சிறுபான்மைக் கட்சிகளின் உறுப்பினர்கள்
50 பேரே பாராளுமன்றத்தில் உள்ளனர்.

வடக்கு, கிழக்கு இணைப்பு சாத்தியமற்றது!

அமைச்சர் ரவுப் ஹக்கீம்


இரண்டு மாகாண முதலமைச்சர்களை பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் உள்ள நிலையில் ஒருவரைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சியை எடுப்பது புத்திசாலித்தனமல்ல என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொலைக் காட்சி ஒன்றின் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் (அதிர்வு) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, பொதுவான பிரச்சினைகளின் போது இரு மாகாணமும் இணைந்து தீர்மானங்களை முன்னெடுப்பதற்கே முயற்சித்தது.

எனது மக்களின் விருப்பு ஒன்றாக இருக்கும் போது கட்சியின் தலைவர் என்ற வகையில், நான் அதற்கு முரணாக செயற்பட முடியாது.

சில இனவாத அரசியல் சக்திகளும், அரசியல்வாதிகளும் கூட இந்த வடக்கு, கிழக்கு இணைவதைப் பற்றி அலட்டிக் கொள்கின்றனர். இந்த வடக்கு கிழக்குப் பிரச்சினை பெரும்பான்மை சமூகம் மனம் வைத்தாலேயொழிய சாத்தியமற்றது.

வடக்கு கிழக்கு இணைப்புச் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அறுதிப் பொரும்பான்மை அவசியம். இது சாத்தியமற்றது.

சிறுபான்மைக் கட்சிகளின் உறுப்பினர்கள் சுமார் 50 பேரே பாராளுமன்றத்தில் உள்ளனர். ஏனைய சகலரும் பெரும்பான்மை சமூகத்தின் உறுப்பினர்கள். இதனால், இந்த சட்டத்தை நிறைவேற்ற பெரும்பான்மை சமூகம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. இதனால், பாராளுமன்றத்தில் இந்த சட்டம் சாத்தியமற்றது.


இது இவ்வாறிருக்கையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உட்பட பலரும்  இந்த வடக்கு கிழக்கு இணைப்பை பிரச்சினைக்குரிய ஒரு பாரிய அம்சமாக பேசிவருகின்றனர் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top