ஜெயலலிதா மரணம் தொடர்பாக மோடிக்கு
கடிதம் எழுதியது ஏன்?
நடிகை கெளதமி விளக்கம்


ஜெயலலிதாவின் மரணம் குறித்து மோடிக்குக் கடிதம் எழுதியது ஏன் என்று நடிகை கெளதமி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை (டிச.5) இரவு 11.30 மணிக்கு மறைந்தார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22-ஆம் திகதி முதல் கடந்த 75 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.4) மாலை 5 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை இரவு வரை அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. தில்லியிலிருந்து எய்ம்ஸ் மருத்துவர்களும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை குறித்து ஆய்வு செய்தனர். இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டார் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நடிகை கெளதமி பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் எழுதியிருப்பதாவது: ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துபவர்களில் நானும் ஒருவர். பெண்கள் தங்களுடைய வாழ்வில் தடைகளைத் தாண்டி ஜெயிப்பதற்கான முன்னுதாரணமாக அவர் உள்ளார். ஆனால் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, அவருக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை, திடீரென உயிரிழந்தது போன்றவை குறித்த கேள்விகளுக்குப் பதில்கள் இல்லை. இந்த விவகாரம் குறித்த விஷயங்கள் மூடிமறைக்கப்பட்டுள்ளன.

அவரை நேரில் பார்த்து விசாரிக்க முக்கியமானவர்களுக்கே அனுமதி அளிக்கப்படவில்லை. தமிழக அரசுக்குத் தலைமை தாங்கியவரின் மருத்துவ சிகிச்சை குறித்து ஏன் இத்தனை ரகசியங்கள்? யாருடைய கட்டளைப்படி அவரைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை? அவருடைய மருத்துவ சிகிச்சை குறித்த முடிவுகளை எடுத்தவர் யார்? மக்களுக்குப் பதில் சொல்லவேண்டிய பொறுப்பு யாரிடம் உள்ளது? இதுதொடர்புடைய கேள்விகள் மக்களிடம் நெருப்பாகக் கொதித்துக்கொண்டிருக்கின்றன. அவற்றை நான் உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.

இக்கேள்விகள் பதிலளிக்கப்படாமல் இருந்துவிடக்கூடாது. மாநில முதல்வரின் மரணம் குறித்த தகவல்களை அறிந்துகொள்ள ஒரு குடிமகனுக்கு உரிமை உண்டு. இந்த விஷயத்தில் நாட்டு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன் என எழுதியுள்ளார்.

இந்தக் கடிதம் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நடிகை கெளதமி அளித்த விளக்கம்:

மருத்துவ சிகிச்சை பற்றி கேள்வி எழுப்புவதை விடவும் என்ன நடந்தது என்று தெரியவேண்டும். இதுகுறித்த ஆர்வமும் உரிமையும் மக்களுக்கு உண்டு. என்ன நடந்தது என்பது கேள்விக்குறியாக உள்ளது. நம் வீட்டில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றாலே நிறைய கேள்விகள் எழுப்பி அதுகுறித்த ஆர்வத்துடன் இருப்போம். எனில் மக்களின் ஆதரவு பெற்ற ஒரு தலைவரின் உடல்நிலை, சிகிச்சை குறித்து அறிந்துகொள்ள மக்களுக்கு எவ்வளவு ஆர்வம் இருக்கும்?


இது என் கேள்வி இல்லை. கோடிக்கணக்கான மக்களின் கேள்வி. மருத்துவ சிகிச்சை விஷயத்தில் யார் என்ன செய்தார்கள் என்பதற்காக நான் கேட்கவில்லை. மாநிலத்துக்கு அடுத்ததாக, நாம் கேள்வி கேட்கவேண்டிய இடம், மத்திய அரசு. மோடி, மக்களில் ஒருவராக உள்ளார். அவரை யாரும் அணுகமுடியும் என்பதுபோல்தான் பிரதமர் நடந்துகொள்கிறார். அவர் தந்த நம்பிக்கையில் கடிதம் எழுதினேன். அவரிடம்தானே நாம் கேள்வி எழுப்பமுடியும் என்று பேட்டியளித்துள்ளார் நடிகை கெளதமி.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top