அண்டிய இடத்தில் இந்தக் கொலை இடம்பெற்றிருப்பதால் சன நெருக்கடி இல்லாத இடத்தில் வாழும் மக்கள் மிகுந்த அச்சத்தில் வாழ்கின்றனர்.

கொலைச் சந்தேகநபர்களை கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருக்கும் பாதுகாப்புக் கமராவே காட்டிக் கொடுத்திருப்பதால் சிலர் வீடுகளுக்கும் கடைகளுக்கும் பாதுகாப்புக்கு கமராவைப் பொருத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.சிலர் வேறு வகையான பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் யோசிக்கின்றனர்.

இவ்வாறு தொடர்ந்தும் ஒரு ஊர் அச்சத்தில் மூழ்கி இருப்பது ஆரோக்கியமான விடயம் அல்ல.குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கும்வரை இந்த அச்சம் நீடிக்கும் என்பது உறுதி.

பணத்தாலோ அல்லது சட்டத்தரணிகள் திறமையான வாதத்தாலோ குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவார்களேயானால் ஊரின் நிலைமை மிக மோசமாக அமைந்துவிடும் என்பதும் உறுதி.

குற்றவாளிகளின் விடுதலையானது ஊருக்கு மேலும் ஆபத்தை ஏற்படுத்தக்க்கூடியதாகவோ அல்லது அந்தக் குற்றவாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாகவோ அமையலாம்.ஊர் மக்களின் பொதுவான கருத்து இவ்வாறுதான் இருக்கின்றது.

ஆகவே,சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்ய வேண்டும்.மக்கள் சட்டத்தைக் கையினுள் எடுக்கும் மோசமான நிலைமையை சட்டம் செய்துவிடக்கூடாது.எல்லாவற்றுக்கும் மேலாக,இவ்வாறான குற்றச் செயல்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுவது மாத்திரமன்றி அது நிறைவேற்றப்பட்ட வேண்டும் என்ற மக்களின் நிலைப்பாடு மேலோங்கி இருப்பதையும் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

இவ்வாறான பாலியல் வல்லுறவு மற்றும் கொலைகள் இடம்பெறுகின்றபோது மாத்திரம் அனைவரும் அனைவரும் இஸ்லாமிய சட்டத்தின் தேவை பற்றி உணருகின்றனர்.அந்தத் தண்டனைதான் தேவை என்று கூக்குரல் இடுகின்றனர்;பின்பு மறந்துவிடுகின்றனர்.

இது நம் எல்லோருக்கும் பொதுவான பிரச்சினை என்று உணர்ந்து மக்கள் எல்லோரும் ஒத்த நிலைப்பாட்டை எடுப்பார்களேயானால்-அரசுக்கு பாரிய அழுத்தத்தை கொடுப்பார்களேயானால் மரண தண்டனையை நிறைவேற்றுவதை அரசு சட்டமாக்கக்கூடும்.

மரண தண்டனை நிறைவேற்றப்படுகின்றது என்றால்-அதுவும் விரைவாக நிறைவேற்றப்படுகின்றது என்றால் நாட்டில் குற்றங்கள் வெகுவாகக் குறையும்.மக்கள்-நாங்கள் இவ்வாறான ஆபத்துக்களில் இருந்து விடுபட்டு நிம்மதியாக வாழலாம்.கடுமையான தண்டனைதான் குற்றங்களைக் குறைக்கும் என்ற கருத்து என்றைக்குமே பொய்க்காது.

 [ எம்..முபாறக் ]








0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top