‘என்ன ஆச்சு எங்கள் ‘அம்மாவுக்கு?’
அ.தி.மு.க. அதிகார மையத்துக்கு ஒரு தொண்டனின் கடிதம்!

எம்.ஜி.ஆர் எனும் ஆளுமை உருவாக்கிய ஜெயலலிதா எனும் சகாப்தம் கட்டிக்காத்த .தி.மு.-வின் இப்போதைய அதிகார மையத்துக்கு ஒரு தொண்டனின் கடிதம் இது..!

நேற்று ராஜாஜி அரங்கத்தில், மெரினாவில் லட்சக்கணக்கில் கூடி நின்ற அதிகாரமற்ற எளிய தொண்டர்களின் கண்ணீரை மொழியாக்க முடியாது. நிச்சயம் அந்தளவுக்கான சொல்வளம் இந்த சாமான்ய தொண்டனிடம் இல்லை. அந்தளவுக்கு வேதனையிலும் பேரிழப்பிலும் சோர்ந்து சுருண்டிருக்கிறோம். ஆனால், இத்தனை வேதனைகளுக்கு மத்தியிலும் உங்களிடம் கேட்க எங்களுக்கு சில கேள்விகள் உள்ளன

முதலில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வெறும் காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு என்று தானே சொன்னீர்கள்..! பின் நுரையீரலில் பிரச்னை என்றீர்கள். சில தினங்களுக்குப் பிறகு ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார் என்றீர்கள். அதன் பின், ஜெயலலிதா வீடு திரும்புவதை, ஜெயலலிதாவே முடிவு செய்ய வேண்டும் என்றீர்கள். உண்மையில் சொல்லுங்கள்இந்த 75 நாட்களில் என்ன நடந்தது ஜெயலலிதாவுக்கு...?

மேலுள்ள பத்தியில்சொன்னீர்கள்’... ‘என்றீர்கள்’... போன்ற பதங்கள் இருக்கின்றன அல்லவா... அது எதுவும் அரசு நிர்வாகத்தைக் குறிப்பவை அல்ல. அனைத்தும் அப்போலோவை குறிப்பவை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மருத்துவமனையில் இருக்கும்போது, அவர்கள் உடல்நிலை குறித்து மக்களிடம் தெரிவிக்க வேண்டியது அரசா... இல்லை அப்போலோவா...? மக்கள் யாருக்கு வாக்களித்தார்கள். நிச்சயம் அப்போலோவுக்கு இல்லைதானே...?!  ஏன் அரசு மெளனியாக இருந்தது. அதிகாரிகளை தடுத்தது எது... இல்லை யார்...?

அப்போலோவில் ஜெயலலிதாவை நலம் விசாரித்தேன் என்று சொன்னவர்கள் அனைவரும் சந்தித்தேன் என்றுதான் எல்லாம் சொன்னார்களே அன்றி... ’ஜெயலலிதாவைச் சந்தித்தேன்என்று யாரும் சொல்லவில்லை... உண்மையில் ஜெயலலிதாவைச் சந்தித்தது யார்...? அவரை கவனித்துக் கொண்டது யார்...? சசிகலாதான் என்றால்... மத்திய, மாநில மந்திரிகளை தடுக்கும் அளவுக்கு, அவர் மாநில நிர்வாகத்தில் உயரிய பொறுப்பை வகிக்கிறாரா..? இல்லை, .தி.மு. ஆட்சிமன்றக் குழுவில் இருக்கிறாரா அவர்...?  

இந்த 75 நாட்களில் ஒருவரையும் அவர் கண்ணுக்கு காட்டவில்லை, ஒருவருக்கும் அவரைக் கண்ணில் காட்டவில்லை... எதை மறைக்கப் பார்க்கிறார்கள்... யார் மறைக்கப் பார்க்கிறார்கள்...?

ஜெயலலிதா மரணம் என்ற செய்தி டிசம்பர் 5, திங்கட்கிழமை மாலையே தொலைக்காட்சிகளில் ஓடுகிறது. அதுவும் ஜெயா தொலைக்காட்சியில்... அந்தச் செய்தியை ஒளிபரப்பியது யார்...?

எங்கள்அம்மாவை... தமிழக முதல்வரை... மன்னார்குடி குடும்பத்தினர் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது. அவருடைய மரணத்துக்குப் பின்னரும் கூட, அவர்களிடமிருந்து மீட்க... இந்த அரசமைப்பும், அதிகாரிகளும் தவறி விட்டார்கள்!’ என்று கதறுகிறானே .தி.மு.கவின் சாமான்ய தொண்டன். உண்மையா...? உண்மையென்றால், வார்டு மெம்பராகக் கூட இல்லாத சசிகலாவுக்கு  மந்திரிகளும், அதிகாரிகளும் அஞ்சி நடுங்குவது ஏன்...?

ஜெயலலிதா இருக்கும் வரை நடராஜனை போயஸ் தோட்டத்துக்குள் அனுமதிக்கவில்லை. இன்று அவர் அனைத்திலும் முன்னால் நிற்கிறார். இறுதி ஊர்வலத்திலும் செல்கிறார். மோடி அவரிடம் பேசுகிறார். என்ன நடக்கிறது இங்கே...? யார் அவர்...? மாநில அமைச்சரா... இல்லை, அரசு அதிகாரியா...? இல்லை, இன்னும் மக்கள் தொடர்பு இணை இயக்குனரா...?

ஜெயலலிதா சசிகலாவை மட்டும்தான், தன் உடன்பிறவா சகோதரி என்றாரே தவிர... திவாகரனை, மஹாதேவனை, வெங்கடேசனை எல்லாம் அவர் ஏற்றுக் கொள்ளவேயில்லை. ஆனால், நேற்று அவர்கள்தான் ஜெயலலிதாவின் உடல் அருகே நின்றார்கள்ஜெயலலிதாவின் ரத்த உறவான தீபா பாவமாக ஒரு ஓரத்தில் ராஜாஜி அரங்கத்தில் நிற்கிறார். அவரை ஓரங்கட்டுவது ஏன்...? எதனால்...?
இது அனைத்தும் சாமன்ய தொண்டன் எழுப்பும் கேள்விகள்... எளிய கேள்விகள். ஆனால், அர்த்தமான கேள்விகள்இதற்கான விடைகளில்தான், எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட .தி.மு.-வின் எதிர்காலம் இருக்கிறது!


யாரோ ஆட்சி செய்வதற்காக, தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை. குறிப்பாக மன்னார்குடி குடும்பத்தினர் தமிழகத்தில் அதிகார ஆதிக்கம் செலுத்துவதற்காக தமிழர்கள் வாக்களிக்கவில்லை. அதனால்தான், அவர்களால் மன்னார்குடி தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. மக்கள் விரும்பாத ஒரு சாரார், மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது. ஜனநாயகத்துக்கு எதிரானதும் கூட!




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top