ஜெயலலிதா சொன்ன குட்டிக் கதைகள்! 
மேலும் மூன்று....

செல்வி ஜெயலலிதா 1991-ம் ஆண்டு முதன்முறையாக ஆட்சிக்கு வந்து, தன்னுடைய ஆளுமைத்திறனை வெளிப்படுத்தினார். மக்களால் முதல் பெண் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 5 ஆண்டுகள் தமிழ்நாட்டை சிறப்பாக ஆட்சி செய்தவர். 1999-ல் இருந்து கட்சிக் கூட்டங்களுக்கோ, இதர விசேஷங்களுக்கோ எப்போது சென்றாலும் தன் கட்சியின் செயல்பாடுகள் பற்றியும், எதிர்க்கட்சி செய்யும் தவறுகள் பற்றியும் குட்டிக்கதைகளாகச் சொல்ல ஆரம்பித்தார். அந்தக் கதைகள், நீதிக்கதைகளாகவும், புராணக்கதைகளாகவும், தழுவியக் கதைகளாகவும் இருக்கும். அவர், இதுபோல் 100-க்கும் மேற்பட்ட கதைகளைச் சொல்லியிருக்கிறார்.
இதோ... அவர் சொன்ன கதைகளில் மேலும் மூன்று!

கதை-3: அன்புள்ள அம்மா!

‘‘ஓர் ஊரில் ஒரு தாய் இருந்தாள். அவள் அன்புத் தாய்... நீதித்தாய். அவளுக்குப் பல பிள்ளைகள் இருந்தார்கள்.
அவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு தொழிலை மேற்கொண்டு... தங்களது குடும்பத்தை மேம்படுத்த, இரவும் பகலும் உழைத்துக் கொண்டிருந்தார்கள். அதில், ஒரு பிள்ளை மட்டும் வீட்டிலேயே இருந்தது. மற்றவர்கள், கொடுக்கும் பணத்தை கணக்கு வைத்துக்கொள்வதுதான் இந்தப் பிள்ளையின் வேலை. மற்றவர்களைக் காட்டிலும் இது கொஞ்சம் படித்திருந்தது. நல்ல உணவு, நல்ல உடை, நல்ல ஓய்வு - இப்படி வசதியாக வாழ்ந்த இந்தப் பிள்ளை அடிக்கடி செலவுக்குப் பணம் கேட்டு அம்மாவைத் தொல்லைப்படுத்தியது. அவரும், கேட்ட பொருளைக் கொடுக்கிறவர்தான்... கேட்காமலும் கொடுக்கிறவர்தான். இந்த நிலையில், அந்த ஆண்டு மழை பெய்யவில்லை... கழனிகள் விளையவில்லை. எனவே, முன்பு கொடுத்ததுபோல் அந்தப் பிள்ளைக்கு இப்போது அம்மாவால் கொடுக்க முடியவில்லை. சட்டியில் இருந்தால்தானே, அகப்பையில் வரும்... அம்மா என்ன செய்ய முடியும்? அம்மா சொன்ன வார்த்தைகளை - அன்பு மொழிகளை - அந்தப் பிள்ளை காதில் வாங்கிக்கொள்ளவில்லை. போதாக்குறைக்கு, உள்ளூர் பணக்காரர் ஒருவரும், அம்மாவை எதிர்க்குமாறு அந்தப் பிள்ளையைத் தூண்டிக்கொண்டே இருந்தார்.
அந்தப் பணக்காரருக்கு எந்தக் குடும்பமும் ஒற்றுமையாக இருந்தால் பிடிக்காது. ‘கோள் மூட்டுவதே தனது கொள்கை... குடி கெடுப்பதே தனது கோட்பாடுஎன்னும் லட்சியத்தோடு வாழ்ந்து வந்தவர் அவர். வீட்டைவிட்டு வெளியே வந்து விடுமாறும், அவ்வாறு வெளியே வந்தால், தான் உறுதியாக ஆதரிப்பதாகவும் அந்தப் படுபாவி பணக்காரர் வாக்குறுதி தந்துகொண்டே இருந்தார்.
அந்தப் பிள்ளையும், அந்தக் கபட மனிதரின் வார்த்தை ஜாலங்களுக்குப் பலியாகி வீட்டைவிட்டுப் போனது. கொஞ்ச நாட்கள் கழிந்தன. அன்பிற்சிறந்த அம்மா, அச்சுறுத்தலுக்குப் பணிந்துவிட மாட்டார் என்பதை அந்தப் பிள்ளை உணர ஆரம்பித்தது. தவறு செய்து விட்டோமோ என்று வருந்தி, தன்னை வீட்டிலேயே மீண்டும் சேர்த்துக்கொள்ளுமாறு அம்மாவிடம் வேண்டுகோள் விடுத்தது. ஆனால், அதற்குள் அம்மாவுக்கும் அந்தப் பிள்ளைக்கும் சமரசம் ஏற்பட்டுவிடாதபடி பார்த்துக்கொண்டார். அத்துடன் அவர், அந்தப் பிள்ளையிடம், ‘வீட்டுக்கு நீ போய்விடாதே, உனக்காக நான் கோர்ட்டுக்கு ஆள் அனுப்பியிருக்கிறேன். ஒரு கை பார்த்துவிடுவோம்என்று கொம்பு சீவிக்கொண்டே இருந்தார். அந்த அடாவடிப் பணக்காரர் யார் என்று உங்களுக்குத் தெரியும். வீட்டைவிட்டு வெளியேறிய பிள்ளை யார் என்ற விவரமும் உங்களுக்கு நன்றாகத் தெரியும். அன்புள்ள அந்த அம்மா யார் என்பதும், அவர் ஆற்றிவரும் அரிய பணிகள் எப்படிப்பட்டவை என்பதும் உங்களுக்கு மிகமிக நன்றாகவே தெரியும்’’.

