கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்!
ரணிலுடனான சந்திப்பை புறக்கணித்தது கூட்டமைப்பு
முஸ்லிம் தரப்பின் யோசனை அடங்கிய மகஜர் அமைச்சரிடம் கையளிப்பு




கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படாமையால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் வஜிர அபேவர்தன ஆகியோருடனான சந்திப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர் எனத் தெரியவருகின்றது.

குறித்த சந்திப்பை நேற்றைய தினம் புறக்கணித்துள்ளனர். அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்ப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியது.

அதற்கு நிபந்தனையாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நிதி அதிகாரம் முழுமையாக வழங்கப்பட்டு கணக்காளர் நியமிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அதற்கு உடன்பட்டு எழுத்துமூலம் உறுதி வழங்கப்பட்டது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் கடந்த திங்கட் கிழமை நடைபெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் எல்லை நிர்ணயம் தொடர்பில் ரவூப் ஹக்கீம் கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

முதலில் கணக்காளர் நியமனம் இடம்பெறட்டும். அதன் பின்னர் எல்லை நிர்ணயம் தொடர்பில் ஆராயலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் தொடர் சந்திப்பு நேற்று வியாழக்கிழமை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஆகியோர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை நேற்றைய சந்திப்புக்கு அழைத்துள்ளனர்.

"வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கணக்காளர் பதவியைப் பொறுப்பேற்கவில்லை. முதலில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்.

அதன் பின்னர் பேசலாம்" என்று அவர்களிடம் தெரிவித்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது .

இதன் பின்னர் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனை உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தொடர்புகொண்டு சந்திப்புக்கு வருமாறு அழைத்துள்ளார்.

மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைத் தொடர்புகொண்டு, நீங்கள் சந்திப்புக்கு வரத்தேவையில்லை. கோடீஸ்வரனை சந்திப்புக்கு அழைத்துள்ளோம் என்று சாரப்பட சுமந்திரனிடம் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனும், வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் சந்திப்பில் கலந்துகொள்ள மாட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அமைச்சருக்குப் பதில் வழங்கியுள்ளார். இதன் காரணமாக நேற்றைய சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் குறித்து முஸ்லிம் தரப்பின் யோசனை நேற்று உள்நாட்டலுவல்கள் அமைச்சர் முன் வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியுதீன், எச்.எம்.எம்.ஹரீஸ், ஏ.எச்.எம்.பெளஸி உட்பட்ட முஸ்லிம் குழுவினர் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளனர். இச்சந்தர்ப்பத்திலேயே முஸ்லிம் தரப்பின் யோசனை அடங்கிய மகஜர் அமைச்சரிடம் கையளிக்கப்பட்ட்தாகவும் தெரிரிவிக்கப்படுகின்றது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top