குழந்தைகளிடம் பேசும்போது
பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள்!
குழந்தைகளுக்குக் கிடைக்கும் முதல் அனுபவமே தாயோடும் தந்தையோடும் உறவினர்களோடும் பேசுவதுதான். அவர்கள் வளர வளர நாம் உரையாடுவதில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
ஏனென்றால், நமது உரையாடல்களின் வழியேதான் இந்த உலகத்தை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். நாம் பேசுகிறபோது பயன்படுத்தும் 'ஒரு வார்த்தையில்' அவர்களுக்குப் புதிய பார்வை கிடைத்துவிடுவதைப் போல ஒரு சில வார்த்தைகள் அவர்களைக் காயப்படுத்தவும் செய்துவிடும்.
ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடம் சின்னச் சின்ன வாக்கியங்களால் பேச வேண்டும். கடினமான சொற்களைக் கொண்ட வாக்கியங்களைத் தவிர்க்க வேண்டும். அவர்களுக்குப் புரியாத சொற்களைப் பயன்படுத்த வேண்டாம்.
ஐந்து வயதுக்கு மேலுள்ள குழந்தைகளிடம் அவர்கள் புதிய சொற்களைத் தெரிந்துகொள்ளும் விதமாகப் பேசப் பழக வேண்டும். இவை பொதுவானதே. அவர்களிடம் பேசும்போது கெட்ட வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது என்பது நமக்குத் தெரியும். அதே நேரம் இயல்பாகப் புழங்கும் சொற்கள் கூட அவர்களைக் காயப்படுத்திவிடக் கூடும். அவற்றில் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.
அவனைப் போல இல்ல:
பெரியவர்களுக்கே தன்னை மற்றவர்களோடு ஒப்பிடுதல் எரிச்சலைத் தரும். குழந்தைகளுக்கும் அப்படித்தானே இருக்கும். அவனைப் போல / அவளைப் போல மதிப்பெண் எடுக்க வில்லை என்பது போன்ற சொற்களைப் பயன்படுத்த வேண்டாம். அப்படிப் பயன்படுத்தும்போது, யாருடன் ஒப்பிடுகிறீர்களோ அவர் மீது இயல்பாகவே உங்கள் குழந்தைக்கு வெறுப்பு உருவாகிவிடும். இது அவர்களின் வளர்ச்சிக்கு நல்லதல்ல.
லூசு மாதிரி:
இந்த வார்த்தையைப் பல பெற்றோர்கள் அடிக்கடி பயன்படுத்துகிறார்கள். 'என்னடா லூசுமாதிரி பண்ணிட்டு இருக்க?' என்று அதுவும் உறவினர்கள், நண்பர்களின் முன்னிலையில் சொல்கிறார்கள். இது கடுமையான மன உளைச்சலைக் குழந்தைகளுக்குத் தரக்கூடும். பல குழந்தைகளிடம் 'லூசு மாதிரி' என்பதைப் பற்றிக் கேட்கும்போது இதை ஒரு கெட்ட வார்த்தையாகத்தான் அவர்கள் நினைக்கிறார்கள். அதனால் இப்படிக் கூறுபவர்களாக நீங்கள் இருந்தால் தயவுசெய்து மாற்றிக்கொள்ளுங்கள்.
உன்னால முடியாது:
எதிர்மறையான சிந்தனையைத் தரும் சொற்களைக் குழந்தைகளிடம் கூறாமல் இருப்பதே நல்லது. சொல்லும்போது அதற்கான விளைவு தெரியாது. தேர்வு எழுதுகையில் அல்லது ஏதேனும் ஒரு செயலைச் செய்யச் சிரமப்படும்போது நீங்கள் சொன்ன 'உன்னால முடியாது' அவர்களின் காதில் ஒலிக்கும். தாழ்வு மனப்பான்மையை விதைத்துவிடும். எனவே இப்படிக் கூறுவதைக் கைவிடுங்கள்.
அறிவு இல்ல:
இதுவும் கிட்டத்தட்ட 'லூசு' எனச் சொல்வதற்கு இணையானதுதான். பெரும்பாலும் இதைப் பெற்றோர்கள் எப்போது பயன்படுத்துவார்கள் தெரியுமா? குழந்தைகள் ஏதேனும் ஒரு செயலைச் செய்யமுடியாமல் தவிக்கும்போது அல்லது அந்தச் செயலைச் செய்யத் தெரியாமல் தவறாகச் செய்துவிடும்போதுதான். அந்த நேரத்தில் அவர்களுக்குத் தேவையானது சரியான வழிகாட்டல்தான். அதை விடுத்து, 'அறிவு இல்ல' எனச் சொல்வது பிழையானது.
உருப்படாம போய்டுவ:
பெற்றோர் கடும்கோபத்தில் சொல்ற வார்த்தைகள். அவர்களின் நலனை முன்னிட்டே சொல்லவும் செய்யலாம். ஆனால் ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்தால் எவ்வளவு ஆபத்தான, எதிர்மறையான சிந்தனையை விதைக்கும் வார்த்தைகள் என்பதை உணர முடியும்.
பெற்றோரின் ஆசைகளை நிறைவேற்ற, குழந்தைகள் என்ன நீங்கள் வளர்க்கும் மரமா? அவர்களுக்கு என்று உணர்வுகள், லட்சியங்கள் இருக்கும். அவற்றைப் புரிந்துகொள்ளாமல் போன்சாய்த் தாவரங்களைப்போல குழந்தைகளைக் கருதுபவர்களால்தான் இப்படி அவர்களைத் திட்டத்தோன்றும்.
0 comments:
Post a Comment