இந்தியாவுக்கான துணை ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று நடக்கிறது. இதில் வாக்களிக்கும் எம்.பி.க்களின் வாக்குகள் இன்று மாலையே எண்ணப்பட்டு, இரவு 7 மணிக்கு முடிவு அறிவிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் கடந்த மாதம் 17ம் திகதி நடந்து முடிந்தது. இதில் தே.ஜ கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றார். இந்நிலையில், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் வரும் 10ம் திகதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடக்கிறது.
தே.ஜ கூட்டணி வேட்பாளராக மத்திய அமைச்சராக இருந்த வெங்கையா நாயுடு நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்த தேர்தலில் வாக்களிக்க மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் மட்டுமே தகுதியானவர்கள். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் தேர்தலில் சிறப்பு பேனா மூலம் எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர்.
துணை ஜனாதிபதி தேர்தலில் செல்லுபடியான ஓட்டுகளில் 50 சதவீதத்துக்கு மேல் ஒரு வாக்கு கூடுதலாக பெறும் வேட்பாளர் கூட வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். மக்களவையில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளதால், அதன் வேட்பாளர் வெங்கையா நாயுடு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
0 comments:
Post a Comment