வதந்தி பரப்புகிறார் நடிகை கெளதமி:
அதிமுக குற்றச்சாட்டு!

கெளதமியின் கடிதம் குறித்து அதிமுகவின் செய்தித்தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறும்போது:
அம்மாவின் மரணம் குறித்து விளக்கம் கேட்கும் நடிகை கெளதமி, இன்று மாலையே விமானம் ஏறி டெல்லி சென்று பிரதமர் மோடியிடம் நேரில் விளக்கம் கேட்கலாமே!
அம்மா சிகிச்சை பெற்றபோது அதுகுறித்த விவரங்களைப் பிரதமர் அலுவலகத்தில் இருந்து தினமும் கேட்டறிந்தார்கள். மத்திய அரசின் அதிகாரிகள், அமைச்சர்கள், கவர்னர் எனப் பலரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து அம்மாவின் உடல்நலம் குறித்து விசாரித்தார்கள். அவர்கள் மருத்துவர்களிடம் பேசினார்கள். அம்மாவின் உடல்நிலை குறித்து அதிமுக மட்டுமே தகவல் சொல்லியிருந்தால் கெளதமிக்குச் சந்தேகம் வரலாம்.
ஆனால் பார்க்க வந்த அனைவருமே செய்தியாளர்களிடம் என்ன தெரிவித்தார்கள்? அம்மா நன்றாக உள்ளார். விரைவில் வீடு திரும்புவார் என்று கூறவில்லையா? இது கெளதமிக்குத் தெரியாதா? அம்மாவின் உடல்நிலை குறித்த தகவல்களை எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் மருத்துவர் எனப் பலரும் சொல்லிவந்தார்களே! எய்ம்ஸ் மருத்துவர்கள் அரசு மருத்துவர்கள்தானே! லண்டன் மருத்துவர் அதிமுகவைச் சேர்ந்தவரா?
நேற்றுகூட அப்பல்லோ மருத்துவர்களும் நர்ஸுகளும் அம்மா குறித்து பேசியுள்ளார்கள் இல்லையா! ஒருவர் ஐசியுவில் மருத்துவ சிகிச்சை எடுக்கும்போது யாரும் அவரைப் பார்க்கமுடியாது என்பதுதானே யதார்த்தம்!


அம்மா என்றால் ஒரு பிம்பம் இருக்கிறது இல்லையா, அப்படிதான் அவரை எங்கும் பார்க்கமுடியும். அதைத்தான் அவர் விரும்புவார். அம்மாவை போயஸ் கார்டனில் பார்க்கும்போதும் அவருடைய வழக்கமான தோற்றத்தில் வந்துதான் நம்மைச் சந்திப்பார். எனவே மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும்போது யாரையும் பார்க்க அவர் விரும்பவில்லை. வதந்தி பரப்புபவர்களின் பட்டியலில் கெளதமியும் இணைந்துவிட்டார் என்றுதான் சொல்லமுடியும் என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top