கதை-4 குருவும்... சீடர்களும்!
                           
‘‘முன்னொரு காலத்தில், பரமார்த்த குரு என்று ஒருவர் இருந்தார். அவருக்கு 16 சீடர்கள் இருந்தார்கள். அந்தச் சீடர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, தங்கள் குருவுக்காக ஒரு குதிரை வாங்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். ஒரு குதிரையை வாங்குவதைவிட, குதிரை முட்டையை வாங்கி அடைகாத்தால், தரமான குதிரைக் குட்டி கிடைக்கும் என்று புத்திசாலித்தனமாக முடிவெடுத்தார்கள். குதிரை முட்டை வாங்க வேண்டும் அல்லவா? அதற்காக இரண்டு சீடர்களைத் தேர்வு செய்து அனுப்பினார்கள். இந்த இரண்டு சீடர்களும் குதிரை முட்டை வாங்க, வெளியூர் சென்றபோது... ஓர் ஊரில், பெரிய அளவில், வெள்ளை நிறத்தில், குவித்து வைக்கப்பட்டிருந்த வெள்ளையான பொருள் ஒன்றைக் கண்டார்கள். இதுவும் ஒரு வகை முட்டைதான் என்று நினைத்து, ‘இந்த முட்டை என்ன விலைஎன்று அங்குள்ள வியாபாரியிடம் கேட்டார்கள். சொன்ன விலையைக் கொடுத்து, முட்டையை வாங்கிய அவர்களுக்கு அதில் பரம திருப்தி. அதை எடுத்துக்கொண்டு வரும் வழியில், இரவு நேரம் ஆகிவிட்டதால்... காட்டில் ஒரு மரத்தின் மேல் உட்கார்ந்துகொண்டார்கள். அரைகுறை தூக்கத்தில், அவர்கள் கையில் இருந்த அந்தப் பொருள், கீழே விழுந்தது. கண் விழித்துப் பார்த்தார்கள். அது விழுந்த இடத்தில் இருந்து, வெள்ளை நிறத்தில் ஒரு சிறிய முயல் குட்டி ஒன்று பாய்ந்து ஓடியது. ஆனால், அது முயல்தான் என்பதைத் தெரிந்து கொள்ளாத அவர்கள், அது குதிரைக்குட்டி என்று முடிவு செய்து... அதனை விடாது துரத்திச் சென்றார்கள்.

