அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும்

ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவர்கள் தொடர்பாக
பரப்பப்பட்டு வரும் பொய்யான செய்தி


பொது பல சேனாவுக்கு ஆதரவாக வாதிடுமாறு ஜனாதிபதி சட்டத் தரணி அலி சப்ரி அவர்களைப் பணித்தது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவாகும் என்று சமூக வலைத் தளங்களில் பரப்பப்பட்டு வரும் செய்தி முற்றிலும் பொய்யானதாகும்.

சமூகத்துக்குப் பிழையான தகவல்களை வழங்கி ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கும் இவ்வாறான செயற்பாடுகளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது. இது பற்றி ஜனாதிபதி சட்டத் தரணி அலி சப்ரி அவர்கள் தெளிவு படுத்தம் பொழுது:

' சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் மேற் கூறிய செய்தி முற்றிலும் பொய்யான தாகும். நான் ஒரு போதும் பொது பல சேனாவுக்கு ஆதரவாக வாதாடியதில்லை. SLTJ யின் செயலாளரான அப்துல் ராசிக் அவர்கள் புத்தர் மனித மாமிசம் சாப்பிட்டார் என்று கூறி பௌத்த மதத்தை இழிவு படுத்தியதற்காகவும் பௌத்த மதத்தின் மும்மணிகள் தொடர்பான நம்பிக்கையை அவை வெறும் மூன்று கற்கள் மாத்திரமே என்று கூறி பௌத்த மதத்தை இழிவு படுத்தியதற்காகவும் அவர் மீது பொலிசார் வழக்குத் தொடுத்த போது நான் அவ்வழக்கில் ஆஜராகினேன். அப்துல் ராசிக் அவர்களுக்கு முஸ்லிம்கள் ஒரு போதும் ஆதரவானவர்கள் அல்லர் என்பதையும் அவர் வழி தவறியவர் என்பதையும் அவரது மேற் கூறிய கூற்று இஸ்லாத்திற்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் போதனைக்கும் முற்றிலும் முரணானது என்பதையும் மக்களுக்குக் காண்பிக்கவே நான் இவ்வழக்கில் ஆஜராகினேன். இதன் காரணமாக அப்போது நாட்டில் காணப்பட்ட மோசமான சூழ் நிலையை எம்மால் கட்டுப் படுத்த முடிந்தது. அதே நேரம் இக்குறித்த வழக்கில் அல்குர்ஆனை அவமதித்தமைக்கு ஞானசார தேரருக்கு எதிராக வழக்குத் தொடருமாறு நான் பொலிசாரைக் கேட்டுக் கொண்டேன். பொலிசாரும் அதனை மேற்கொண்டனர். எனவே நான் பொது பல சேனாவுக்கு சார்பாக வாதாடினேன் என்பது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

எனவே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மேற்படி பொய்யான செய்திகளைப் பரப்புவதை விட்டும் தவிர்ந்து கொள்ளுமாறு அனைவரையும் வேண்டிக் கொள்வதோடு உரிய அதிகாரிகள் இவ்வாறான செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கு ஆவன செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றது.
அஷ்ஷைக் - பாழில் பாரூக்
செயலாளர் - ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top