பொலித்தீன் தடை - கொள்கைத் தீர்மானத்தில்

எந்தவொரு மாற்றமும் இல்லை

- ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன


பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் தடை தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட கொள்கை ரீதியலான  தீர்மானத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
 இந்த தீர்மானத்தை முறையாகவும், விரைவாகவும் அமுல்படுத்துவதற்கான பின்னணியை உருவாக்கும் பொறுப்பு மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு ஒப்படைக்கப்படுவதாகவும் ஜனாதிபதி கூறினார்.
 நேற்று (16) பிற்பகல் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைபெற்ற போதே ஜனாதிபதி இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
 அஸ்பெஸ்டஸ் மற்றும் புகையிலை தடைக்காக அரசாங்கம் செயற்படும் முறையிலேயே சுற்றாடலின் இருப்புக்கு கடுமையான சவாலான பொலித்தீன் தொடர்பிலும் தீர்மானத்துக்கு வருவதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
 நாட்டின் எதிர்காலத்துக்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் என்ற வகையில் அது தொடர்பில் மக்களது மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.
 மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள் ஊடாக அமுல்படுத்தப்பட்டுள்ள செயற்திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், இந்த ஆண்டுக்காக அமைச்சுக்கு கிடைத்துள்ள நிதி ஒதுக்கீட்டை செலவு செய்வது தொடர்பிலும் மீளாய்வு செய்யப்பட்டது.

குறிப்பாக தற்போது நிலவும் வறட்சியினால் மக்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் விவசாய செயற்பாடுகளுக்கான நீர் வழங்கும் செயற்பாடுகள் தொடர்பிலும் ஜனாதிபதி  விபரங்களை கேட்டறிந்தார் நாட்டின் முக்கிய நீர்த்தேக்கங்களிலிருந்து நீரை விடுவிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
 மொரகஹகந்த திட்டத்தின் மூலம் விவசாயத்துக்காக தற்போது நீர் விடுவிக்கப்படுகிறது. அந்த நீர்த்தேக்கத்தில் நீரை சேமித்ததனால் விவசாயிகளுக்கு நீரை வழங்க முடிந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 அனுராதபுரம் நகர பகுதியின் குடிநீர் பிரச்சினை மற்றும் அதற்கான நடவடிக்கை தொடர்பிலும் ஆராயப்பட்டது.
 மொரகஹகந்தகளுகங்கை சுரங்கபாதை நிர்மாணத்தின்போது உமா ஓயா சுரங்க சம்பவத்தை முன்மாதிரியாக கொண்டு உரிய தொழில்நுட்ப மதிப்பீடு மற்றும் தீர்மானங்களுக்கமைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
 மகாவலி அபிவிருத்தி அமைச்சுக்குரிய தற்போது பாவிக்கப்படாத கட்டிடங்கள் தொடர்பில் இதற்கு முன்னர் ஜனாதிபதி அவர்களால் அறிக்கை கோரப்பட்டிருந்தது. அந்த கட்டிடங்களை சுற்றுலா விடுதிகளாக நிர்மாணித்து சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய இடங்களாக மாற்றி வருமானம் ஈட்டும் திட்டத்தை தயாரிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
 தற்போது  கைவிடப்பட்டுள்ள அமைச்சுக்குரிய கட்டிடங்களை அரசாங்கத்தின் ஏனைய நிறுவனங்களுக்கு வழங்கக்கூடிய சாத்தியம் தொடர்பிலும் அவ்வாறில்லாவிட்டால் அவற்றை அகற்றிவிடுதல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
நிர்மாணத்துக்கு தேவையான மணலை பெறுவதிலுள்ள பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், கடல்மணலை பாவிப்பதற்கு மக்களை பழக்கப்படுத்துவதற்காக அரச நிறுவனங்களின் நிர்மாணங்களின் போது கடல் மணலை பாவித்து முன்மாதிரியை வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
 அமைச்சர் மகிந்த அமரவீர, பிரதி அமைச்சர் அனுராத ஜயரத்ன, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனுர திஸாநாயக்க, மகாவலி பணிப்பாளர் நாயகம் கோட்பாய ஜயரத்ன உள்ளிட்ட    மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top