ஆனால், அது அவர்கள் கைகளுக்கு அகப்படவில்லை. ஊருக்குத் திரும்பி வந்து, நடந்த நிகழ்ச்சிகளை ஒன்றுவிடாமல், குருவிடம் சொன்னார்கள். எல்லாவற்றையும் கேட்ட குரு, ‘நல்லவேளை... அந்தக் குதிரைக்குட்டி மீது நான் சவாரி செய்து இருந்தால், என் கதை என்னவாகி இருக்கும்என்று நினைத்து வேதனைப்பட்டாராம். அந்தச் சீடர்கள் குதிரை முட்டை என்று நினைத்து வாங்கியது, வெள்ளைப் பூசணிக்காயை. அது, விழுந்த வேகத்தில்... கீழே புதரில் இருந்து ஓடியிருக்கிறது வெள்ளை முயல். அதைத்தான், அந்தப் புத்திசாலி சீடர்கள் குதிரைக்குட்டி என்று நினைத்தார்கள். அந்த பரமார்த்த குருவைப் போன்றவர்களும், அவருடைய சீடர்களைப் போன்றவர்களும் அந்தக் காலத்தில் மட்டுமல்ல, இந்தக் காலத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் யார் என்று நான் அடையாளம் காட்டத் தேவையில்லை. தேர்தல் வெற்றி என்ற குதிரைக் குட்டியை நோக்கி, ஓடிய அவர்களைப் பற்றி, உங்களுக்கு நன்றாகவே தெரியும்’’

கதை-5 உழைப்பை விரும்பு!

‘‘ஒரு மரத்தின் அடியில்... பகல் நேரத்தில், ஓர் இளைஞன் காலை நீட்டி... கைகளைப் பரப்பிப் படுத்துக் கிடந்தான். அந்தப் பக்கம் வந்த ஒரு பெரியவர்... அவனைப் பார்த்து, ‘தம்பி, இந்த வயதிலே உனக்கு இத்தனை சோம்பலா... உழைக்க வேண்டிய வயதல்லவா  இது’’ என்றார். அதற்கு இளைஞன், ‘ஏன் உழைக்க வேண்டும்என திருப்பிக் கேட்டான். ‘பணத்துக்காகஎன்றார் அந்தப் பெரியவர். ‘பணம் எதற்காகஎன்றான் இளைஞன். ‘வீடு, கார் வாங்கலாம்; திருமணம் செய்யலாம்; குழந்தை குட்டிகளோடு மகிழ்ச்சியாய் இருக்கலாம்என்றார் பெரியவர். ‘பிறகு...’ என்றான் இளைஞன். ‘குழந்தைகளைப் படிக்க வைக்கலாம்; வேலை வாங்கித் தரலாம்; நல்ல சம்பளம் வாங்கச் செய்யலாம்என்றார் பெரியவர். இளைஞன் கேட்டான், ‘அதற்குப் பிறகு?’ ‘அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கலாம்; பேரக் குழந்தைகளோடு மகிழ்ச்சியாக இருக்கலாம்என்றார். இளைஞன் விடவில்லை. ‘அதற்கு பிறகும்என்ன என்றான். ‘ஓய்வாக இருக்கலாம்; நிம்மதியாகக் கால்களை நீட்டித் தூங்கலாம்என்றார் பெரியவர். உடனே அந்த இளைஞன், ‘அதைத்தானே... இப்போது செய்துகொண்டு இருக்கிறேன். சென்று வாருங்கள்என்றானாம். ‘எனக்கு நன்றாக வேண்டும். வாயை மூடிக்கொண்டு வந்தவழியைப் பார்த்தபடியே போயிருக்கலாம்என்று புலம்பியபடியே போனாராம், அந்தப் பெரியவர்.


இந்தக் கதையிலிருந்து நமக்குத் தெரிவது என்ன? நம் நாட்டு மக்களுக்கு என்ன குறை... அறிவில் குறையா? இல்லை, ஆற்றலில் குறையா? இல்லவே இல்லை. அப்புறம் என்ன குறை? ஊக்கம் இல்லை என்பது குறை... உழைப்பு போதாது என்பது குறை. வளர்கின்ற நாடுகளில் மட்டுமல்ல, வளர்ந்த நாடுகளிலும் மக்கள் கடுமையாக உழைக்கிறார்கள். உழைப்புக்கு மரியாதை கொடுக்கிறது அந்தச் சமுதாயம். அங்கே பணக்காரர்களும் கடுமையாக உழைக்கிறார்கள். தொழிலதிபர்களும் நேரம் பார்க்காமல் உழைக்கிறார்கள். வளர்ந்த நாடுகளின் வெற்றிக்குக் காரணம் உழைப்புதான். உழைப்பு என்னும் மரத்தின் வேர்கள், கசப்பாக இருக்கலாம்; ஆனால், அதன் கனிகள் இனிப்பானவை. உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும். உங்கள் அன்புச் சகோதரியாகிய நான்... நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் உழைக்கிறேன் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?’’


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top