கோத்தபாய அமெரிக்க குடியுரிமையை
இன்னும் கைவிடவில்லை
தெற்கு ஊடகமொன்று தெரிவிப்பு

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்னும் அமெரிக்க குடியுரிமையை கைவிடவில்லை என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க குடியுரிமையை கைவிட்ட பிரஜைகள் தொடர்பிலான விபரப் பட்டியலில் கோத்தபாயவின் பெயர் இன்னமும் உள்ளடக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஏப்ரல் - ஜூன் மாதங்களில் பூர்த்தியான முதல் அரையாண்டுக்கான பட்டியலில் கோத்தபாயவின் பெயர் உள்ளடக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 30ஆம் திகதி பூர்த்தியான முதல் அரையாண்டு காலப் பகுதிக்கான அறிக்கை இதுவரையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

கோத்தபாயவின் பெயர் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதனை கண்டறிந்ததன் பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் பற்றி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைவர்கள் தீர்மானிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாகவே எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதியின் பின்னர் தமது வேட்பாளரின் பெயரை அறிவிப்பதாக கூறி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்து கொள்வது குறித்து இரண்டு வகையிலான சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொலைபேசி வழியாகவும், நேரடியாகவும் இந்த பரிசோதனை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கோத்தபாயவிற்கு எதிராக சிவில் வழக்குகள் தொடரப்பட்டிருப்பதனால் வழக்கு விசாரணை பூர்த்தியாகும் வரையில் அவரது குடியுரிமை ரத்து செய்யப்படக்கூடிய சாத்தியங்கள் குறைவு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top