பூர்வீக காணிகளை வனவளத்திணைக்களம்
கையகப்படுத்துவதாக தெரிவித்து
சூடுவெந்தபுலவு பழைய குடிமனை
பள்ளிவாசலுக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்!

வவுனியா சூடுவெந்த புலவு கிராமத்தில் தமது பூர்வீக காணிகளை வனவளத்திணைக்களம் கையகப்படுத்துவதாக தெரிவித்து காணி உரிமையாளர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சூடுவெந்தபுலவு பழைய குடிமனை பள்ளிவாசலுக்கு முன்பாக இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் 1974 ஆம் ஆண்டு முதல் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் தமது கிராமத்தவர்களுக்கு சொந்தமான 428 ஏக்கர் காணியை தற்போது வனவளத்திணைக்களத்தினர் தமது எல்லைக்குட்பட்டதாக தெரிவிப்பதாகவும் அது தொடர்பில் எதுவித சாதகமான பதிவும் எவரும் தமக்கு வழங்கவில்லை எனவும் தெரிவித்திருந்தனர்.

428 பேருக்கு தலா ஒரு ஏக்கர் வீதம் 428 ஏக்கர் காணி தமது வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்ட நிலையில் குறித்த காணிகளுக்குள் தாம் தென்னை போன்ற பயன்தரு மரங்களை வைத்ததாகவும் உழுந்து செய்கை மேற்கொண்டு வந்தாகவும் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த காணிக்கு அப்போது சில ஆவணங்கள் கையளிக்கப்பட்டபோதிலும் அவை 1990 ஆம் ஆண்டு இடப்பெயர்வுடன் தொலைந்துபோன நிலையிலேயே தாம் மீள குடியேறி குறித்த காணிகளை சீர்செய்து பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வரும் நிலையில் வனவளத்திணைக்களம் தமது காணி என தெரிவித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளானர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே, அரசே எமது வருமானத்தை அழித்து சொத்தை அபகரித்து எம்மை அழிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் இதன்பொது தாங்கியிருந்தனர்.

சுமார் 1 மணிநேரமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது கிராம சேவகரிடம் மகஜரொன்றினையும் கையளித்திருந்தனர். இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்தில் உலுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் கிராம சேவகருடன் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top